ஞானத் தழலுற அழிந்து
போமே" (89) என்ற சிவப்பிரகாசத் திருவாக்கும்
இங்குக் கருதத்தக்கது.
அந்தமிலா
ஆனந்தப் பெருங்கூத்தர்- தில்லை நடனங்
கூற
நேர்ந்த இடமெல்லாம் இவ்வாறு கூறித் திளைத்து நிற்பது ஆசிரியர் மரபு.
"ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர், தேனுந்து மலர்ப்பாதத்
தமுதுண்டு" (திருநாவுக்கரசு - புரா - 101) "ஆனந்த எல்லையில்
தனிப்பெருங் கூத்தின், வந்தபே ரின்ப வெள்ளம்" (252) முதலியவை
காண்க. "அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே" என்ற
திருவாசகத்தினை இது நினைவுறச் செய்தலையும் காண்க. பெருங்கூத்தர் -
இது ஒப்பதாகிய கூத்துப் பிறிதில்லையாதலின் பெருங்கூத்தென்றார்.
"தனிப்பெருங்கூத்தின்" என்றதும், பிறவும் காண்க. 36
1077.
|
மாசுடம்பு
விடத்தீயின் மஞ்சனஞ்செய் தருளியெழுந்
தாசின்மறை முனியாகி யம்பலவர் தாளடைந்தார்
தேசுடைய கழல்வாழ்த்தித் திருக்குறிப்புத்
தொண்டர்வினைப்
பாசமுற முயன்றவர்தந் திருத்தொண்டின்
பரிசுரைப்பாம்.
37 |
(இ-ள்.)
வெளிப்படை. மாசு பொருந்திய உடம்பினை விடும்பொருட்டுத்
தீயிலே குளித்தருளி மேல் எழுந்து குற்றமற்ற மறைமுனிவராகி
அம்பலவாணரின் திருவடியடைந்தாரது தேசுடைய திருவடிகளை வாழ்த்தி,
அத்துணையானே திருக்குறிப்புத்தொண்டர் என்கின்ற
வினைப்பாசம்
போக்க முயன்றவருடைய திருத்தொண்டின் பரிசினை இனி உரைப்போம்.
(வி-ரை.)
ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை
வடித்து முடித்துக் காட்டி வருஞ் சரிதத்திற்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
மாசுடம்பு
- மன்றினடங் கும்பிடத் தடைசெய்த
"இன்னல்தரு மிழிபிறவி" என்றுதாம் எண்ணிய குற்றமுள்ள உடல். மாசு
உடம்பு - மாயா வுடம்பு எனவும், இது எல்லார்க்கும் இப்பதென்றும்
உரைகொள்வாருமுண்டு. எல்லா உடம்பும் மாசுடம்பு என்பது ஒருவகையில்
உண்மையேயாயினும் இங்கு நந்தனார் கொண்டதாக ஆசிரியர் கருதிவைத்த
பொருள் அதுவன்று. "உறுகுலத் தோடிசைவில்லை" (1061), "அல்குந்தங்
குலநினைந்தே" (1063), "எனக்கெய்த லரிது" (1065), "இழிபிறவி யிதுதடை"
(1067) எனவரும் இடந்தோறும் நந்தனார் தமது புலைக்குல உடம்பினையே
கருதி வருந்தினாரென்பதறியப்படும். அதனை விட்டுத் தடையின்றி
மன்றினடங் கும்பிடும் நல்லுடம்பு பெறுதற் பொருட்டே திரு அருளின்படித்
தீக்குளித்தாராதலின் அப்பொருள் பொருந்தா தென்க.
தாளடைந்தார் - "நடமாடு மெல்லையினைத் தலைப்பட்டார்" என்ற
அந்தநிலை.
தேசு
- ஒளி. தேசுடைய கழல் என்றது அருளொளியிற்
கலந்து
திகழும் திருவடி என்றபடி. (இதனை) வாழ்த்தி (அதனை) உரைப்பாம்
என்றதனால் வாழ்த்துவதனாற் பெற்றஅருளின் றுணைகொண்டு உரைப்போம்
என்றதாம். இவ்வாறே எங்கும் கொள்க.
திருக்குறிப்புத்
தொண்டர் வினைப் பாசமற முயன்றவர் -
திருக்குறிப்புத் தொண்டர் என்ற பெயரினையுடையராய், வினைப்பாசத்தை
அறுக்கும்படி முயன்றவர் என்க. திருக்குறிப்புத் தொண்டர்
- காரணப்
பெயர்; மேல்வரும் புராணம் 112 பாட்டுப் பார்க்க. அற - அறுக்க.
பாசமற
முயன்றவர் - இதனை அப்புராணம் 114-ல்
விரித்துரைத்தமை காண்க.
|