கறையான் முதலியவை
ஊறு செய்யா வண்ணம் தமது சிற்றில்களின் பக்கம்
உள்ள மாமரங்களின் கொம்புகளில் தூக்கிவைப்பது வழக்கு.
புன்தலை...புடைத்
தெங்கு - பறைச்சேரி வளைவில் சில பழந்
தென்னை மரங்கள் உண்டு; அவற்றினடியில் உள்ள பொந்துகளில் நாய்கள்
குட்டிகளை ஈன்று காப்பது இயல்பு. இவ்வாறன்றி நாய்க்குட்டிகளிருந்த
பள்ளத்தினருகில் உள்ள தென்னை மரங்கள் என்றுரைப்பாருமுண்டு.
அப்புலைப்பாடி எங்கும்...உடைத்து என எழுவாய் முன் "மற்றவ்வூர்" என்ற
பாட்டினின்றும் வருவித்துரைத்துக் கொள்க. 8
1049.
|
செறிவலித்திண்
கடைஞர்வினைச் செயல்புரிவை கறையாமக்
குறியளக்க வழைக்குஞ்செங் குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர் நெற்குறுபாட் டொலிபரக்கும்.
9 |
(இ-ள்.)
வெளிப்படை. மிக்க வலிமையுடைய திண்ணிய கடைஞர்கள்
உழவுத் தொழிலுக்குரிய செயல்களைச் செய்யத் தொடங்கவேண்டிய
காலமாகிய வைகறையாமத்தின் நேரத்தை அளந்து காட்டி அவர்களைத்
தொழிலிற் செலுத்துவதற்கு அழைக்கின்ற, சிவந்த உச்சிக்
கொண்டையினையுடைய கோழிகள் தங்குமிடமாகிய, வாசனை பொருந்திய
குளிர்ந்த கிளைகளையுடைய காஞ்சியின் விரிந்த நீழலின் பக்கங்களில்
எல்லாம், நெறித்த குழலினையுடைய புன்புலை மகளிர் நெல்லைக் குற்றும்
பாட்டு ஒலி மிகுதியும் பரக்க உளதாம்.
(வி-ரை.)
செறிவலித்திண் கடைஞர் - வலிமை - திண்மை-
ஒரு பொருட் பன்மொழி. மிகுதி குறித்தன. செறி என்றதனால் இவை மேலும்
திரண்ட மிகுதிப்பாடு குறிக்கப்பட்டது.
கடைஞர்
வினைச் செயல்புரி யாமக்குறி - வினை -
கடைஞர்களின் மரபுக்குரிய தொழில். இவை, உழவுத்தொழிலின் பகுதிகளும்,
ஊர் காவலின் பகுதிகளுமாம். செயல் -
அத்தொழிலின் பொருட்டுச்
செய்யப்படுவன. இவை, காலந்தப்பாது நீர் பாய்ச்சுதல், காவல் புரிதல்,
பறைசாற்றுதல் முதலியன. செயல்புரி யாமக் குறி
- அச்செயல்களிற் புகுந்து
வேலை செய்யும் காலமாகிய இரவின் கடையாமங்களின் தொடக்கமாகிய
காலம்.
அளக்க
அழைக்கும் வாரணம் - கடைஞர்களைச் "செயல் புரிதற்கு
உரிய காலம் வந்து விட்டது! விழித்துச் செல்லுங்கள்!" என்று அழைப்பன
போலக் கூவும் வாரணம். (வாரணம் - கோழி). தற்குறிப்பேற்றம். முன்பாட்டிற்
கோழிப் பெடைகளின் இயல்பும், இப்பாட்டில் செங்குடுமியுடைய ஆண்
கோழிகளின் இயல்பும் கூறப்பட்டன. இவை இவ்வாறு மக்கட் கூட்டத்துக்குச்
செய்யும் உபகாரம் கருதிப் பாராட்டியும், மக்களை அதிகாலையில்
விழிக்கச்செய்து கடவுளைத் தியானிக்கவும் அதன்பின் உலகநிலைத்
தொழில்களிற் செல்லவும் உதவும் பேருபகாரத்தைப் பாராட்டியும்,
கருணையுடன் சாந்தலிங்க சுவாமிகள் எடுத்துக் கூறினர்;
இவ்வுபகாரங்களுக்குப் பிரதியாக இவற்றைக் கொடுஞ்சித்தமொடு கொன்று
தின்றுவிடும் மனிதனது நன்றிமறந்த கொடுமையினையும் எடுத்துக் காட்டிக்
கடிந்துள்ளார். இவை முருகப்பெருமானது கொடியாகும் பெருமையினைச்
செங்குடுமி என்ற அடைமொழிகள் குறிப்பன.
சேக்கை
- நீழல் - மருங்கு சேவல்கள் தங்கும் பரந்த நீழலின்
பக்கங்களில். சேக்கை - துயிலுமிடம் என்றலுமாம். "சேக்கை மரனொழியச்
சேணீங்குபுள்" (நாலடி).
|