பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1389

 

      தீயில் உடல்விட்ட நிலை ஒவ்வோருயிரும் எய்தியே தீர்தல்
வேண்டுமென்றும், இங்கு அஞ்ஞான உடல்போய் ஞான உடல்
வந்ததென்றும், புலை உடல் போய் மறையவர் உடல் வந்ததென்று
கொள்ளற்க என்றும் இங்குப் பலவாறு விசேட ஆராய்ச்சியுரை
காண்பாருமுண்டு. அவை பொருந்தாமை மேற்காட்டப்பட்டது. பின்னரும்
காட்டப்படும். முன்னர்ப் பிறவியினாற் றாமே தடையுண்டு நின்ற நந்தனார்,
வெண்ணூலும் வேணிமுடியும் கொண்டு எழுந்தபோது தாம் மன்றினடம்
கும்பிடத் தடையாய்நின்ற இழிபிறவிநீங்கி அதற்குத் தகுதியாகிய திருவுடல்
பெற்றவராய் எண்ணியே திருமன்றில் ஆடுகின்றகழல் வணங்க
வருவாராகுவர். "மண்ணிலிரு வினைக்குடலாய் வானிரயத் துயர்க்குடலா,
யெண்ணிலுட லொழியமுய லிருந்தவத்தா லெழிற்றில்லைப்,
புண்ணியமன் றினிலாடும் போதுசெயா நடங்காண, நண்ணுமுட
லிதுவன்றோ நமக்குடலாய் நயந்தவுடல்" என்ற கோயிற்புராணத்
திருவாக்கின் (பாயிரம் - 14) கருத்துப்படி நின்றது அவர்தம் மனநிலை.
இறைவர் வகுத்த ஆகமமுதலிய அறநூல் விதி வழிபாட்டு நியதியும்
முட்டுப்படாது முற்றுப் பெறுவதாயிற்று என்பதும் காண்க.

     வெண்ணூல் - முப்புரியாகிய வெள்ளிய பூணூல். வேணிமுடி -
சிரத்திற்றாங்கிய சடைமுடி. சடை - சைவத்தின் சிறந்த அடையாளம்.

     முந்நூல் விளங்க - என்பதும் பாடம். 32

1073.



செந்தீமே லெழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
வந்தணன்போற் றோன்றினா; ரந்தரதுந்துபிநாதம்
வந்தெழுந்த துயர்விசும்பில்; வானவர்கண் மகிழ்ந்தாரத்துப்
பைந்துணர்மந் தாரத்தின் பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.   33

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு செந்தீயின்மேல் வந்து
எழுகின்றபோது செம்மலரின்மேல் வந்து எழுந்த அந்தணன் போலத்
தோன்றினார்; அப்பொழுது பெரிய ஆகாயத்தில் வான துந்துபி முழக்கம்
எழுந்தது; தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்துப் புதிய இதழ்களை உடைய
மந்தாரத்தின் புதுமலர்மழைபொழிந்தனர்.

     (வி-ரை.) செந்தீ - செம்மலருக்கும், தீயின் எழுந்த நந்தனார் -
செம்மலர்மேல் எழுந்த அந்தணனுக்கும் உவமை. செம்மலர் - திருமாலின்
செந்தாமரை போன்ற உந்தித் தாமரை. வந்தெழுந்த அந்தணன் -
பிரமதேவன். படைப்புக் காலத்தில் மாலின் உந்தியினிடத்திருந்து பிரமன்
தோன்றுவான் என்பது நூன் முறை. முன்னை இழிபிறவியின் பொய்தகையும்
(மாய) உருவொழித்துச், சிவபிரான் அருட் சிருட்டியிற்பட்டு, முனிவடிவாய்
வருதலின் சிருட்டிக் காலத்தில் உலகம் படைத்தற்பொருட்டு
உண்டாக்கப்பட்டு வரும் பிரமனைப் போன்று நந்தனார் விளங்கினார்
என்றபடி. மெய்யும் வினையும் பற்றி வந்த உவமம்.

     எழும்பொழுது - என்றதனால் தீயின்மேல் எழுகின்ற அப்போது.
அந்த அளவில்.

     தோன்றினார் - எழும்பொழுது அத்தோற்றத்துடன் விளங்கினார்.
பின்னர் மன்றினடம் கும்பிடச் சென்றணையும்போது இவ்வுவமை
செல்லாதென்பது குறிப்பு. பின்னர்ப் பிரமன் இவருக்கு ஒப்பாகான் என்பது
கருத்து.

     அந்தர துந்துபி நாதம்வந்து எழுந்தது - என்க. திருவருள்
வெளிப்பாட்டினால் தேவதுந்துபிகள் தாமே முழங்கின என்பதாம்.

     மந்தாரம் - தேவருலகத்துள்ள ஏழுமரங்களுள் ஒன்று.

     மாரிகள் - பல இடத்தும், பலகாலமும் என்று குறிக்கப்பன்மையிற்
கூறினார். 33