பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1361

 

     "தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி, வாழையுதிர்
வீழ்கனிக ளூறிவயல் சேறுசெய்யும் வைகாவிலே" (சாதாரிப்பண் - 1) என்ற
ஆளுடைய பிள்ளையாரது தேவாரக்கருத்து இங்கு நினைவு கூர்தற்பாலது.
"காய்மாண்ட தெங்கின்பழம் வீழ" என்ற சிந்தாமணிப் பாட்டை இங்கு
ஒப்புநோக்கி இதன் உயர்வு கண்டுகொள்க. 4

1045.



வயல்வளமுஞ் செயல்படுபைந் துடவையிடை வருவளமும்
வியலிடமெங் கணுநிறைய மிக்கபெருந் திருவினவாம்
புயலடையு மாடங்கள் பொலிவெய்த மலிவுடைத்தா
யயலிடைவே றடிநெருங்கக் குடிநெருங்கி யுளதவ்வூர்.  5

     (இ-ள்.) வெளிப்படை. வயலின் வரும் வளங்களும், கைவினைச்
செயல்களினால் விளக்கப்படுகின்ற பசிய தோட்ட நிலங்களினின்றும் வரும்
வளங்களும் மிக அகன்ற இடமெங்கணும் நிறைய, அவற்றால் மிகுந்த
பெரிய செல்வங்களையுடையனவாகி, மேகந்தவழுமளவும் உயர்ந்த
அளவில்லாத மாடங்கள் விளங்கப், பக்க இடங்களில் நெருங்கி மேலும்
குடிகள் பெருகும் படியாகக் குடிகளின் நெருக்கத்தினையுடையது அந்த
ஆதனூர்.

     (வி-ரை.) வயல் வளம் - துடவையிடை வரு வளம் - இவை
நன்செய் புன்செய் என்ற இருபகுப்பினுள் வருவன. செயல்படு - வயலுக்கும்
உழுவர்களின் செயல் வேண்டப்படினும் சேறுசெய்தல், நடுதல், களை கட்டல்
என்ற பெருஞ்செயல்களின் காலங்களிலேயன்றி ஏனைக்காலங்களில் ஆற்று
நீர், ஏரி நீர் ஆதரவுசெய்து உழவர் செயலின்றித் தானாகப் பாய்ந்து பயிரை
வளர்த்து வர வுள்ளது வயல்வளம். துடவை வளம், அவ்வாறன்றித்
தொடக்க முதல் விளைவுமுற்றி அறுக்கும் வரையில் ஒவ்வோர் நாளும் நீர்
பாய்ச்சுதல், களைகட்டல், பறவை கடிதல், பயிர் காத்தல் முதலிய
பலவகையாலும் உழவர் செயல்கள் வேண்டப்படுவன. இது குறிக்கவே,
வயல்வளம் என்று வாளா கூறிய ஆசிரியர் செயல்படுபைந் துடவை வளம்
என்றார்.

     இடை வருவளம் - புன்செய்த் தோட்டங்களில் பல பயிர்களும்
உடன் விரவும்படி விளைக்கப்படும். ஆதலின் அவற்றில் விளைவு
நன்செய்யிற்போல ஒரு காலத்தில் சேரவராமல் இடையிடையே வருவனவும்
உண்டு. இடை வருவளம் என்றது இதனைக் குறித்தது. துடவை -
சோலைகள் என்பாரும் உண்டு.

     செயல்படு துடவை - உழுது பயிரிடப்படுவனவும்,
மலைச்சரிவுகளிற்போல உழாது விதைக்கப்படுவனவும் எனத் துடவைகள்
இருவகைப்படும். "தொடுப் பெறிந் துழுத துளர்படு துடவை" (பெரும்பாண் -
201), "தொய்யாது வித்திய துளர்படு துடவை" (மலைபடு - 122) என்பன
காண்க. அவற்றுள் இங்குக் குறித்தவை உழுது விதைக்கப்படுவன என்பது
குறிப்பு, நன்செய் வயல்களினிடையே புன்செய்த் தானியங்களிலும்
சிலவற்றைப் பெறவும், மற்றும் பயன்கள் கருதியும் சில பகுதிகளை மேட்டு
நிலங்களாக வைத்துக் காத்தல் இந்நாளிலும் காவிரி நாட்டிற் காணலாம்.
இவை வயல்களினிடையிடை தோன்றுவன என்ற குறிப்பும் இடைவருவளம்
என்றதனாற் புலப்படும்.

     வியல் இடம் எங்கணும் நிறைய - வியல் - அகலம். "வியலென்
கிளவியகலப் பொருட்டே" (தொல் - சொல் - உரி - 68). மாடங்கள்
இடமகல முடையனவாய் அமைக்கப்பட்ட அவ்விடம் முழுமையும்.

     மிக்க பெரும் திருவின ஆம் - மிக்க என்பது, வகையாலும்,
பெரு
என்பது தொகையாலும் நிறைவு குறித்தன. திரு - உழவினால்
வருஞ்செல்வங்கள் எவ்வகைச்