பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1331

 

     நாளும் என்பதனை, வழுவாமே - பயின்றே - பணிந்து - பரவினார்
என்ற ஒவ்வொன்றுடனும் தனித்தனி கூட்டுக. நாளும் - ஒவ்வொரு நாளும்.
பூசை செய்தல் - ஐந்தெழுத்துப் பயிலுதல் - பணிதல் - பரவுதல் - என்ற
ஒவ்வோர் தனிச்செய்கைகளை ஒவ்வோர் வினைச்சொற்களால் நிகழ்த்தி
முடிபு செய்தல் குறிக்க. இவை தனிச்செயல்களாயினும் பூசைக்குரிய
அங்கங்களாகப் பொருந்திப் பரவுதல் என்னும் வினையுடன் முடிதலின்
இவற்றை வினையெச்சங்களாக்கிப் பரவினார் என்ற வினைமுற்றுடன் கூட்டி
முடித்த நயமும் காண்க. இவை பூசைக்கு அங்கங்களாகிய தனிச்செயல்கள்
என்பது "பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்" (253) என்ற விடத்து
அறிவித்திருத்தலும் காண்க. பூசையின் போதும் பூசை முடிவிலும்
திருவஞ்செழுத்துப் பயிலத்தக்கதென்பதனை "நீடு பூசனை நிரம்பியு
மன்பினானிரம்பார், மாடு சூழ்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித்,
தேடுமாமறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி, நாடு மஞ்செழுத் துணர்வுற
விருந்துமுன் னவின்றார்" (10) என்ற திருநீலநக்க நாயனார் புராணத்தாலும்
அறிக. இங்குக் கூறாத ஏனை அங்கங்களும் அங்கு விரிக்கப்படுதலும்
காண்க.

     பன்னும் பெருமை - வேதாகமங்களால் எடுத்துச் சொல்லப்பட்ட
பெருமை பன்னும் - கணித்தற்குரிய என்றலுமாம்.

    அஞ்செழுத்துப் பயிலுதல் - மனத்தின் செய்கையும், பரவுதல்
வாக்கின் செய்கையும், பணிதல் காயத்தின் செய்கையுமாதலும் காண்க.

     பயின்று என்றது இடைவிடாது கணித்தல் குறித்தது. 1026 பார்க்க.

     சில பிரதிகளில் இப்பாட்டு 11-வதாகவும் 11-வது பாட்டு 12-வதாகவும்
உள்ளன.

     அறியாமல் - என்பது பாடம்                12

1029.




அங்க ணமருந் திருமுருக ரழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த பூசை யதனாற் புக்கருளிச்
செங்க ணடலே றுடையவர் தாஞ் சிறந்த வருளின்
                                    பொருளளிக்கத்
தங்கள் பெருமா னடிநீழற் றலையாம் நிலைமை சார்வுற்றார். 13

     (இ-ள்.) வெளிப்படை. அவ்விடத்து அமர்கின்ற திருமுருகனார்,
அழகிய புகலியில் வந்த ஆளுடையபிள்ளையாருடைய சிவம் பொங்கும்
திருமணத்தில் முன்செய்த பூசையின் பயனாலே புகுந்தருளிச்,
செங்கண்ணுடைய வலிய இடபத்தையுடைய சிவபெருமான் சிறந்த அருளாகிய
இனிய பொருளை அளிக்கத், தம் பெருமானாரது திருவடிநீழலின்
கண்ணதாகிய நிலைபெற்ற தன்மையைச் சார்வுற்றனர்.

     (வி-ரை.) அங்கண் - அவ்விடத்து - புகலூரில். அங்கண் -
அதன்கண் அஃதாவது பூசையின்கண் என்று உரைப்பினு மமையும்.
அங்கண்மை- அன்புடைமை என்ற உட்குறிப்பும் காணப்படும்.

     அமரும் - விரும்பியிருக்கும். பூத்திருப்பணியிலும், பூசையிலும்
ஆளுடையபிள்ளையாரது நண்பினிலும் விரும்பி ஒழுகும். "பரிந்துள்ளார்"
(1026), "நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள" (1028) என்றவை காண்க.

     அழகார் புகலி - புகலி - சீகாழி. புகலியின் அழகுச் சிறப்புக்களை
ஆளுடைய பிள்ளையாரது திருப்பதிகங்களாலும், அவர்தம் புராணம் 2-9
பாட்டுக்களாலும், பிறாண்டும் கண்டுகொள்க.

     பொங்குமணம் - சிவம்பெருக்கும் பிள்ளையாரது சிவம் பெருக்கும்
திருமணம். பொங்குதல் - மேன்மேல் வளர்தல். திருமணத்தில் வந்த
எல்லாரும் சோதிவாயிலினுள்ளே