பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1367

 

     நெல் குறு பாட்டு - நெல்லைக் குற்றும்போது பாடும் பாட்டு.
உடல் முயற்சியாலாகிய தொழில்களை மக்கள் கூடிச்செய்யும் காலத்து
உடல்வருத்தந் தோன்றாதிருக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே தொழில்
செய்வது இந்நாட்டு நல்வழக்கங்களுள் ஒன்று.

     இவ்வாறே புலைமகளிரும் நெற்குற்றும்போது பாட்டுப் பாடுவர்.
நெற்குறுபாட்டு - இலக்கணை. தமக்கு உரிமைக்காகக் கிடைத்த
நெல்லைத் தம் உணவுக்காகக் குற்றுவர். தமது உழவுத் தொழில்
முயற்சிகளுக்கு இடையூறில்லாதபடி இரவிலும் விடியற்காலையிலும்
இவர்கள் நெற்குற்றுவதும் வழக்கு.

     காஞ்சி விரிநீழல் - காஞ்சி மரத்தின் நீண்டு விரிந்த கிளைகளின்
நீழல்.

     நெறிகுழல் - நெறித்த - நெறிப்பையுடைய - கூந்தல். நெறிப்பு -
அலைகள் போன்ற சிறு வளைவுகளை யுடைத்தாதல்.

     புன் புலைமகளிர் - புன்மைத்தொழில் செய்யும் மரபுடைய
கடைசியர். புலைத் தொழில் புன்மை எனப்பட்டது. வரும்பாட்டிலும் இதனைத்
தொடர்ந்து "புன் புலைச்சியர்கள்" (1050) என்றது காண்க. 9

     அளக்க உளைக்கும் -என்பதும் பாடம்.

1050.



புள்ளுந்தண் புனற்கலிக்கும், பொய்கையுடைப் புடையெங்குந்,
தள்ளுந்தா ணடையசையத் தளையவிழ்பூங் குவளைமது
விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறை யுங்கலிக்கும்.         10

     (இ-ள்.) பொய்கையுடைப் புடை எங்கும் - பொய்கையினது
பக்கங்களிலெல்லாம்; புள்ளும்...கலிக்கும் - பறவைகளும் குளிர்ந்த நீரில்
ஒலிக்கும்; தள்ளும்... பறையும் கலிக்கும் - தள்ளாடிச் செல்கின்ற காலின்
நடை அசைதலால் கட்டு விட்டு அலர்ந்த குவளை மலர்கள் தேனைச்
சொரிதற்கிடமாகிய பைங்கூந்தலிலே, நெற்கதிர்களைச் சூடிய
புன்புலைச்சியர்கள், கள்ளினை உண்டு களியாட்டயர, அதற்கிசைய
முழக்கப்படும் பறைகளும் சத்திக்கும்.

     (வி-ரை.) புள் - நீர் வாழ்பறவைகளும், அன்றி, நிலத்தில்
வாழ்பவையாய் ஓரோர்காலம் மீன்களை உண்ணவந்து செல்லும்
பறவைகளும் ஆம்.

     பொய்கையுடைப் புடைஎங்கும் புள்ளும் கலிக்கும்; பறையுங் கலிக்கும்
என்று கூட்டி முடித்துக் கொள்க.

     புள்ளும் - பறையும்- கலிக்கும் என்க. கலித்தல் - ஓசைபட
ஒலித்தல். முன்பாட்டில் அந்தப் புலைச்சேரியில் தரைப் பகுதியினுட் பல
இடங்களிலும் நிகழும் செயல்களைக் கூறிய ஆசிரியர், இப்பாட்டினால்,
அங்குப் பொய்கைக் கரையினில் நிகழ்வனவற்றைக் கூறுகின்றார்.
முன்பாட்டிற் கூறியது புலைமக்களின் இன்றியமையாத வாழ்க்கைத்திறத்தின்
நிலையினையும், இப்பாட்டிற் கூறியது அந்த மக்களின் ஆடல் பாடல்
முதலிய மனமகிழ்வுடைய பொழுதுபோக்கு நிலையினையும் குறிப்பன.
தள்ளும் தாள் நடை அசைய...அவிழ் - குவளை
-
கால் தள்ள
அசைந்து செல்லும் நடை அவர்கள் கள் உண்ட களிப்பினாலாகிய.
அசைய
- அசைதலால். காரணப் பொருளில் வந்த வினையெச்சம். கால்
தள்ள நடை அசைதலால் அப்புலைமகளிர் தலையிற் சூடிய குவளைப்
போதுகள் விரிந்து தேன் சொரிந்தன. அசைய அவிழ் என்க. அவிழ்தலால்
மதுவிள்ளும் என்பதாம்.