பக்கம் எண் :


1180 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

ஊட்டியை அரியலுற்றா(ராய்) (918), என்னா - அரியலுற்றார் (ஆகிய அவர் )
- ஆவார் ஒத்தார் (919) என இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிக்க.
அங்கு - திருக்கோயிலுக்கு.

     என்னென்று - என்பதும் பாடம். 15

     918. (வி-ரை.) நல்ல - புழுக்கடி, வாடல், முற்றல், பழுப்பு முதலிய
கேடு இன்றி என்க. மென்கீரை (916) என்றது காண்க. நல்ல - நன்மை
செய்யும் என்று இயற்கை யடைமொழியாகக்கொண் டுரைப்பினுமாம்.

     தூய - மேல், கீரைக்கு நல்ல என்றதற் குரைத்தவாறே, மாவடுவுக்கும்
பொருந்த உரைத்துக்கொள்க. மன்னு பைந்துணர் மாவடு (908) என இதன்
இயற்கையினை முன்னர் உணர்த்தியதனால் இங்கு அதன் தன்மைகள்
பொருந்தக் கொள்க.

     அரிசி - செந்நெல் இன்னமுது (908), தூய செந்நெல் அரிசி (916) என
இதன் இயல்பும் தன்மையும் முன்னரே கூறினாராதலின், முதன்மையாயின
இதனை இங்கு அடைமொழியின்றி அரிசி என வாளா கூறினார்.

     அல்லல்தீர்த்து ஆளவல்லார் - அல்லல் - பிறவித் துன்பமும்
அதற்கேதுவாகிய இருவினைகளும். தீர்த்தல் - நுகர்வித்துக் கழிப்பித்தல்.
அல்லல் தீர்த்து என்றதனாற் பாசநீக்கமும், ஆள என்றதனாற் சிவப்பேறும்
ஆகிய இருபயனும் குறித்தார். வல்லார் என்றது அவ்வன்மை இவர்க்கே
எளிதின் அமைவதென்றும் வேறெவர்க்கும் இன்றென்றும் குறித்தபடியாம்.
"தீரா நோய் தீர்த்தருள வல்லான் றன்னை" (புள்ளிருக்கு வேளூர்) என்ற
திருத்தாண்டகமும், இவ்வாறு வரும் திருவாக்குக்களும் காண்க.
திருத்தொண்டாற் பெறும்பேறு நிறைவுறும் இடமாதலின் இங்கு இவ்வாறு
கூறினார்.

     அமுதுசெய்து (அதற்கு) அருளும் என்க. அமுதுசெய்து என்பது
நியதியாகிய திருத்தொண்டினை ஏற்றுக்கொள்ளுதலையும், அருளும்
அப்பேறு
என்றது அதற்கு இறைவன் அருள்புரிதலினையும் குறிப்பன.
அருளும் அப்பேறு - அருள்செய்யும் அந்த - அருளினைப் பெறுகின்ற
அந்தப்பேறு. அகரம் தேற்றங் குறித்த முன்னறிசுட்டு.

     எல்லையில் தீமையேன் ஆதலின் பெற்றிலேன் என்று
பெற்றிலாமைக்குக் காரணம் கூறியவாறு.

     இங்கு - இவ்விடத்தே. இந்தக் கமரினிடமாக. "போவது அங்கு
இனியேன்?" என்ற முன்பாட்டுக் காண்க. இன்று என்ற பொருளில்
வந்ததென்றலுமாம்.

     ஊட்டி - மிடறு. கழுத்தின் முன்பாகம். அரியலுற்றாராய் - அரியா
நின்றார் - ஒத்தார் - என்று வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. 16

     919. (வி-ரை.) ஆட்கொள்ளும் ஐயர் - மேற்பாட்டில் "ஆளவல்லார்"
என்றதனைத் தொடர்ந்து இவ்வாறு கூறினார். ஆட்கொள்ளும் - ஆளாக
அமைந்து செய்யும் ஏவலை ஏற்றுக்கொள்ளும். "கூடுமே நாயடியேன் செய்குற்
றேவல்" (திருவாரூர்) என்ற திருத்தாண்டகம் முதலியவை காண்க.
ஆட்கொள்ளும் என்றதற்கேற்ப ஐயர் - தலைவர் - என்றார்.

     தாம் - அடியேன் ஊட்டும் பாங்கினன்றித் தாமாகவே உவந்து. இங்கு
- இவ்விடத்து. இந்தக் கமரில்.

     செய்திலர் கொல் - செய்தாரில்லை போலும். கொல் - அசைநிலை.

    அரிசி முதலியன கமரில் சிந்தக் கண்ட தாயனார், இனி இறைவனது
திருமுன் போவதிற் பயனில்லை என்று, போவது அங்கு இனி ஏன்? (917)
என்று எண்ணினார். ஆதலின், ஐயரே! தேவரீர் எங்கும் நிறைந்தவர்; இந்தக்
கமரும் உமது திருமேனியாமாதலின் இப்பொருள்களை இங்கே
அமுதுகொண்டருளல் வேண்டும்; இல்லையேல் நியதி பிழைத்த எனது தலை
வீழ்த்தத் தகுவதாம்" என்று விண்ணப்பித்தனர்.