பக்கம் எண் :


மூர்த்திநாயனார்புராணம்1305

 

"மாநிலங்கா வலனாவான்" (121), "நினது சிலைக்கீழ்த் தங்கி யினிதுண்டு
தீங்கின்றி யிருந்தோம்" (695) என்ற விடங்களில் உரைத்தவை பார்க்க.
இக் கருத்துப் பற்றியே கழறிற்றறிவார் நாயனார் அரசாட்சியை ஏற்பதன்
முன்பு இறைவனிடம், "யாரும் யாவும் கழறினவும் அறியும் உணர்வும்",
பிறவும் வேண்டிப் பெற்றனர் என்ற (கழறிற் - புரா - 14) வரலாறும் சிந்திக்க.

     நீறு - மனத்தூய்மைக்கும், உருத்திராக்கம் கண்ணோட்டத்துக்கும்,
சடைமுடி அபேதத்துக்கும் அறிகுறியாவன என்றும், இவ்வியல்புகளின்றி
வெறும் வேடத்துக்காக இவற்றைத் தரிப்பதிற் பயனில்லை என்றும், மூர்த்தி
நாயனார் புறவேடத்தின் வழி அகத்திலும் ஒழுகினார் என்றும் இம்மூன்றும்
சீவகாருண்ணியத்திற்கு அறிகுறிகள் என்றும் இங்கு விசேடவுரை காண்பாரு
முண்டு.

     மூர்த்தியார், இவற்றைச் சிவபெருமானது அருளடையாளங்களாகக்
கொண்டு தாங்கினாரேயன்றித் தாம் உயிர்களின்மேல்வைத்த கருணைக்
கறிகுறியாகத் தாங்கினாரல்லர். "வயங்கு நீறு", "ஐயன் அடையாளம்," "தாங்கும்
மொய்புன்சடை" (1008) என்றவை காண்க. பொது நோக்காக உலகியலில்
உயிர்கள் மேற் செல்வதும், சீவகாருண்யம் என்ற பெயரால் சமணர் புத்தர்
முதலாயினோர்களது அறவுரைகளிற் காணப்படுவதுமாகிய கொள்கை வேறு.
அது பசு புண்ணியத்தின்பாற்படும். அதனினும் பெரிதாய் இங்கு மூர்த்தியார்
தாங்கிய நிலை வேறு. "அமண் குண்டரிற்போது போக்கும், வன்மைக்கொடும்
பாதகன் மாய்ந்திட" (985) என்றும், "முந்தைச் செயலாம் அமண்போய்" (1006)
என்றும், "கலகஞ்செய் அமண்முத லாயின கட்டு நீங்கி" (1012) என்றும்
கூறியவாற்றால் மூர்த்தியாரின் திருவுள்ளநிலை விளங்கும். அவர் உலகாளக்
கைக்கொண்ட நீறு கண்டிகை சடை என்ற மூன்றும் "ஆழ்க தீயது; எல்லாம்
அரன் நாமமே சூழ்க; வையகமும் துயர் தீர்கவே" என்ற தேவாரத்
திருவாக்காலும், "ஆழ்கதீய தென்றோதிற்; றயனெறி, வீழ்கவென்றது;
வேறெல்லா மரன்பெயர் சூழ்க வென்றது; தொல்லுயிர் யாவையும், வாழி
யஞ்செழுத் தோதி வளர்கவே"
என ஆசிரியர் சேக்கிழார் பெருமான்
அதற்கு வகுத்த பேருரையாலும் அறியப்படுகின்றபடி உலகம் சிவநெறியிற்
செழித்தோங்கும் கருத்தையே விளக்குவனவன்றிச் சாமானியமாய்
அறியப்படுகின்ற சீவகாருண்ணியம் என்ற மட்டில் அமைந்துபடுவன அல்ல.
இது எல்லா வுயிர்களையும் சிவனது பெருநெறியில் வாழவைப்பதும்,
அல்லாதவற்றைநீக்குவதும் ஆகிய சிறப்பாகிய சிவபுண்ணிய மென்னும்
பேரருட்டிறம். "தெவ்வுடன் வென்று" என்றதும் காண்க. சிவன
தடையாளங்களாகிய நீறு கண்டிகை சடை என்ற சாதனங்களை வெறும்
வேடத்திற்காகப் புனைந்தாலும், விருப்பமின்றி உண்ணினும் பயன்றரும்
மருந்துபோல, அவை அம்மட்டிற் பயன் தந்தேவிடும் என்பது நூற்றுணிபாம்.
அன்றியும் அத்திருவேடத்தைக் கண்டு ஈடுபடுவார்க்கு அவை பயன்தருதல்
ஒருதலையாம். 47

     1015. (வி-ரை.) பரமன்னவர் - வேற்றரசர். வென்றனர் என்பது
மேற்பாட்டில் கூறினாராதலின், அவ்வாறு வெல்லப்பட்ட பரமன்னரும்,
வெல்லப்படாமல் தாமே இவரது நீதியும் ஆணை வலிமையும் கண்டு வந்து
சாரும் மன்னரும் வந்து பாதம் பணிந்து போற்றினர் என்க.
திருவாதவூரடிகளது அமைச்சுத்திறத்தினை நயந்து பலதேய மன்னர்களும்
தாமே வந்து பணிந்து நட்புரிமை கொண்டு நடந்தனர் என்ற செய்தியை
நினைவுகூர்க.

     ஏதம்........ஆண்டு - "தெவ்வுடன் வென்று - பரமன்னவர் பணிந்து
போற்ற" என்றவாற்றால் புறப்பகையால் வரும் ஏதம் பிணியாவகையிலும்,
"வெம்புலன்" (1014) என்றதனால் அகப்பகையால் வரும் ஏதம்
பிணியாவகையிலும் உலகாண்டனர் என்க.