பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1329

 

     ஓவா நாவின் உணர்வினார் - நாவானுரைத்தலும் மனஉணர்ச்சியிற்
கணித்தலும் என்கின்ற இரண்டு வகையானும் சீபஞ்சாக்கரத்தை எப்போதும்
பயின்று வத்துள்ளார் என்க. பூத்திருப்பணி செய்வோர் வாய்கட்டிப்
பணிசெய்யவேண்டும் நியதியுடையாராதலின் வாக்கினால் மந்திரம் ஓதிப்
பணிசெய்தல் இயலாதென்பது முன் உரைக்கப்பட்டது. 559-ம் "அன்பு நாரா
வஞ்செழுத்து நெஞ்சுதொடுக்க வலர்தொடுத்தே" (ஏயர் - புரா-226) என்றதும்
பிறவும் பார்க்க. 10

1027.




தள்ளு முறைமை யொழிந்திடவித் தகுதி யொழுகுமறை
                                   யவர்தாந்,
தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன் வள்ளத்தில்
அள்ளி யகில மீன்றளித்த உம்மை முலைப்பா லுடனுண்ட
பிள்ளை யார்க்கு நண்பருமாம் பெருமை யுடையா ராயினார்.
11

     (இ-ள்.) வெளிப்படை. நூல்களால் விலக்கப்பட்டவை நீங்க, இவ்வாறு
தக்க நல்லொழுக்கத்தில் வாழும் திருமறையோராகிய முருகனார், தெள்ளும்
மறைகளில் முதலாக எடுத்துக்கூறப்பட்ட சிவஞானத்தைச் செம்பொற்
கிண்ணத்தில் அள்ளி எடுத்து எல்லா உலகங்களையும் பெற்றுக்காக்கின்ற
அம்மையாரது திருமுலைப்பாலுடன் உண்டருளிய ஆளுடையபிள்ளையாருக்கு
நண்பருமாகின்ற பெருமையினை உடையாராயினார்.

     (வி-ரை.) தள்ளும் முறைமை ஒழிந்திட - தள்ளும் முறைமை -
அறநூல்களாலும் அறிவோராலும் விலக்கப்பட்ட தகைமையுடைய
செயலொழுக்கங்கள். முறைமை - முறைமையின் வரும் செயல்களைக்
குறித்தது. ஆகுபெயர். ஒழிந்திட - நீங்க - போக. அவரது முயற்சியின்றியே
அத்தீயவை அவர்பாலணுகாது தாமே ஒதுங்கின என்று குறிக்க ஒழித்திட
என்னாது ஒழிந்திட என்றார்.

     இத்தகுதி - முன் 1022 முதல் 1026 வரை கூறிய இந்தச்சரியை கிரியை
முதலாகிய தவநெறி வாழ்வு. இ - அண்மைச்சுட்டு. இப்போது கூறிய இந்த
என்க.

     தெள்ளும் மறைகள் - உலகுக்கு உண்மை தெளிவிக்கும் வேதங்கள்.
தெள்ளும் - தெளிவிக்கும். இவை வேதமுடிவு, வேதசிரசு, வேதமுதல்,
உபநிடதம் என்று பலவாறும் உபசரித்துக் கூறப்படுவன.

     முதலான ஞானம்- சிவஞானம். மறைகளில் முதலாவதாக - சிறந்த
முடிவாக - எடுத்துச் சொல்லப்படும் ஞானம். " தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற்செறிவு" (சிறுத் - புரா - 4 ) என்றது காண்க.

     மறைகள் முதலான ஞானம் - மறைகள் முதலானவும் சிவஞானமும்
என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பினும் அமையும். ஞானம் என்றது
அபரஞானங்களாகிய கலைஞானங்களும், உணர்வரிய மெய்ஞ்ஞானமாகிய
பரஞானமுமாம். "வாரிணங்கு திருமுலைபொன் வள்ளத்துக் கறந்தருளி" (67),
"எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி" (68) என்ற
திருஞானசம்பந்த நாயனார் புராண வரலாறுகள் காண்க.

     ஞானம்....பிள்ளையார் - அவர்தம் புராணம் 61-68 பாட்டுக்களிற்
கூறும் சரித வரலாறு பார்க்க. அவ்வாறு உண்டமையால்
மெய்ஞ்ஞானமுணர்ந்து "தாவில் தனிச் சிவஞான சம்பந்த ராயினார்" (69)
என்றதும் காண்க.

     ஞானம் - அள்ளி - முலைப்பாலுடன் - பொன்வள்ளத்தில் - உண்ட -
பிள்ளையார்.

     அகிலம் ஈன்று அளித்த அம்மை - உலகங்களுக்கெல்லாம் தாயாகிய
உமையம்மையார்.