பக்கம் எண் :


1390 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
1074.



திருவுடைய தில்லைவா ழந்தணர்கள் கைதொழுதார்;
பரவரிய தொண்டர்களும் பணிந்துமனங் களிபயின்றார்;
அருமறைசூழ் திருமன்றி லாடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாரா மறைமுனிவர்,  34
 
1075.





தில்லைவா ழந்தணரு முடன்செல்லச் சென்றெய்திக்,
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத்
                               தொழுதிறைஞ்சி,
யொல்லைபோ யுட்புகுந்தா; ருலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் ரியாவர்களுங்
                               கண்டிலரால். 35

     1074. (இ-ள்.) வெளிப்படை. (உடனிருந்து கண்ட) திருவுடைய
தில்லைவாழந்தணர்கள் கைகூப்பித் தொழுதனர்; போற்றற்கரிய சிறப்புடைய
திருத்தொண்டர்கள் பணிந்து மனமிகக் களிப்படைந்தனர்; அரிய வேதங்கள்
சூழ்ந்து துதிக்கும் திருமன்றினிடத்தில் அருட்பெருந் திருக்கூத்தாடுகின்ற
திருப்பாதத்தை வணங்கும்பொருட்டுத் திருநாளைப் போவாராகிய
மறைமுனிவர் வருகின்றார்; 34

     1075. (இ-ள்.) வெளிப்படை. தில்லைவா ழந்தணர்களும்
உடன்வரச்சென்று திருநகரத்தின் உள்ளே சேர்ந்து, கொல்லை மானை
ஏந்திய கையினையுடைய சிவபெருமானது திருக்கோபுரத்தைத் தொழுது
வணங்கி விரைந்து போய் உள்ளே புகுந்தனர். உலகெலாம்
உய்யும்பொருட்டு அருட் கூத்தாடுகின்ற எல்லையினைத் தலைப்பட்டனர்.
அதன்பின் அவரை யாரும் கண்டிலர். 35

     1074. (வி-ரை.) திருவுடைய தில்லைவா ழந்தணர் -
"உலகுக்கெல்லாம் திருவுடை யந்தணர்" என்றது திருவிருத்தம்
(கோயில் - 2). "திருநடம் புரிவார்க்காளாந் திருவினாற் பொலிந்த சீரார்"
(354) என்றவிடத் துரைத்தவை பார்க்க.

     கைதொழுதார் - கனவினிடைப் பெருமான் அருள் செய்தபின்,
முன்பு மதிற்புறத்திலே நந்தனாரைக் கண்டபோது, "இது என்னாமோ"
என்றச்சம் தோன்றச் செய்வதறியாது நின்ற அந்தணர்கள், திருவருள்
வெளிப்பாட்டின் அற்புதத்தைக் கண்டவுடனே கைதொழுதனர் என்பதாம்.
தொண்டர்கள் கீழ் விழுந்து பணிந்து மிக்க களிப்பில் மூழ்கினார்கள் என்க.

     அருமறை சூழ் திருமன்று எனவும், அருமறை சூழ் கடல்
எனவும் கூட்டி உரைக்க நின்றது. "மன்றுளாடு மதுவின் னசையாலே
மறைச்சு ரும்பறை புறம்" (242), "மறைச் சிலம் பரற்ற" (251)
என்றவிடங்களிலுரைத்தவை பார்க்க.

     ஆடுகின்ற கழல் - குஞ்சிதபாதம்; எடுத்த திருவடி. இக்கூத்து
எக்காலத்தும் நிகழ்ந்துகொண்டே யிருப்பதாதலின் ஆடுகின்ற என
நிகழ் காலத்தாற் கூறினார். "உலகுய்ய நடமாடும்" என, மேல்வரும் பாட்டிற்
கூறுவதுங் காண்க.

     கழல் வணங்க வருகின்றார் - இதனையே ஆதனூரில் தாம்
தங்கிய காலம் முதல் பல நாள்கள் கருதியிருந்தாராதலின் பலநாட்டங்கிய
உள்ளக்கிடை முற்றுப்பெறும் அளவில் ஆர்வத்தோடு வருவாராயினர்
என்பதாம்.

     வருகின்றார் - நாளைப்போவேன் என்று முன்னர் எதிர்காலத்துப்
பன்னாள் கருதியிருந்த பொருள், நிகழ்காலத்துக் கைகூடக் கிடைத்த
பேற்றினை வருகின்றார் என்று வினைமுடிபினாற் சுவைபடக் கூறிய அழகு
காணத்தக்கது.

     மறை முனிவர் - 1072-ல் எழுந்த திருக்கோலக் குறிப்பு. 34