பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1155

 

     கேதாரம் -1) என்ற தேவாரமும், "இண்டைச்சுருக்கும் தாமம்" (முருகர்
- புரா - 9) என்றதும் காண்க.

     எழுந்தருளிப்போயினார் - மறைந்தருளினார் என்ற பொருள் தரும்
மரபுவழக்கு.

     வண்டுவார்குழல் - அச்சமயம் மணமகளாரின் கூந்தல் அடியில்
அரிந்து எடுக்கப்பட்டமையின், இது குழலுக்கு இயற்கை யடைமொழி
மாத்திரையாய் நின்றது. பின்னர் இவர் கைப்பிடிக்குமுன் திருவருளால்
இப்பூங்கொடியார் புனைந்த மலர்க்குழலினை முன்னிருந்தவாறே
பெறப்போகும் நிலையின் குறிப்புமாம். மணமகளாரை வண்டுவார் குழலாராக
எண்ணினார் என்றலுமாம்.

     கைப்பிடிக்க - மணஞ்செய்ய, 885 பார்க்க. "நற்றவக் கன்னி யார்கை
ஞான சம்பந்தர் செங்கை, பற்றுதற் குரிய பண்பிற் பழுதினற் பொழுது
நண்ண" (திருஞா - புரா - 1236) என்றவிடத்து இதன் முதன்மை
தேற்றப்படுதல் காண்க.

     மணக்கோலம் கண்டவர்கள் கண்களிப்ப - 171 - 172-ம் பிறவும்
பார்க்க.

     கலிக்காமனார் - முன்னர் ஏயாபெருமகன்(881), ஏயர்கோனார் (883),
ஏயர்குலப் பெருமான் (885) என்றும், பின்னரும் ஏயர்குல மன்னவனார் (909)
என்றும் கூறும் ஆசிரியர் இங்கு அவரது பெயராற் கூறுதல் குறிக்கொள்க.
"ஏயருட" என்ற குடிப்பெயரும் காண்க. புகுந்தார் - திருமனையில் என்று
வருவித்துக்கொள்க.

     போயினார் - புகுத்தார் - இறைவர் எழுந்தருளிப் போயினதையும்,
மணமகனார் புகுந்ததையும் இவ்வொரு பாட்டில் நயம்படச் சேர்த்துக் கூறியது
இவ்விரண்டும் ஒரே காலத்தில் உடனிகழ்ந்ததனைக் குறிப்பதற்காம்.

     கைப்பிடிக்கும் - என்பதும் பாடம். 34

900. வந்தணைந்த வேயர்குல மன்னவனார் மற்றந்தச்
சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பாற் கேட்டருளிப்,
புந்தியினின் மிகவுவந்து, புனிதனா ரருள்போற்றிச் சிந்
தைதளர்ந், தருள்செய்த திருவாக்கின் றிரங்கேட்டு,
35
901. மனந்தளரு மிடர்நீங்கி, வானவர்நா யகரருளாற்
புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை
                             மணம்புணர்ந்து,
தனம்பொழிந்து, பெருவதுவை யுலகெலாந் தலைசிறப்ப
வினம்பெருகத் தம்முடைய வெயின்மூதூர்
                               சென்றணைந்தார்.
36

     900. (இ-ள்.) வந்தணைந்த....மன்னவனார் - வந்து சேர்ந்த ஏயர்கோன்
கலிக்காமனார்; மற்று...உவந்து - மனத்தாலும் நினைத்தற்கரியதாகிய அந்தச்
செயலை அங்குக் கூடியிருந்தவர்கள்பாற் கேட்டருளிப் புந்தியில் மிக
மகிழ்ச்சியடைந்து; புனிதனாரருள் போற்றி - இறைவர் செய்த திருவருளினைத்
துதித்து; சிந்தை தளர்ந்து - பின்னர் மனந்தளர்ந்து; அருள்செய்த...கேட்டு -
அருளிச் செய்த திருவாக்கின்றிறத்தினைக் கேட்டு. 35

     901. (இ-ள்.) மனம்...நீங்கி - மனந்தளர்ந்ததனால் உண்டாகிய துன்பம்
நீங்கியவராய்; வானவர்...மணம்புணர்ந்து - தேவதேவருடைய திருவருளினால்
முன்புனைந்திருந்த வண்ணமே மலர்களணிந்த கூந்தலினை வளரப்பெற்ற
பூங்கொடி போன்ற மணமகளாரை மணஞ்செய்து; தனம்...தலைசிறப்ப -
நிதிகளையாவர்க்கும் மிகக் கொடுத்துப் பெருங்கல்யாண மகிழ்ச்சி
உலகெங்கும் ஒங்கிச் சிறக்கச் செய்து; இனம்....சென்றணைந்தார் -
சுற்றத்தார்கூடிப் பெருக நிறையத் தமது மதில் சூழ்ந்த பழவூரினைச் சென்று
சேர்ந்தனர். 36

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.