பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1197

 

இவ்வாறு கொடிகள் மரங்களின்மீதுப் படர்வது இயல்பு. வாழைப்பயிரினுடன்
கமுகும் வைத்தலுமுண்டு.

     பைங்கமுகின் தலை ஏறி என்க. தலை - உச்சி. தலை -
ஏழனுருபாகக்கொண்டு கமுகினிடத்து என்றுரைப்பினுமாம். பைங்கமுகு -
பசிய கமுகு. பாளை என முத்தம் உதிர்க்குவ - பாளைகளின் பூக்கள்
முத்துப் போன்றன என்பது உவமம். அதனைமாற்றி முத்துக்கள் பாளைகளின்
பூக்கள்போல உதிர்க்கப்பட்டன என்பது உவமை நயம் மிகுதிபடக் கூறியதாம்.
நிலவளம் நீர்வளமிகுதி குறித்த உவமச் சிறப்பு.

     மேலே நெல்லும் (926), மாவும் (927), கரும்பும் (928) கூறிய ஆசிரியர்,
இப்பாட்டால் வாழையும் கமுகும் கூறும் வைப்புமுறையும் அமைதியும்
அழகும் காண்க. கதலிப்புதலும், பாசடைக்கொடியும், பைங்கமுகும் என
எல்லாம் கூடிய மிக்க பசுமையும் புதுமையுமாகிய இனிய காட்சியின் அழகும்
குறிக்கப்பட்டது.

     இந்நான்கு பாட்டாலும் மேன்மழ நாடெனும் நீர் நாடு (926) என்பதன்
மிக்க மருத நிலச் சிறப்புக் கூறினார். சோலை - பண்ணை - நெல் - மா -
கரும்பு - வாழை - கமுகு இவை மருதநிலக் கருப்பொருள்கள்; உழவு -
தொழில்; உழத்தியர் மள்ளர் - அந்நில மக்கள்; நெல் - கரும்பு - வாழை -
மா - அதன் உணாவகை; என்றிவ்வாறு பலவும் காண அணிபெறக்கோத்த
அமைதி காண்க.

     இனி, மேல்வரும் இரண்டு பாட்டுக்களால் இம்மருதத்தினை அடுத்துத்
திணை மயக்கத்தாற் சேர்ந்துள்ளதும், இந்நாளிலும் காணத்தக்கதாய்
விளங்குவதும், இப்புராண முடைய ஆனாயநாயனாரது சரிதத் தொடர்பும்
உரிமையும் உடையதுமாகிய முல்லையின் சிறப்பும் உடன் கூறுகின்ற
வகையினால் நாட்டுச் சிறப்பினைக் காட்டி அதன் மேல் நகரச்சிறப்பு
உரைத்தல் கண்டுகொள்க.

     உகுப்பன - என்பதும் பாடம். 4

930.



அல்லி மலர்ப்பழ னத்தய னாகிள வானீனும்
ஒல்லை முழுப்பை யுகைப்பி னுழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.



5

     (இ-ள்.) அல்லி.......அயல் - அகவிதழ் நிறைந்த பூக்களையுடைய
வயல்களின் அருகில்; ஓர்பால் - ஒருபக்கத்தில்; முல்லை உடுத்த மருங்கு -
முல்லைப்பகுதி சூழ்ந்த பக்கநிலம்; நாகுஇள ஆன் ஈனும் - மிக்க
இளமையையுடைய பசு ஈன்ற; ஒல்லை.......உழக்கு - உகைத்தலினால்
(முல்லைநிலத்து) மரஞ்செடிகளின் தலையிடத்தை விரைவில் உழக்குகின்ற;
குழக்கன்று - மிக இளையகன்று; கொல்லை.......வளத்தது - கொல்லையில்
உள்ள அழகிய கூட்டமாகிய மான் கன்றுகளுடன் கூடிக் குதித்து ஓடுகின்ற
நிறைந்த வளத்தையுடையது.

     (வி-ரை.)அல்லிமலர் - அல்லி - அகவிதழ். அல்லிப் பூ
எனினுமமையும்.

     பழனத்தயல் ஓர்பால் முல்லை உடுத்த மருங்கு என்று கூட்டுக.
இது மருதமும் முல்லையும் கூடிய நிலப்பகுதி கூறியதாம். இதனை
முல்லையும் மருதமும் மயங்கிய திணைமயக்கம் என்பது தமிழ் இலக்கணமரபு.
திணைமயக்கமாவது ஒருதிணைக்குரிய பொருளும் ஒழுக்கமும் அடுத்த
திணைப்பொருள் ஒழுக்கங்களுடன் விரவிக் கூடி நிகழ்வது என்ப. இவ்வாறு
தமிழிலக்கணம் வகுத்த நானிலப் பகுதிகளும் அவை விரவிய
திணைமயக்கமும் வகுத்து ஆசிரியர் காட்டிய இலக்கிய அமைதியினைத்
திருக்குறிப்புத்தொண்டநாயனார் புராணத்தினுள் (6 - 47) விரிவாகக்
கண்டுகொள்க. இப்பாட்டினும் மேல்வரும் பாட்டினும் கூறிய முல்லையும்
மருதமும் மயங்கிய திணைமயக்க அமைதி அப்புராணத்தினுள் "இயலு
மன்னகர் தோகையு மெதிரெதிர் பயில வயலு முல்லையு மியைவன பலவுள
மருங்கு" (45) என்ற விடத்துக்காண்க.