பக்கம் எண் :


1258 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

      (வி-ரை.) சால்பு ஆய் மும்மைத்தமிழ் - சால்பு - நிறைவுடைய
மேன்மை. 871-ல் உரைத்தவை பார்க்க. ஆக - ஆகச்செய்கின்ற. சால்பின்
றன்மையை உயிர்களுக்கு அறிவுறுத்துகின்ற என்க. மும்மைத்தமிழ் -
இயல் - இசை - நாடகம் என்ற மூவகைத்தமிழ். தமிழ்நூல்களுட்
சால்பில்லாதனவும் காணப்படுமன்றே? எனின், அவை அறிவுடையோராற்
கொள்ளப்படாது தள்ளப்படுவனவாதலின் அவற்றினின்றும் வேறு
பிரித்துணர்தற்குச் சால்பாய என்று வரையறுத்துக் கூறினார். தங்கிய
என்ற குறிப்பும் அது. ஏனையவை அங்குத் தங்கா என்றபடி. தங்குதல் -
நிலைபெறுதல். தமிழ் - மொழியினையும், மொழி வல்லோரையும்
உணர்த்திற்று.

     மூதூர் - மதுராபுரியின் பழமை சங்கநூல்களானும் பிறசரிதங்களானும்
விளங்கும். "முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி" என்ற
திருவாலவாய்த் திருத்தாண்டகத்தாலும் பிறவாற்றாலும் அறியப்படுகின்ற
ஆலவாய்ப்பெருமானது பழமை பற்றி இந்நகரின் பழமையும் உடனறியப்படும்.

     செய்யுள் மிக்கு ஏறு சங்கம் - நூல்பாய் இடத்தும் உள -
செய்யுள் நூல்களை ஆராய்ந்து சிறந்ததனை அரங்கில் ஏற்றும் சங்கங்கள்
குறித்தது.

     செய் உள் மிக்கு ஏறு சங்கம் - சேல்பாய் தடத்தும் உள -
என்றது மிக்க சங்குகள் வயல்களில் ஏறுவன; அவை தடாகங்களிலும்
உள்ளன என்றபடியாம். தடாகங்களில் உள்ள சங்குகள் பல ஏறிச்
செய்யினுள் (வயலினுள்) செல்வன என்க.

     நோன்றலை - பெரியதலை. நோன்மை - பெருமை. "உறுநர்த்
தாங்கிய மதனுடை நோன்றாள்" (திருமுருகு).

     மேதி......பாய - மேதிபாய, அதன்பால் பாய்முலை தோயப்பெற்ற
மதுப் பங்கயத்தினின்றும் பாய என்க. பால் பாய்முலை - மிகுதியாகப்
பால் சொரியும் முலை. தோய்பங்கயம் - முலைகள் தோய்ந்த தாமரை
மலரினின். பாய - பாய்தலால், மிகுதியாக ஒழுகுதலால். காரணப்பொருளில்
வந்த வினையெச்சம். மதுப்பங்கயம் - முன்னரே தேன் ஊறி நிறைந்த
தாமரை. அதனோடு மேதிகளின் முலைப்பால் சேர்ந்து வெளிப்பாய,
அதனை உண்ணச் சேல்கள் எங்கும் பாய்ந்தன என்பது. "வருமேனிச்
செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியும், கருமேதி" (8) என்ற
திருநாவுக்கரசர் புராணச் செய்யுட் கருத்தினை இங்கு உன்னுக. மேதி
தடத்தினுட் பாய, அவற்றின் பால்பாய்முலை தேனுடைய தாமரையிற் பாய,
அதனை உண்ணச் சேல் பாய உள்ள தடங்கள் என்று தொடர்ந்து
பொருள்கொள்க. 5

973.



மந்தாநிலம் வந்தசை பந்தரின் மாட முன்றிற்
பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்குஞ்
சந்தார்முலை மேலன; தாழ்குழை வாண்மு கப்பொற்
செந்தாமரை மேலன; நித்திலஞ் சேர்ந்த கோவை.   6

     (இ-ள்.) நித்திலம் சேர்ந்த கோவை - முத்துக்களைச் சேர்த்துக்
கோர்த்த கோவையாகிய மாலை; மந்தாநிலம்......முலைமேலன -
தென்றற்காற்று வந்து மெல்லிதாய் அசைகின்ற மாடங்களின் முற்றத்தில்
பந்து ஆடிய மங்கையரின் செங்கை தாங்கும் சந்தனம் பொருந்திய
முலையின்மேல் உள்ளன. நித்திலம் சேர்ந்தகோவை - முத்துப்போன்ற
வேர்வையின் கோவை; (பந்தாடிய மங்கையர்) தாழ்......செந்தாமரை மேலன -
தாழும் குழையுடைய ஒளிபொருந்திய முகமாகிய அழகிய தாமரையின் மேல்
உள்ளன.

     (வி-ரை.) மந்தா நிலம் - தென்றல். மந்தம் அநிலம் என்பது
மந்தாநிலம் என வந்தது. வடநூன் முடிபு. அநிலம் - காற்று. அசை -
மெல்லிதாக வீசும்.

     மாடமுன்றிலில் பந்தாடிய என்க.