பக்கம் எண் :


1304 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

நீக்கினர் என்பார், வெம்புலன் - வென்று - நீக்கி என்றார். ஒவ்வொரு
புலனின்பமே மக்களை மயக்கிக் கேடுகளில் ஈர்த்துத் தள்ளவல்லதென்பது
பெரியோர் கண்ட உண்மையும் அனுபவமுமாம். "மாற நின்றென்னை
மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து" - (திருவாசகம்).

     புலனை வெல்லுதலாவது புலனின்பத்தைப் பற்றிக்கொண்டு அவற்றின்
பின்தாம் செல்லாமல் தம்மைப் பின்பற்றி அவை நிற்குமாறு செய்தல்.
"தம்மையைந்து புலனும்பின் செல்லுந் தகையார்" (சண்டீசர் - புரா - 2).
இதற்குப் புலன்களை அடக்குதல் என்று பொருள் கொள்வாருமுண்டு. அது
பொருளன்றெனத் திருமூலர் மிக உருசிபட உரைத்தருளினர். "அஞ்சு மடக்கி
னசேதன மாமென்றிட், டஞ்சு மடக்கா வறிவறிந் தேனே" (திருமந்திரம் -
ஐந்திந்திரிய மடக்குமுறைமை 7 - 330).

     வெம்புலன் தெவ்வுடன் - தெவ் - பகை. அரனடியாரை வன்மை
செய்து மூர்த்தியாரையும் அந்தம் இலவாம் மிறை செய்வித்த
அமண்கையர்களது பகைமை. அவர்களைச் சார்ந்த வடுகக்கருநாட மன்னன்
இறந்து பட்டானெனினும், அவனை அவ்வாறு செய்யும்படி தூண்டிச்
சைவத்துக்குப் பகைமை பூண்ட சமண்கையர்களது சார்பு அந்நாட்டில்
இருந்தது. ஆதலின் அத்தகைய பகைகள் சைவமக்களைத் தாக்காமல்
வென்று நீக்கினார். இது, அவ்வவர்களை அவரவர்க்குரிய அளவில் அமைந்து
நிற்கச் செய்தலினாலும், வன்மை புரிவோரைத் தண்டித்தும் நாடு கடத்தியும்
முறை செய்தலினாலும், அவர்களுட் பொய்விட்டு உண்மைச் சைவத்தினைச்
சார வருவோரை உடன் தழுவிச் சைவராக்கி உயர்த்தியும் பிறவாறும் ஆணை
புரிதலினாலும் ஆம். தண்டியடிகள் புராணமும் திருஞான சம்பந்த நாயனார்
புராணமும் பார்க்க.

     தெவ்வுடன் வென்றுநீக்கி - மூர்த்தியார் அரசு பூண்டது
புறப்பகையாய்ச் சைவத்துக்கு நேர்ந்த இப்பகையை நீக்குதல் கருதியதாதலின்
இவ்வாறு எடுத்துக் கூறியதுமன்றி, உடன் என்ற உருபினைத் தெவ்
என்றதனோடு புணர்த்தியோதினார். இது புறப்பகை வெல்லுதல் குறித்தது.
பரமன்னரை வென்றது வரும்பாட்டிற் காண்க.

     வெம்புலன் வென்று - என்றது உட்பகை வெல்லுதல் குறித்தது.
இதனால் "மேன்மை மன்னரைப் புவிசார்வதென்று?" (985) எனக்
கவன்றாராதலின் அப்பண்பு பொருந்த நடத்துவித்த திறம் கூறியபடி.

     இந்நாளின் அரசாட்சியின் குறிக்கோள் உடல் - உடைமைகளின்
புறக்காவலுடன் நின்று விடுகின்றது. அது உயர்ந்த இலக்கியமாகாது.
புலப்பகையாகிய உட்பகையினின்றும் உயிர்களைக் காக்கவேண்டுவது
அரசாட்சியின் பெருநோக்கமாதல் வேண்டுமென்பதாம். இவ்வாறு அன்பினாற்
செய்யப்பட்ட இது தற்பயன் குறியாது பலகாலம் சிவனை நினைந்து அவனது
சீர்பரவச் செலுத்தியபோது அருளாக உருப்படும். படவே, அது
சிவபுண்ணியமாகிய அவனருளைத் தேடித்தரும் என்பது.

     ஞாலம் தனி நேமி நடாத்தி - உட்பகை புறப்பகையுடன் வென்று
நீக்கி விட்டாராதலின் உலகத்தைத் தம்முடைய தனிக்காவல் பெற முறை
செலுத்தினார் என்பதாம். தனி நடாத்துதல் - வேறொருவரும் இதனிற்
பங்கிடாதபடி தாமே செலுத்துதல்.

     நேமி - அரசாணையைச் சக்கரமாக உருவகம்செய்து கூறுதல் மரபு.

     ஊழிக்காலம் - நீண்டகாலம் என்ற பொருளில் வந்தது. இங்குக்
காலத்தின் அளவு ஒருவரது வாழ்நாளின் அளவாகக் குறுகியிருப்பினும்,
அதன் பயன் நீடுழியிருப்பதென்பதும் குறிப்பு.

     உயிர்கட்கு இடரான காத்து - தம்கீழ் வாழும் எல்லா வுயிர்களுக்கும்
வரும் எவ்விதத் துன்பங்களும் வாராமற் காத்து. இது அரசாங்கத்தின் முக்கிய
கடமை.