பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1363

 

     சுரை மேற்படர்ந்த பழங்கூரை - இது புலைப்பாடி முதலிய
சேரிகளில் வாழ்வோர் தம் குடிசைகளின் கூரைக்கு ஆதரவு பற்றியும்,
உணவுக்குக் காய்கள் பெறுதல் பற்றியும் சுரைக்கொடிகளைக் கூரைமேற்
படரவிடும் இயல்பு குறித்தது. புலையர் முதலியோர் உண்ணும் புலால்
முதலியவற்றோடு சமைத்து உண்ணுதற்குச் சுரை ஏற்ற தகுதியுடைமையாலும்,
அதனை அவர்களது நிலக்கிழவர் முதலியோர் விரும்பாமையாலும்
பெரும்பாலும் சுரையைப் புலையர் வளர்ப்பது இயல்பு. புல்லால் வேய்ந்த
குரம்பையைப் பழுதுபடாவண்ணம் இக்கொடிகள் பற்றிப் பாதுகாப்பதற்கும்
உதவுவன.

     புற்குரம்பை - வைக்கோற் புல்லால் வேய்ந்த கூரையுடைய சிறு
குடிசை. இவ்வுழவர் தமக்குக் கிடைக்கும் உரிமையாகிய புல்லினைக்கொண்டு
தமது குடிசைகளை வேய்வர். கூரை பழுதுபடாது பல ஆண்டுகள் நிலவும்
பொருட்டு அதன்மேற் சுரைக் கொடியையும் படர விடுவர்.

     சிற்றில் பல - பல சிறுகுடில்கள். நிலைத்துளது - அவர்கள்
வாழ்வது சிற்றில்களேயாயினும் அவை நிலைபெற்று வழிவழி அங்கு வாழ்ந்து
வரும் தன்மை குறித்தது. நிறைந்துளது என்பது பாடமாயின், நெருங்கியுள்ளது
என்க.

     புலைப்பாடி - புலையர் வாழும் புறநகரிருக்கை, பாடி - சேரி -
முதலியன புறநகர்க் குடியிருப்பு இடங்களைக் குறிப்பன. சக்கரப்பாடி -
வியாசர்பாடி முதலிய வழக்குக்கள் காண்க. புலையர் - இறந்த
பிராணிகளின் புலால் பற்றிய தொழில் செய்து அதனை உண்ணும்
தொழிலாற் போந்த சாதிப்பெயர். இத்திருப்பாட்டின்
தன்மைநவிற்சியணியினது சிறந்தநிலை கண்டு களித்தற்பாலது.1 6

1047.



கூருகிர்மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயின்முன் றிலினின்ற வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ்
காரிரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட
வார்சிறுமென் குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணி.  7

     (இ-ள்.) வெளிப்படை. கூரிய நகங்களையும் மெல்லிய அடியையும்
உடைய பெட்டைக்கோழியின் சிறிய குஞ்சுகளின் கூட்டம் அதனுடனே
சுழலுதற்கிடமாகிய, வார்கள் பயின்றுள்ள முற்றத்திலிருந்த வளைந்த
நகங்களையுடைய நாய்களின் இளையதுள்ளுகுட்டிகளைக் கரிய இரும்புக்
காப்புக்களை நெருங்க அணிந்த கரிய சிறுவர்கள் கவர்ந்து ஓட, அந்த
நாய்க்குட்டிகளின் நிறைந்த சிறிய மெல்லிய குரைப்பின் ஓசையை
அச்சிறுவர்கள் இடையிற் கட்டிய இரும்புமணிச் சதங்கைகள் அடக்கும்.

     (வி-ரை.) அவ்வப்பொருள்களின் தன்மையினை உரிய ஒவ்வோர்
சிறப்பு அடைமொழிகளால் உணர்த்தப்பட்டது குறிக்க. கூர் உகிர் - மெல்
அடி, குறும்பார்ப்புக் குழு - வள் உகிர் நாய் - துள்ளுபறழ் - கார்
இரும்பு - இரும்பின் சரிசெறிகை - கருஞ்சிறார் - சிறுமென்குரைப்பு -
முதலியவற்றின் சிறப்பு அடை மொழிகளே அவ்வவற்றின் தன்மையினைப்
பொருளாழம்பெற அறிவித்தல் காண்க.

     புலையர் குடில்களில் உணவுக்காகக் கோழி வளர்த்தலும், அவ்வாறு
வளர்க்கப்படும் அளகின் குறுங்குஞ்சுகள் கூட்டமாகத் தம் தாய்க்
கோழியுடன் அது சென்ற இடந்தோறும் முன்றிலிற் சுழலுமியல்பும்,
நாய்த்துள்ளுபறழ்களைச் சிறார் கவர்ந்தோடி விளையாடுமியல்பும்,
புலைச்சிறுவர் கருநிறமுடையராதலும், அவர் இரும்புச்சரியினையும் இரும்பு
மணிகளையும் அணியுமியல்பும் அவ்வத் தன்மை தோன்ற உரைக்கப்பட்டன.
இவற்றை ஒன்று சேர்த்து நாடகச் சுவைபெறக்காட்டிய இப்பாட்டின்
ஒப்புயர்வற்று விளங்கும் தன்மைநவிற்சியணி வியக்கற்பாலதாகும்.


     1. இதுபற்றி எனது சேக்கிழார் 128-129 பக்கங்கள் பார்க்க.