பக்கம் எண் :


1342 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     பசுபதியார் - இந்நாயனாரின் இயற்பெயர். முருகனார் என்ற பெயர்ப்
பொருள் உரைக்கப்பட்டது பார்க்க (வி-ரை - தொகை - பக்கம் -1314).
பசுபதியாகிய சிவபெருமானிடத்து மிக்க அன்புபூண் டொழுகும் துங்கவேதியர்
குலத்தில் தோன்றினாராதலின் இவரது பெற்றோர்கள் தங்கள் வழிபடு
கடவுளின் பெயரை இவருக்கு இட்டனர்போலும். ஆரூரர் என்ற பெயர்
ஆளுடைய நம்பிகளுக்கு இட்டமை காண்க. 150 - ல் உரைத்தவை பார்க்க.
உருத்திரபசுபதியார் என்ற பெயரின் காரணம் 1039 - ல் கூறுவர். 3

1034.



ஆய வந்தண ரருமறை யுருத்திரங் கொண்டு
மாய னாரறி யாமலர்ச் சேவடி வழுத்துந்
தூய வன்பொடு தொடர்பினி லிடையறாச் சுருதி
நேய நெஞ்சின ராகியத் தொழிற்றலை நின்றார். 4

     (இ-ள்.) மாயனார்....சேவடி - மகாவிட்டுணுவும் அறியாத மலர்போன்ற
திருப்பாதங்களை; ஆப...கொண்டு - அந்த அந்தணர் அருமறையின்
விளங்கும் உருத்திரமந்திரத்தினைக் கொண்டு; வழுத்தும்...நெஞ்சினராகி -
துதிக்கும் தொடர்பால் இடையறாத தூய அன்புடனே சுருதியில் பதிந்த
நேயம் நிறைந்த மனத்தையுடையவராகி (அதனையே ஓதித் துதிக்கின்ற)
அந்தத் தொழிலிற் சிறந்து நின்றனர்.

     (வி-ரை.) அந்தணர் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுவாழும்
மறைமுனிவர்.

     அருமறை - உருத்திரம்- அரிய வேதங்களின் ஒரு கூறாயும்,
அதன் நடுவுள் இருப்பதாயும், அதன் இதயமாயும் அதன் பயனாயும்
விளங்கும் திருவுருத்திரம் என்ற பகுதி. அது நமக சமகங்கள் என்று கூறும்
மந்திரங்களை உடையது. மறைக்கு அருமை என்ற அடைமொழி தந்த
ஆசிரியர் அதன் உள்ளுறையாய் விளங்கும் மந்திரத்திற்கு அடைமொழியின்றி
வாளா உருத்திரம் என்று கூறினார், அதன் சிறப்பு உணர்த்துதற்கு.
"திருவளர் தாமரை" என்ற திருக்கோவையாரில் "கோங்கு" என்றதற்கு
அடைகொடாது கூறியதனால் அதன் தனிச் சிறப்புணர்த் தப்பட்டதென்று
பேராசிரியர் உரைத்த கருத்தை இங்கு நினைவு கூர்க.

     அருமறை- வேதங்கள் இறைவனது வாக்காதலானும், "வேதத்தை
விட்ட அறமில்லை; வேதத்து, ளோதத் தகுமற மெல்லாமுள" (பாயிரம் - 51)
என்ற திரு மந்திரத்தினுட் கூறுதலானும் அருமறை என்று சிறப்பித்தார்.
அருமை - இறைவனருளானன்றிக் கருவி நூலறிவுகொண்டு
மெய்ப்பொருளறியவாராமை.

      அருமறை "வேதம் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்று
நான்காகவும், அதர்வணமொழித்து மூன்றாகவும் கொள்வது மரபு. அதர்வணம்
ஏனை மூன்றினின்று திரட்டப்பட்டமையின் அவற்றுளடங்குமாதலான் வேதம்
மூன்றென்றுங் கூறுவர். இதுபற்றியே வேதத்திற்குத் திரயீ என்ற பெயர்
போந்தது. திரயீ மூர்த்தயே நம என்ற சிவாஷ்டோத்தர சதநாமமும்
இக்கருத்துப்பற்றியது. அதர்வணம் ஏனை மூன்றினின்றும் பிரித்து எடுத்துத்
தொகுக்கப்பட்டுத் தனிமுதலாய் நிற்றலின் வேறு வைத்தெண்ணி வேதம்
நான்கென்று கூறுதலும் ஆன்றோர் வழக்கு. அக்காரணம் பற்றி இருதிறத்தார்
கூற்றும் தம்முண் முரணுமையறிக" என்று திருத்தருமபுர ஆதீனத்து முத்தி
நிச்சயச் சிற்றுரையில் வெள்ளியம்பல வாணமுனிவர் எடுத்துரைத்தனர்.

     அருமறை உருத்திரம் - கண்ணிருப்பதனால் உடல் பெருமை
பெறுதல்போவ உருத்திரத்தை இதயத்திற் கொள்ளுவதனால் மறை
பெருமையுற்றது. உடலும் உயிரும்போல மறையும் உருத்திரமுமாவன எனினும்
பொருந்தும், வேத புருடனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும்
பஞ்சாக்கரம் கண்மணியுமாம்.