பக்கம் எண் :


1344 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

(தியானிப்பவன்) என்று நாராயணனையும், "த்யேயன்" (தியானிக்கப்படுபவன்)
என்று சிவனையும் வேதங்கள் கூறும். "பையஞ் சுடர்விடு நாகப்
பள்ளிகொள்வா னுள்ளத்தான்" (திருவாரூர் - காந்தாரம். 10), "மிக்க
வேதத்துளான் விரிநீருடுத்த மண்ணகத்தான் றிருமாலகத்தான்" (தனித்திரு
விருத்தம் - 6 ) என்று அப்பர் சுவாமிகள் திருவாக்காகிய தமிழ்மறையும்
கூறும். "கர்ம கர்த்ருவ்ய பிதேசாச்ச" (சிவன்) தியானிக்கப்படும்
பொருளாகவும், (விட்டுணு) தியானிப்போனாகவுங் கூறப்படலானும்" என்ற
பிரமசூத்திரமுங் காண்க.

     வழுத்தும் நெஞ்சினராகி அத்தொழில் - வழுத்தும் - மானதம் -
மந்தம் - உரை என்று மந்திரங்கணிக்கும் முறை மூன்றனுள் உரையினால்
வழுத்தினார் என்க. நெஞ்சு - மனத்தின்றொழிலும், தொழில் - மெய்யின்
றொழிலும், குறித்தலின் முக்கரணங்களும் ஒன்றுபட்டன என்பதாயிற்று.
(வாசகம் - காயிகம் - உபாஞ்சு என்பர்)

     தொடர்பினில் இடையறாத் தூய அன்பொடு என்க, "சிந்தை
யிடையறா அன்பும்" (திருஞான - புரா - 270) என்ற திருவாக்கும்,
அதனைப்பற்றியே "இடையறாப் பேரன்பு" என்ற காஞ்சிப்புராணமும் காண்க.
இடையறாமையாவது "இடரினுந்தளரினும்" எஞ்ஞான்றும் விடாது தைலதாரை
போலத் தொடர்பாய் ஒழுகுதல். தொடர்பினில் இடையறா என்பதனைச்
சுருதிக்கு அடைமொழியாக்கி உரிய சந்தசில் இடைநீங்காத என்று
உரைகொள்வாருமுண்டு.

     நேயம் - விருப்பம். அத்தொழில் - வழுத்துதலாகிய தொழில்.
செயல். அன்பும் விருப்பமும் மட்டுமேயன்றி அவற்றாற் றூண்டப்பட்ட
செயலும் நிகழ்ந்தது.

     தலைநிற்றல் - உறைப்புடன் சிறந்து ஒழுகுதல்.
     நெஞ்சினராகிய தொழில் - என்பதும் பாடம். 4

1035. கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு
பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழு
நிரைநெ டுங்கய னீரிடை நெருப்பெழுந் தனைய
விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுண் மேவி,
5
1036. தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
வுள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேற் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு பயின்றார்
6

     1035. (இ-ள்.) கரையில்...கறங்கிட - புட்களின் ஒலிகள்
எல்லையில்லாத கம்பலையாகச் சத்திக்க; மருங்கு - அம்மருங்கிலே:
பிரசம்....அறைந்திட - மெல்லிய தேன் வண்டுகள்பாட; கருவரால்....மேவி -
கரிய வரால் மீன்கள் பிறழ்கின்ற, வரிசைபெற நீண்ட கயல்கள் செல்கின்ற
நீரினுள் நெருப்பெழுந்ததுபோல வாசனையுடன் அலர்ந்த
செந்தாமரைகளையுடைய மென் பொய்கையினுள்ளே போய், 5

     1036. (இ-ள்.) வெளிப்படை. தெளிந்த குளிர்ந்த தடத்தின் நீர்
கழுத்தளவு உள்ளமட்டில் நெருங்க உள்ளே பொருந்தப் புகுந்துநின்று,
வழிகின்ற வெள்ளிய அலைகளையுடைய கங்கை நீர் ததும்பிய
கடையினையுடைய சிவபெருமான் உகந்து கொள்ளும் அன்புடன்
திருவுருத்திரத்தினை (அவரது அடிமைத் திறத்தை மனத்துட் கொண்ட)
குறிப்புடனே பயின்றார். 6

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.