1) என்ற ஆளுடையநம்பிகள்
தேவாரம் காண்க. இன் - உவமைப்பொருளில்
வந்த ஐந்தனுருபு. யாழ் இன்மொழி என்று கூட்டியுரைத்தலுமாம்.
யாழில்
மொழியில் - யாழிலும், மொழியிலும் என்று உம்மைத்
தொகையாக்கிப் பெண்கள் (வாசிக்கும்) யாழிலும், அதனோடு
பொருந்தப்பாடும் மிடற்றுப்பாட்டிலும் இசை வாழ்வதாம் என்று
உரைகொள்வதுமொன்று. "யாழிலெழு மோசையுட னிருவர்மிடற்
றிசையொன்றி" (திருஞான - புரா - 136), "யாண ரம்பெறிந்தின்னிசை
யோர்ந்தெழீஇப், பாணர் கோமகன் பன்னியும் பாடுமால்" (திருவிளை -
இசை - பட. 33)முதலியவை காண்க. வாழ்தல் -
இனிதாக இடம்
பெற்றமைதல்.
குழலிற்
சுரும்பு வாழ்தலாவது கூந்தலிற்சூடிய மலர்களிடத்துத்
தங்குதல். புதிதின் மலரும் பூக்களைத் தொடுத்தணிதலால் அவை அலரும்
பருவத்தில் அவற்றில் தேனுண் வண்டுகள் தோய்வனவாம். "வம்பலர்
நறுந்தொடையல்வண்டொடுதொடுப்பார்" (திருஞான - புரா - 38) என்றது
காண்க. சூடும் பூவில் வண்டு மொய்த்தல் இன்றும் மதுரையில் அம்மையார்
கோயில் முன்பு திருப்பூமண்டபத்திற் காணத்தக்கது. உத்தம சாதிப்
பெண்களின் கூந்தலின் இயற்கைமணங்கவரச் சுரும்பு அங்கு வாழ்வன
என்ற குறிப்புமாம்.
யாழின்
மொழியில் இசை வாழ்தல்பற்றி இசைவாதுவென்ற
திருவிளையாடலில் பாணபத்திரர் மனைவியாரான விறலியார் முதலியோர்
சரிதங்களையும் குழலிற் சுரும்பு வாழ்தல்பற்றித் தருமிக்குப் பொற்கிழியளித்த
திருவிளையாடலில் சண்பக மாறனது தேவியார் குழலின் வாசம்பற்றிய சரித
முதலியவைகளையும் நினைவு கூர்க.
வாழ்வது
- வாழும் நகரம்; (அது) மதுராபுரி என்பது ஆகும் என்று
முடிக்க.
நகரம்
- 968ல் நாடு கூறி, அதனை அடுத்து ஆறும் மலையும்
கூறியவாறு, இப்பாட்டால் நகரம் கூறினார்.
மதுராபுரி
- மதுரை. மது - அமுதம். குலசேகரபாண்டியன் சிவனது
ஆணையின் வழியே கடம்பவனத்தின் முளைத்தெழுந்த கடவுளைக்கண்டு,
காடெறிந்து நகரங்கண்டபோது சிவபெருமானது சிரத்திற் றரித்த
பிறையினிடத்துள்ள மது (அமுதம்) வைத்தெளித்துச் சுத்தமாக்கிய
காரணத்தால் இப்பெயர் பெற்றது. "பொன்மய மான சடைமதிக் கலையின்
புத்தமு துகுத்தன ரதுபோய்ச், சின்மயமான தம்மடி யடைந்தார்ச் சிவமய
மாக்கிய செயல்போற், றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுவது
மதுர, நன்மயமான தன்மையான் மதுரா நகரெனவுரைத்தனர் நாமம்"
(மதுரை - நக - பட - 42) என்ற திருவிளையாடற் புராணங்காண்க. 4
972.
|
சால்பாயமும்
மைத்தமிழ் தங்கிய வங்கண் மூதூர்
நூல்பாயிடத் தும்முள; நோன்றலை மேதி பாயப்
பால்பாய்முலை தோய்மதுப் பங்கயம் பாய வெங்குஞ்
சேல்பாய்தடத் தும்முள; செய்யுண்மிக் கேறு சங்கம். 5 |
(இ-ள்.)
செய்யுள் மிக்கு ஏறு சங்கம் - செய்யுள்கள் (பாட்டுக்கள்)
சிறந்து அரங்கேறுதற்கிடமாகிய சங்கங்கள்; சால்பாய ... மூதூர் - சால்பினை
ஆகச்செய்கின்ற முத்தமிழும் நிலைபெற்றுத் தங்கிய அழகிய இடமகன்ற
அந்தப் பழைய நகரத்தில்; நூல்பாய் இடத்தும் உள - நூல்கள் பயிலப்படும்
இடங்களிலும் உள்ளன; செய்யுள் மிக்கு ஏறு சங்கம்
- செய்யினுள்
(செய் - வயல்) மிகுந்து ஏறுகின்ற சங்குகள்; நோன்தலை ... தடத்தும்
உள - பெரிய தலைகளையுடைய எருமைகள் பாயா நிற்ப, அவற்றினுடைய
பால் சொரியும் முலைகள் தோயப்பெற்ற தேன் தாமரைகளினின்றும் பாயச்
சேல்மீன்கள் எங்கும் பாய்தற்கிடமாகிய தடாகங்களிலும் உள்ளன.
|