|
1055.
(இ-ள்.) வெளிப்படை. இவ்வகையாலே தமது தொழிலில்
இயன்ற அளவு எல்லாவற்றையும் எவ்விடத்திலேயும் செய்வனவும்
திருக்கோயிலின் திருவாயிற் புறத்தே நின்று,
உண்மை பொருந்திய
பேரன்பின் மிகுதிப்பாட்டினாலே, ஆடுவதும், பாடுவதுமாக
நிகழ்ந்துவரும் அந்நாளில். 15
1056.
(இ-ள்.) வெளிப்படை. திருப்புன்கூரில்
எழுந்தருளியிருக்கும்
சிவலோகநாதருடைய செம்மையாகி திருவடிகளை
மிகவும் நினைந்து
விருப்பத்தோடும் தாம் வேண்டிய திருப்பணிகளைச் செய்வதற்கே
ஆசையினால் மனவொருமைப் பட்டாராய், அங்கு ஆதனூரினின்றும்
புறப்பட்டு வருத்த முறும் காதலினால் அந்தத் தலத்தின் பக்கத்தை வந்து
அணைந்தனர். 16
இந்த
இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
1055.
(வி-ரை.) தம்தொழிலில்
இயன்ற எலாம் - தமது
குலத்தொழிலின் (புலைத்தொழிலின் ) வருவாயினாற் கிட்டும் பொருள்களாற்
செய்யத்தக்க சிவத் திருத்தொண்டுகளை யெல்லாம். எல்லாம்
-
செய்வனவும் என்க. முற்றும்மை தொக்கது.
இவ்வகையால்
செய்வனவும், ஆடுதலும், பாடுதலும் ஆய்நிகழ்வார்
என்க.
ஆய்நிகழ்வார்
- இச்செயல்கள் நிகழ்ச்சியிற் பொருந்த வாழ்வார்
என்பது.
மெய்விரவு...பாடுதலும்
- மிக்க அன்பு. பேரன்பு எனப்படும். அது
மிகுதிப்பட்டு உண்மையுடன் பொருந்தியபோது தம்வச மிழந்து ஆடுதலும்,
பாடுதலும், பிறவும் நிகழும். "ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை
யென்புருகிப், பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை" (திருவாசகம்),
"தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி" (திருவாரூர் - தாண்டகம்), "குன்றென
வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்து மாடி" (823), "கும்பிட்டுத்
தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே" (சித்தி - 12) முதலிய அன்பினிலக்கணங்
கூறும் அளவைகளைச் சிந்திக்க.
அவ்வியல்பு- மெய்விரவு பேரன்பு மிகுதியான அந்த இயல்பு.
மேலே சொல்லிய அந்த என அகரம் முன்னறி சுட்டு.
எவ்விடத்தும்
செய்வன - மேலே கூறிய பொருள்களைச்
சிவனுக்காக ஆக்குதல். இவை கோயிலின் புறத்திருந்து எவ்விடத்தும்
செய்யத்தக்கன. மேல்வரும் ஈடுபாடாகிய ஆடல் பாடல்கள் திருக்கோயிலின்
திருவாயிலின் புறத்தே எதிர்நின்று
செய்யத்தக்கன. 15
1056.
(வி-ரை.) திருப்புன்கூர்- புன்குமரம் தலமரமாதலின்
இப்பெயர் பெற்றது. தலவிசேடம் பார்க்க.
சிவலோகன்
- இத்தலத்துச் சுவாமி பெயர் சிவலோகநாதர் என்பது.
விருப்பினுடன்
- தாம் செய்யும் திருப்பணிகளை மிகவும் விரும்பிச்
செய்தல் வேண்டும் என்ற மனநிலை குறித்தது.
அருத்தியினால்
ஒருப்பட்டு - அத்திருத்தலத்திற் றிருப்பணிகள்
செய்வதற் கென்றே மனவொருமைப்பாடு பெற்று, இது ஆதனூரினின்றும்
புறப்படும் போது அவரது ஆர்வமிகுந்த மனநிலை குறித்தது.
வருத்தமுறும்
காதல் - ஆதனூரினின்றும் வழிக்கொண்டு
திருப்புன்கூருக்கு வரும்போதும், அங்கு வந்தணைந்தபோதும் உள்ள
அவரது மனநிலை குறித்தது. தம்பணிகள் வேண்டுவன - வேண்டுவனவாகிய
பணிகளுள் தமக்குரியவை. இவை முன் மூன்று பாட்டானும் கூறப்பட்டன.
வேண்டுவன என்பது அத்திருத்தலத்திற் பொருந்துவன என்ற பொருளில்
வந்தது.
|