பக்கம் எண் :


1196 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     அன்னம் மருங்கு உறை - என்பது வாவியின் சிறப்பு. அன்னங்களின்
கூட்டம் வாவியினின்று மேற்கிளம்பும் வெண்மேகம் ஆகவும், புகை - சூல்
கொண்ட மேகம் ஆகவும் உருவகப்படுத்திக் கொள்க.

     கன்னல் அடும்புகை - கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுதலால்
எழும்பும்புகை. கன்னல் இங்கு அதன் சாற்றுக்கு ஆயிற்று ஆகுபெயர்.

     கருப்பாலை - கரும்பு அடுகின்ற ஆலை. கருப்பாலை என்பது மரபு
வழக்கு.

     சூடு பரப்பிய பண்ணைகள் உள்ளன (926); அவற்றின் பக்கம்
வயல்களில் உழத்தியர் உழவு தொழில் பலவும் செய்தனர்; பண்ணைகளின்
பக்கத்தில் மாஞ் சோலைகளும் வாவிகளும் உள்ளன (927); அச்சோலைகளின்
பக்கம் கரும்புப் பயிர் உண்டு; கரும்பு ஆலைகளின் முழக்கமும் புகையும்
அவ்வாவிகளின் பக்கத்தில் மேகங்கள் கூடியன போன்ற தோற்றம்
விளைத்தன (928) என இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து
பொருள்கொள்க. நீர்நிலையின் பக்கம் மேகம் கூடுமியல்பும் குறிக்க. 3

929.



பொங்கிய மாநதி நீடலை யுந்து புனற்சங்கந்
துங்க விலைக்கத லிப்புதன் மீது தொடக்கிப்போய்த்
தங்கிய பாசடை சூழ்கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமு கின்றலை முத்த முதிர்க்குவ பாளையென.



4

     (இ-ள்.) பொங்கிய......... சங்கம் - பெருகிய பெருநதியுன் நீண்ட
அலைப்புனல் உந்திய சங்குகள்; துங்க........தொடக்கிப் போய் - பெரிய
இலைகளையுடைய வாழைப் புதல்களின் மேலே தொடர்ந்து சென்று;
தங்கிய.......தவழ்ந்து - அந்த வாழையின் பசிய இலைகளைச் சுற்றிய
கொடிகளின் வழியே தவழ்ந்து; பைங்கமுகின்தலை - பசிய கமுகின்
உச்சியில்; ஏறி - ஏறிச் சேர்ந்து அங்கு; பாளை என முத்தம் உதிர்க்குவ -
அவற்றின் பாளைகள் பூ உதிர்ப்பனபோல் முத்துக்களைச்சொரிவன.

     (வி-ரை.) அலைப்புனல் உந்துசங்கம் - கதலிப்புதல்மீது
தொடங்கிப்போய் - கொடியூடு தவழ்ந்து - கமுகின்றலை ஏறிப் - பாளை
என முத்தம் உதிர்க்குவ எனத் தொடர்புபடுத்தி வினைமுடியும் பொருளும்
உரைத்துக்கொள்க.

     பொங்கிய மாநதி நீடுஅலை - நதி பெரிது; அது பெருகிற்று;
பெருக்கினால் நீண்ட அலைகள் உண்டாயின; அலைகள் சங்குகளை உந்தின
என்க.

     பொங்குதல் - வெள்ளத்தாற் பெருக்கெடுத்தல். பெருநதியில் வெள்ளம்
வந்தபோது நீர் மேல்உயர்ந்து இருகரையிலும் அருகில் உள்ள பயிர்களை
நீரில் மூழ்கும்படி செய்யும். அப்போது நீரில் மிதந்துவரும் பொருள்கள்
அப்பயிர்கள் - மரங்கள் - முதலியவற்றின் மேலே தங்குவது இயல்பாம்.

     நீடு அலைப்புனல் உந்து சங்கம் "கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன் வந்து கங்குல் வைகித், திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
கீன்றலைக்குந்திருவையாறே" (மேகரா - குறி - 2) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரங் காண்க.

     துங்கம் - பெரிது. "இத்துங்க வேழம்" (590). துங்கஇலை - பெரிய
நீண்ட இலை. வாழைமடல் ஏனை இலைகளிலும் நீண்டு அகன்று
பெருத்திருப்பது குறித்தது.

     கதலிப்புதல் - செறிந்து புதலாக முளைத்த வாழைப்பயிர். ஆற்றின்
கரைகளில் உரமிகுதியாலும், நீர்வளத்தாலும், பறிப்பாரின்மையாலும் வாழைகள்
செழித்து வளருமியல்பு குறித்தது.

     தொடக்கி - தொடர்ந்து. தங்கிய பாசடை - அங்குத் தங்கிய பசிய
இலை. பாசடை - வெற்றிலைக் கொடி என்றலுமாம்.

     சூழ்கொடி ஊடு தவழ்ந்து - வாழைகளின் மேலும் அங்கிருந்து
தொடர்ந்து பக்கத்திலுள்ள கமுகுகளின் மேலும் சூழ்ந்து படர்ந்த
கொடிகளிடையே ஊர்ந்து.