பக்கம் எண் :


1370 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     புரிதல் - விரும்புதல். செம்மையினையே விரும்பிய அதனால்,
அயல் நினைவுகள் அறவே நீங்கத், திருவடித் தொண்டினையே செய்து
வந்தனர் என்பதாம்.

     பிறைக் கண்ணி - பிறையாகிய கண்ணிமாலை. உருவகம். "மாதர்
பிறைக் கண்ணி யானை" முதலியவை காண்க.

     பெருந்தகை - பெருந்தகைமையாவது அடைந்தோர்களது
பிழைபொறுத்து, அவர்களுடைய சிறுமை நோக்காது, ஆட்கொண்டருளுதல்,
பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தை" (திருத்தாண்டகம் -
திருச்செங்காட்டங்குடி).

     மறந்தும் அயல் நினைவின்றி - அயல் - சிவபெருமானுக்கு
அயலாகிய - வேறாகிய. அயல் - பிறதெய்வங்களை என்பாருமுண்டு.
"உனைநான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" என்ற நம்பிகள்
தேவாரக்கருத்து இங்கு வைத்துக் காணத்தக்கது.

     வருபிறப்பின்வழி வந்த அறம்புரி கொள்கையராயே - தாம்
பிறந்த மரபுக்குரிய நிலையில் என்ன சிவதருமங்களைச் செய்தல் நூல்
விதிகளுக்கு இணங்குமோ அவற்றைச் செய்வோம் என்ற கொள்கையில்
நின்றே. இக்கொள்கையைச் செயல் முறையில் எவ்வாறு கொண்டு
செலுத்தினார் என்பது மேல்வரும் மூன்று பாட்டுக்களால் விரித்துக்
கூறப்பட்டது.

     சிவன் பணியும் அடியார் பணியும் செய்தல் வேண்டுமாயின் தாம்தாம்
பிறந்த மரபுக்குரிய நூல்விதி வழக்குக்களை விட்டு நீங்குதல் வேண்டுமென்று
சிலர் (பலர்?) கருதுகின்றார்கள். பிறந்த குடியொழுக்கில் நின்றே அதற்கு
ஏற்றவகையால் சிவதருமங்களும் திருத்தொண்டும் செய்தலும் கூடும் என்பது
நந்தனார் கொண்ட கொள்கை.

     வீடுபெற முயல்வோர்கள் சாமுசித்தர் என்றும், வைநயிகர் என்றும்
இரு வகைப்படுவர். இவர்களுள் பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப்
பத்தி பண்ணும் தொண்டராகிய முதலாவது பகுப்பில் சார்ந்தவர் நந்தனார்.
ஆயின் நந்தனார் தமது குலமரபு நிலைகடவாது நின்றே அதற்குத்தக்க
தொண்டு செய்தவர். இதனை மேல்வரும் மூன்று பாட்டுக்களானும்,
"இவ்வகையாற் றந்தொழிலினியன்றவெலாம்" (1055) என்றதனாலும் உணர்க.
இவ்வாறன்றிக் குலமரபுக்குத் தக்கவாறு விதிக்கப்பட்ட வரம்பினைக் கடந்த
சாமுசித்த நிலையினின்று வீடு பேற்றின் முயன்ற கண்ணப்ப நாயனார்
முதலிய பெரியோர் சரிதங்களையும் இங்கு ஒப்புநோக்கிக் கண்டு உண்மை
தெளிந்து கொள்க.

     கொள்கையினராய் - வழிநின்றார் - என்பனவும் பாடங்கள். 12

1053.



ஊரில்விடும் பறைத்துடவை யுணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார் தலைநின்றார்
                                 தொண்டினால்;
கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயிறொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்,        13
   
1054. போர்வைத்தோல் விசிவாரென் றினையனவும், புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கு நிலவகையில்
சேர்வுற்ற தந்திரியுந், தேவர்பிரா னர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ சனையுமிவை யளித்துள்ளார்.   14

     1053. (இ-ள்.) வெளிப்படை. (அவர்) ஊரில் விடப்பட்ட, வெட்டிமைத்
தொழிலுக்குள்ள மானிய நிலத்தின் வருவாயைத் தமக்கு உணவுக்கு
ஆதரவாகக் கொண்டு, தமது பிறப்பின் சார்பினால் வரும் தொழிலைச்செய்து
வருவார், திருத்தொண்டினால் தலைநின்றார்; கூர்மையாகிய இலைவடிவுடைய
மூன்று தலைகளையுடைய