கண்டே னவர்திருப்
பாதங் கண்டறியாதன கண்டேன்" (அப்பர்சுவாமிகள் -
காந்தாரம் - திருவையாறு) என்ற தமிழ்மறையின் உள்ளுறையினைச்,
"சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப், பன்மை யோனிகள் யாவையும் பயில்வன
பணிந்தே" என்று விரித்த திருநாவுக்கரசர் புராண (374) த்தாலும்,
வேதங்களாலும் அறிக. சைவமே எல்லாமாய் நிற்பதென்ற உண்மை "இதுவாகு
மதுவல்ல தெனும் பிணக்க தின்றி, நீதியினா லிவையெல்லா மோரிடத்தே
காண நின்றதியாதொரு சமய மதுசமயம்" (சிவஞானசித்தி - 8 - 13)
என்றதனாலுணர்த்தப்படும்.
உயர்ந்து
மன்ன - இங்கு உலகமெங்கு நிரம்பிய சைவம்
எஞ்ஞான்றும் மன்னியிருத்தல் ஒருதலையாகவே அதனுக்காக முயற்சி
ஒன்றும் வேண்டா என்பாருளராதலின், அந்த ஐயம் நீக்க உயர்ந்து
மன்ன
என்றார். ஏனைச்சமயங்களுக்குத் தாழ்ந்ததாகவாவது,
அவற்றோடொப்பாகவாவது, இராமல், இதுவே எல்லாவற்றினும் உயர்ந்தது
என்று நிலை பெற்றிருக்க என்றபடியாம். "மௌன மோலி யயர்வறச்
சென்னியில் வைத்து ராஜாங்கத்திலமாந்தது வைதிக சைவம் அழகி தந்தோ?",
"சைவமுதலாம் அளவில் சமயம் வகுத்து" என்பனவாதி தாயுமானார்
திருவாக்குக்களும் கருதுக. 45
1013.
(வி-ரை.) நுதலின்கண் விழித்தவர் - கண் -
ஏழனுருபு.
விழியவர் என்பது விழித்தவர் என வந்தது.
நெற்றியில் உள்ள கண்ணை,
உலகமெல்லாம் இருண் மூடியதொரு காலத்தில், அவ்விருளைப் போக்கி
ஒளி தருதற் பொருட்டு விழித்தவர் - திறந்தவர் என்றுரைத்தலுமாம்.
"மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான் மகிழ்ந்தவன்கண்
புதைத்தலுமே வல்லிருளா யெல்லா, வுலகுடன்றான் மூடவிருளோடும்வகை
நெற்றி யொற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர்" (தக்கராகம் -
திருக்கலயநல்லூர் - 4) என்ற ஆளுடையநம்பிகள் தேவாரம் காண்க.
இவ்வாறு ஒரு காலம் நுதற்கண் திறந்து ஒளி தந்தது போலவே உண்மை
தெளிந்து உலகம் உய்தற்பொருட்டு நுணங்கு மெய்ந்நூல்களையும் இறைவர்
அருளினர். அந்நூல்களின் பதம் எங்கும் விளங்க மூர்த்தியார்
அரசு
செய்தளித்தனர் என்ற குறிப்பும் காணத்தக்கது. "மேவியவெந்
நரகத்திலழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுதலானை"
(கொல்லிக் கௌவாணம் - திருக்கானாட்டு முள்ளூர் - 10) என்ற நம்பிகள்
தேவாரத்தினும் "நாயகன்கண் நயப்பால் நாயகி புதைப்ப வெங்கும்,
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித், தூயநேத் திரத்தி னாலே
சுடரொளி கொடுத்த பண்பிற், றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத்
தேச தென்னார்" (1 - 52) என்ற சிவஞானசித்தியாரினும் உள்ள கருத்துக்கள்
ஈண்டுச் சிந்திக்கத்தக்கன.
மற்றொருகாலம்
மன்மதனை எரிக்க நுதலின் கண்ணை
விழித்தனராதலின், அதற்கிணங்கக் காமக்குரோத முதலியவற்றாலுண்டாகும்
பவங்கள்மாற உதவும் சிவசாதனங்களை உதவினர்
என்ற குறிப்பும்
காணத்தக்கது.
நுணங்கு
நூல் - நுண்ணியனவாகிய உண்மைப் பொருள்களை
விளக்கும் வேத சிவாகமமாதி சித்தாந்த நூல்கள். நூலின்
பதம் -
அவற்றால் உணர்த்தப்படும் சிவநெறி. பவங்கள்
- பாவங்களின் வழித்தாய்
வரும் பிறவியும் அதனைப் பின்பற்றி வரும் துன்பங்களும். உயிர் - கொண்ட
என்ற அடைகளின் பொருத்தமுங் காண்க.
உதவும்
- சாதனமாய் நிற்கும். விளங்கவும் - மாறவும் - உதவும்
என்க. உதவும் மும்மை என்க. விழித்தவர்
உதவும் என்று சுட்டியுரைப்பினு
மமையும்..
முதல்
- முத்தி சாதனங்களில் முதன்மைபெற்ற.
முதல்
மும்மையினால் உலகாண்டவர் மூர்த்தியார்தாம் -
இப்பாட்டினால் "மும்மையா லுலகாண்ட மூர்த்தி" என்ற முதநூற் றொடரை
விரித்துணர்த்தயபடி கண்டுகொள்க. 46
|