1014.
|
ஏலங்கமழ்
கோதையர் தந்திற மென்று நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் றெவ்வுடன் வென்று நீக்கி
ஞாலந்தனி நேமி நடாத்தி நலங்கொ ளூழிக்
காலம்முயிர் கட்கிட ரான கடிந்து காத்து, |
47 |
|
|
|
1015. |
பாதம்பர
மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை யிவ்வுல காண்டு தொண்டின்
பேதம்புரி யாவருட் பேரர சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணின ரண்ண லாரே. |
48 |
1014.
(இ-ள்.) வெளிப்படை.
மயிர்ச்சாந்து மணம் வீசுகின்ற
கூந்தலினை உடைய பெண்களின் தொடர்பினை என்றைக்கும் நீங்கிய
துறவொழுக்கமாகிய சீலத்தினை மேற்கொண்டவராய், வெவ்விய
ஐம்புலவின்பங்களைப் பகைவர்களுடனே வென்று நீக்கி, உலகினைத் தனி
ஆணையினால் ஆட்சி செலுத்தி நன்மை கொள்ளும் ஊழிக்காலம்
உயிர்களுக்கு வரும் இடர்கள் வாராமே காத்து, 47
1015.
(இ-ள்.) வெளிப்படை. தமது பாதங்களை வேற்றரசர்கள்
சூழ்ந்து
பணிந்துபோற்றக், கெடுதிகள் பீடிக்காதவகையால் இவ்வுலகினை அரசாண்டு
திருத்தொண்டினின்றும் விலகாத அருட்பேரரசும் ஆளப்பெற்று, இறைவனாரது
கழலணிந்த திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தனர். 48
இந்த
இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
1014.
(வி-ரை.) ஏலம் கமழ்......சீலம் -
துறவுநிலை. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் துறவொழுக்கம் பூண்டாரிருவர். அவர்களாவார், அப்பர்
சுவாமிகளும் மூர்த்தி நாயனாருமாம். "மூர்த்தியா ரப்பர் நல்ல துறவறம்" (37)
என்பது திருத்தொண்டர் புராண வரலாறு. உலக நலம் எதனையும்
விரும்பாமலே அரசாட்சியினை ஏற்றது போலவே, எவ்வித உலகப்
பற்றுமின்றி அவ்வரசாட்சியினை மூர்த்தியார் செலுத்தினர் என்பது
இப்பாட்டால் அறிவிக்கப்பட்டது. இந்நாளிலோ எனின், அரசாட்சியின் எந்தப்
பயனுமற்றதொரு சிறு பகுதியேயாயினும் அதனை மக்கள் விரும்பி அதனை
அடைவதன் பொருட்டுப் பெரும்போரும், பெரும்பொருட் செலவும்,
தகுதியற்ற பல செயல்களும் செய்து, "பொய்ம்மையே பெருக்கிப்
பொழுதினைச் சுருக்கும்" புல்லறிவாண்மை பெருகிவரக் காண்கிறோம். ஒரு
சிறு அரசாங்க பதவிதானும் மக்களைச் சுயநலத்தில் அழுத்திப் பற்பல
தாழ்வுகளிற் புகுத்துவது எளிதில் இசைவதாகின்றது. இதனைப் பல
துறையினும் அறிந்த அமைச்சர் பெருமானாகிய ஆசிரியர், உண்மை
நாயன்மார்களாகிய எந்தம்பெருமக்களது உயர்வையும் அருமையினையும்
எடுத்துக் காட்டுவாராய் இங்கு மூர்த்தியாரது முழுத் துறவொழுக்கத்தினை
விதந்து எடுத்து விரித்தனர். இவ்வரசாட்சியினையும் மூர்த்தியார்
விரும்பினாரல்லர். அவர் விரும்பியது "வன்மைக்கொடும் பாதகன் மாய்ந்திட,
நன்மை அரசன் இப்புவிதாங்க வேண்டு" மென்பதொன்றுதான். பின்னர்,
இறைவன் "நீயே அரசு கைக்கொண்டு முன்புள்ள துன்பநீங்கக் காத்துப் பணி
செய்து எம்முலகடைக" என்றருளியதனால் அருளிதுவாகில் வையந்தாங்குவன்"
என்றதுவே அவர்தம் மனநிலை (1000).
வெம்புலன்
- "ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள" என்றபடி ஐந்து
புலங்களினின்பங்களும் ஒருங்கே துய்க்கப்படும் மகளிர் இன்பத்தை
நீக்கியதேயன்றிக், கண் செவி முதலிய தனிப்புலனின்பங்களையும் மூர்த்தியார்
விழையாது
|