அடைத்தனன். அவர்
சிந்தை நொந்து "இக்கொடும்பாதகன் மாய்ந்திடத்
திருநீற்று நன்னெறியைத் தாங்கும் மன்னவனை இந்நாடு பெறுவதென்றோ?"
என்று எண்ணினார். அன்று பகல் முழுதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது
வருந்தி மனந்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தனர். "இன்று
இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனைத் தேய்க்கும்
இந்தக் கையினுக்கு முட்டில்லை" என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது
செழு முழங்கையைத் தேய்த்தனர். இரத்தம் பெருகிற்று. தோலும் தசையும்
நரம்பும் எலும்பும் தேய்ந்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது. "ஐயனே!
அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே! உன்னை அலைத்தவன்
ஆண்ட நாடுமுற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி
உலகத்தைக் காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக!" என்று
அன்றிரவே இறைவரது அசரீரியாகிய திருவாக்கு எழுந்தது. அதனை
மூர்த்தியார் கேட்டனர். கையினது ஊறும் நீங்கி முன்போல அழகும்
வண்ணமும் நிரம்பின. சிவமணங்கமழும் ஒளி பெற்ற திருமேனியுடன்
விளங்கினர் மூர்த்தியார்.
அந்த
நாளிரவே அடியாரை அலைத்த அந்தக் கொடிய மன்னவன்
இறந்து விரைந்து போய் எரிவாய் நரகில் வீழ்ந்தனன். அவன் மனைவியரும்
சுற்றத்தாரும் ஏங்கினர். அமைச்சர் கூடி அவனுக்குரிய முறைப்படி
ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை.
கூழும் குடியும் பிற எல்லாவளனும் உடையதாயினும் அரசனது
காவலில்லாவிடின் நாடு நல்வாழ்வில் வாழமுடியாதென்று அமைச்சர்
கவன்றனர். யானையைக் கண்கட்டி விட்டால் அதனால் ஏந்திவரப்பட்டவரை
அரசராகக் கொள்ளத்தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.
அன்றிரவில்
நிகழ்ந்தவற்றைக் கண்ட மூர்த்தியார் "எம்பெருமான்
அருள் இதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன்" என்று கொண்டு,
உள்ளத்தளர்ச்சி நீங்கித் திருவாலவாய்த் திருக்கோயிலின் புறத்து வந்து
நின்றனர். யானை அங்குச் சென்று மூர்த்தியாரைத் தாழ்ந்து எடுத்துப்
பிடரிமேற் றரித்துக்கொண்டது. அதுகண்ட நகரமாந்தர்கள் வாழ்த்தி
மங்கலஇயங்கள் முழக்கினர். மூர்த்தியாரை யானையினின்றும் இறக்கி
முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடி சூட்டுதற்குரிய சடங்குகள்
செய்யலாயினர். "சமண்போய்ச் சைவம் ஓங்குமாகில் நான் அரசாட்சியினை
ஏற்றுப் புவி ஆள்வேன்; முடிசூட்டுதற்குரிய சடங்குக்குத் திருநீறே
அபிடேகமாக, உருத்திராக்க மணியே அணிகலனாக, சடைமுடியே முடியாக
இருக்கக்கடவன" என்று மூர்த்தியார் அருளினர். அதுகேட்ட அமைச்சரும்
உண்மைநூலறிவோரும் நன்றுஎன்று பணிந்துகொண்டிசைந்து அவ்வாறே
உரிய சடங்குகளை எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கலஓசைகளும்
மறை முழக்கமும் வாழ்த்தொலியும் மல்க நாட்டின் அரசராக முடிசூடினர்.
முடிசூட்டு
மண்டபத்தினின்றும் மூர்த்தியார் திருவாலவாய்த்
திருகோயிலுக்குச் சென்று தாழ்ந்து அங்கு நின்றும் யானைமீதேறி நகர
வீதியில் அரசுலாப் போந்து அரண்மனை வாயில் சேர்ந்து அரசமண்டபத்தில்
சிங்காசனத்தில் அரசு வீற்றிருந்தனர். அவரது குறிப்பில் அமைச்சர்கள்
ஒழுகினர். சமண்கட்டு நீங்கித் திருநீற்று நெறி நீடுவாழவும், உலகெங்கு
நிரம்பிய சைவம் உயர்ந்து மன்னவும் சிவாகமங்களின் பதம் விளங்கப்
பவங்கள் மாற உதவுகின்ற திருநீறும் கண்டிகையும் வேணியும்
என்ற
மும்மையினால் உலகாண்டனர் மூர்த்தியார்.
|