பக்கம் எண் :


உருத்திரபசுபதிநாயனார்புராணம்1343

 

என்று சதுர்வேத தாத்பரிய சங்கிரகம் எடுத்துக்கூறும். வேதம் நான்கும்
வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம்
நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதங்களே மேலானவை;
அவற்றுள்ளும் உருத்திரை காதசனி மேலானது; அதனுள்ளும் ஐந்தெழுத்து
மேலானது; அதினுள்ளும் சிவ என்ற இரண்டெழுத்தே மேலானது என்பது
சிவதத்துவ விவேகத்திற்கண்டது. இக்கருத்துக்களை எடுத்து விதந்து ஸ்ரீ
ஆறுமுக நாவலர் அவர்கள் இப்புராண சூசனத்துள் எடுத்துக் காட்டினர்.

     வேதம் மூன்று என்ற முறையில் அவற்றுள் நடுவணது எசுர்வேதம்;
அதன் ஏழுகாண்டங்களுள் நான்காவதனுள் நடுவணதாகிய பதினோராவது
அநுவாகத்தின் நடுவணதாகிய ஆறாவது சூக்தத்தில் விளங்குவது
திருவுருத்திர மந்திரம்; அதன் நடுவுள் விளங்குவது சீபஞ்சாக்கரமும் அதன்
நடுவுளிருப்பது சிவ என்ற திருநாமமுமாம். "சிவ சிவ வென்றிடத் தீவினை
மாளும்", என்று பலவாற்றாலும் திருமந்திரத்தினுள் துதித்தனர் திருமூலதேவர்.
அதனையே வேத நடுவுள் விளங்கும் "அட்சரத்துவயம்" - இரண்டெழுத்துக்கள்
- என்று பிற ஆசிரியரும் போற்றுவாராயினர். வேதபுருடன் சிவனை
இதயத்தில் வைத்துப் போற்றுகின்றான் என்பதும் இருக்கருத்துப் பற்றியது.

     தமிழ்மறைபற்றிய குறிப்புக்கள் : வேதங்கள் நான்கென்றும்
மூன்றென்றும் விரிக்கப்படுவதுபோலவே தமிழ்வேதமும் ஆசாரியன்
மார்களருளிய தேவாரங்களும் திருவாசகம் கோவையும்சேர்த்து நான்கென்றும்,
தேவாரங்கள் மூவரருளியவாற்றால் மூன்றென்றும் விரிக்கப்படும்.
இத்தேவாரங்கள் மூன்றனுள் இடையில் விளங்குவது அப்பர் அருளிய
தேவாரம். அதன் மூன்று திருமுறைகளில் இடையில் நிற்பது
திருக்குறுந்தொகையாகிய (ஐந்தாம்) திருமுறை. அத்திரு முறையினுள் நடுவுள்
இருப்பது 51 - வது திருப்பதிகமாகிய திருப்பாலைத்துறைத் திருப்பதிகம்.
அதன் பதினொரு திருப்பாசுரங்களுள் நடுவணதாகிய 6 - ம் திருப்பாட்டில்
"சிவாய" என்னும் பாசமொருவிய சீ பஞ்சாக்கரம் விளங்குவதும் காண்க.
(இஃது ஓர் அன்பர் அன்புடன் தந்த குறிப்பு.)

      "அரனே முதற்கடவுள்" என்ற சிவஞானபோத முதற் சூத்திரப்
பொருளையே உருத்திரன் - பரமன் என்ற வகையால் எடுத்துக் கூறுவது
திரு உருத்திர மந்திரமாகும். இதனுள் உயிர்ப்பொருள் உயிரில் பொருள்
எல்லாவற்றையும் தனித்தனி எடுத்துக்கூறி அவை யாவையினுள்ளும் கலந்து
விளங்கும் சிவனுக்கு "நம" என்று வணக்கம் கூறும். இக்கருத்துப் பற்றியே
தமிழ் வேதமாகிய நின்ற திருத்தாண்டகமும் "இருநிலனாய்த் தீயாகி
நீருமாகி" என்பது முதலாக உயிர்ப்பெருள் உயிரில் பொருள் என்னும்
எல்லாவற்றுள்ளும் சிவன் கலந்து நிற்குந் தன்மையை எடுத்துத்
துதித்தருளிற்று. (ருத் - துன்பம்: திரன் - நீக்குபவன்)

     திருவுருத்திரத்தை விதிப்படி மெய்யன்போடு ஓதிச் சிவனைத்
துதிப்போர் சிவபுரியிற் சேர்வார் என்னும் நூற்றுணிபு இச்சரிதத்தால்
விளங்கும். " அறிஞர் வளமுற்ற, வேதத்தை யோதியே வீடு பெற்றார்களே"
என்ற திருமந்திரமும் காண்க.

     உருத்திரங்கொண்டு - வழுத்தும் - நெஞ்சினராகி - அத்தொழில் -
தலைநின்றார் என்று கூட்டி முடிக்க.

     ஆய - அந்தப்பசுபதியார் என்க. முன் பாட்டிற்கூறிய அந்த
எனமுன்னறிசுட்டு.

     உருத்திரங்கொண்டு மாயனார் அறியாச் சேவடி - விட்டுணு
திருப்பாற் கடலில் தமது மார்பில் சிவபெருமானை வைத்து நெடுங்காலம்
தியானித்தனர் என்பது சரிதம். வேதம் விட்டுணுவின் வடிவமாகில் அது
இதயத்தில் சிவனை வைத்துள்ளது என மேற்கூறிய உண்மையும் இதனை
விளக்கும். இதுபற்றியே "நாராயண பரோத் த்யாதா"