|
ஊர்ப்புலமை
ஆன்ற தொழில் தாயம் - முன்னாளில்
கிராமத்தண்டல், கிராமத் தோட்டி முதலிய பொதுச்சமூக ஊழியம் செய்வோர்
அதனை வழிவழியாகச் செய்து வருவர். அத்தொழிலிற் றாய உரிமையும்
உடையவர். "தள்ளாத தங்க டொழிலுரிமைத் தாயத்தின்" (612) என்றது
காண்க. அதற்காக, அவர்களுக்கு மானிய பூமிகளும் வேறு உரிமையான
வரவுகளும் உண்டு. "ஊரில்விடும் பறைத்துடவை உணவுரிமை" (1053) எனப்
பின்னர்க் கூறுவது காண்க.
ஒப்புஇல்
அவர் - இணையில்லாதவர். புலையர் சேரியாகிய
மிகத்தாழ்ந்த இடத்தினின்ற புலையர் மரபினின்று. மிக உயர்ந்த நிலையில்,
பிறந்ததுமுதல் சிவனடிப்பற்றில் உறைத்து விளங்கிய இவரது திறம்
இணையற்றதுதான்! உளர் ஆனார் -
உள்ளவராயினர்.
உளர் - முற்பிறப்பில்
சிவனைநோக்கி நோற்காதார் பலரும்
இப்பிறப்பில் என்னுடையரேனும் இல்லாரேயாவர்; முற்பிறப்பில் நோற்றார்
இங்கு என்னில்லா ரேனும் உள்ளாரேயாவர் என்பது நூற்றுணிபு. "இலர்பல
ராகிய காரண நோற்பார், சிலர்; பலர் நோலா தவர்" என்ற திருக்குறட்
கருத்தினை இங்கு வைத்துக் காண்க. "நலமில ராக நலமதுண் டாக நாடவர்
நாடறி கின்ற, குலமிக ராகக் குலமதுண் டாக" (புறநீர்மை - திருவாலவாய்)
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங் கூறியபடி உலகத்தார் காணும்
நலமும் குலமும் இலராயினும் சிவன் கழற்கே அன்புசெய்து
முன்விளைத்தவுணர்வுடைமையால் இவர் எல்லாமுள்ளவராயினார்
என்க. 11
1052.
|
பிறந்துணர்வு
தொடங்கியபின் பிறைக்கண்ணிப்
பெருந்தகைபாற்
சிறந்தபெருங் காதலினாற் செம்மைபுரி சிந்தையராய்
மறந்துமய னினைவின்றி வருபிறப்பின் வழிவந்த
அறம்புரிகொள் கையராயே யடித்தொண்டி னெறிநின்றார்.
12 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வுலகில் வந்து பிறந்து தம்முடைய
உணர்வு தெரியத் தொடங்கிய பின்னர், அந்நாள் முதலாகப், பிறையாகிய
கண்ணிமாலையைச் சூடிய பெருந்தகையாம் சிவபெருமானிடத்துச்
சிறப்புடைய பெரிய ஆசையினாலே செம்மையினை விரும்பும்
மனத்தையுடையவராகி, மறந்தாயினும் வேறு நினைவில்லாதவராகித், தாம்
பிறந்த மரபினுக்குரிய சிவதருமங்களைச் செய்யும் கொள்கையையுடைய
வராகியே சிவனடித் தொண்டின் வழியிலே நிலைபெற்று நின்றனர்.
(வி-ரை.)
உணர்வு தொடங்கிய பின் - செம்மைபுரி
சிந்தையராய் - ஒருவனுக்கு உணர்வு தெரியத்தொடங்குமுன் நன்மையை
அறிந்து கடைப்பிடித்து ஒழுகல் இயலாமையின் உணர்வு தொடங்கிய
பின் என்றார். "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல், சிறந்துநின்
சேவடியே சேர்ந்தேன்" (அற்புதத் திருவந்தாதி - 1) என்ற அம்மையார்
திருவாக்கினை இங்கு நினைவுகூர்க. உணர்வு தொடங்கிப் பலகாலமாகியும்
சிவநெறியில் உணர்வினைச் செலுத்தமாட்டாது சாமளவும் அவநெறியே
சென்று வீழ்வார் உலகிற் பலராதலின், இவ்வாறு உணர்வு தொடங்கிய நாள்
முதல் செம்மைபுரிதல் இந்நாயனார்போன்ற எந்தம் பெருமக்களுக்கே
கூடுவதாம் என்க.
செம்மை
புரிசிந்தை - செம்மை- சிவமாந்தன்மை.
"செம்மை
யாய சிவபத மளித்த செல்வமே", "செம்மைநல மறியாத சிதடர்" (திருவா -
அச்), "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்"
(திருத்தொண்டத் தொகை - 4), "செம்மை யாகிய கருத்தராய்ச் சிவகதி
தேர்வார்" (திருவிளை - புரா - வாதவூ - உப - பட - 10) முதலியவை
காண்க. "செம்மையே திருநாளைப்போவார்" என்ற முதனூல் ஆட்சி
போற்றப்பட்டு இப்பாட்டினால் விரிவுரை செய்யப்பட்டது. 172
|