இவ்வணிநலம்புனைதற்கு
ஏனையோர் இழிவாகக் கருதும்
புலைப்பாடியினை ஏற்ற இடமாக்கிக் கொண்ட ஆசிரியரின் தெய்வவருட்
புலமைத்திறமும் வியக்கற்பாலது.
குழுச்சுழலும்
முன்றில் - கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியினுடன்
முற்றத்துள் சுழலுதல், அவை இடமறிந்து உணவைப் பொறுக்கிக்கொள்ளும்
பழக்கமுண்டாதற்கு உதவுவதுடன், அவற்றைப் பருந்து முதலியவை அடராது
பாதுகாக்கவும் உதவுவதாம்.
வார்பயில்
முன்றில் - புலையர் பாடியில் அவர்கள்
கொண்ட ஆடு,
மாடு முதலிய இறந்த பிராணிகளின் தோலினை வகிர்ந்து தோற்கருவிகளுக்கு
உதவும் பொருட்டு வார்களாகக் கிழித்துப் பதமிட உலரவைக்கும் வழக்குக்
குறித்தது. "விசிவார்" (1054).
வள்உகிர்
- வளைந்த நகம். "வள்வாய மதி" என்ற நம்பிகளது
(திருக்கலய நல்லூர்) தேவாரங்காண்க. வள் -
கூரிய என்றலுமாம்.
கவர்ந்து
ஓட - தாய்நாய் இல்லாத சமயம் பார்த்து அக்குட்டிகளை,
அவை தங்கிய புனிற்று முழையினின்றும், சிறுவர் தாய் நாய் காணாதபடி
அது வருமுன் விரைந்து எடுத்துப்போகும் செயல்குறித்தது.
குரைப்பு
அடக்கும் இருப்புமணி - பறழ்களின் சிறுகுரைப்பு
ஓசையை தாய் கேட்டபின் வந்து அவற்றைவிடாது தொடருமாதலின் அந்த
ஓசை கேளாதபடி சிறாரின் அரையிற் கட்டிய இரும்புமணிகள் ஓசைசெய்து
தம்மை உடையாருக்குத் துணைசெய்தன என்னுமொரு (தற்குறிப்பேற்றம்)
குறிப்பும் காண்க. தாய்நாய் பறழ்களின் ஓசைக்கு வாராததன் காரணமும்
தெரிவித்தபடி. இருப்புமணி- இரும்பினாலாகிய சிறுமணிகள் கோத்த
சதங்கை. மணி - மணிகளாலாகிய கோவைக்குஆகி,
அதன் மேல் அதன்
ஓசைக்கு ஆகிவந்தது. இருமடியாகு பெயர்.
கார்
இரும்பின்சரி - இருப்புமணி - சரி - காப்பு.
இப்புலைப்பாடியில் வாழ்வோர் ஏழைமக்களாதலின் தமது சிறார்களுக்குக்
கரிய இரும்பினாலாகிய அணிகளை அணிந்தனர். அவர்களைவிட அதிகம்
செல்வமுடையார் வெள்ளியினாலும், அதனினும் நிறைந்த செல்முடையார்
பொன்மணிகளினாலும் இயன்ற அணிகலன்களை அணிகுவர்.
"செல்வமென்பது சிந்தையி னிறைவே" என்ற உண்மையை இங்குக்
காணலாகும். செல்வமுடையார்க்குப் பொன்னும் மணியும் வெள்ளியும் தந்த
அத்தனை மகிழ்வையும் இவர்களுக்கு இரும்பு விளைத்தது காண்க. பைசாச
முதலியவை தொடரா வண்ணம் இரும்பு அணிகளையும் கூட்டி அணியும்
வழக்கம் செல்வர்களிடையும் காணலாம்.
ஆர்
- சிறு - மென் - குரைப்பு - அடைமொழிகள் மூன்றும்
நாய்ச் சிறுகுட்டிகளின் குரைப்புக்கு ஏற்றவையாம். ஆர்தல் - நிறைதல்;
சிறுமை-
காலத்தால் குறுகியதாதல்; மென்மை - ஓசையளவினால்
மெல்லியதாதல், குரைப்பு - தம்மைத் தாயின்
இருப்பிடத்தினின்றும்
பிரித்துக் கவர்ந்து செல்வது தெரிந்த நாய்க்குட்டிகள் அதனை அறிவித்து
முறையிடுதல் போன்ற குறிப்புடைய ஓசை எனவும், மணி அடக்கும்
என்றது அதனைக் கேளாமற் செய்யும் குறிப்புடைய ஓசை எனவும்
காணநிற்பதாம்.
இதனால்
அந்தப் புலைப்பாடியில் வாழும் புலையராகிய மக்களின்
வாழ்க்கைத் திறன் - பழக்கம் - உணவு - தொழில் முதலியவையும், சிறாரின்
விளையாட்டு வகையும், அணிகலன் முதலியவையும் கூறப்பட்டன. கோழிகள்,
அவர் தம்உணவுக்கேயன்றி அவர் தொழிலுக்குரிய காலங்காட்டியழைக்கவும்
உதவுவதென்பது வரும் பாட்டிற் கூறுவார் சிறுவர் விளையாட்டு வகைகளை
அவரவர் மரபுகளுக்கேற்ற இயல்பின் அறிவிப்பர் ஆசிரியர். ஆளுடைய
பிள்ளையார் புராணம், கண்ணப்ப நாயனார் புராணம் முதலியவற்றால்
அவ்வுண்மை புலனாதலும் காண்க.
|