தம்முட் பித்தரைப்
போலப் பிதற்றுவார்" (குறிஞ்சி - திருவாரூர் 4 அப்பர்)
என்ற தேவாரங்கள் காண்க. பித்தனென -
என - போல என்று உவம
உருபாகக் கொண்டு பித்தனைப்போல மெய்த்தொண்டர் பிதற்றுதலால்
என்றுரைத்தலுமாம். இப்பொருளில் மெய்த்தொண்டர் பித்தன்போலப்
பிதற்றுவாராயின்யாவர் உண்மை யறிந்து உரைக்கவல்லார் என்று கொள்க.
"பித்தனொப் பானடித் தொண்டனா ரூரன் பிதற்றியவை" (கொல்லிக்
கௌவாணம் - முதுகுன்றம் - 11) என்ற நம்பிகள் தேவாரம் காண்க.
பித்தனெனப்
பிதற்றுதலால் இதன் உண்மை அறிந்து உரைக்க
இசைந்து உலகில் யாவர் எழுவார்? என்றது ஆட்கொண்டு இன்பந்தர
வந்த தம்மைப் "பித்தன்" என்றிகழ்ந்ததனையும் புகழ்ந்ததுவாகக்
கொண்டதுமன்றி, அவ்வண்ணமே பாடுக என்று மகிழ்ந்தும் கொண்டது
போலத், தந்தையைத் தாள்அற எறிந்த பாதகத்தையே புண்ணியமாகக்
கொண்டு பரிசும் கொடுத்தனர்; ஆதலின் இதன் உள்ளுறையை எவரும்
அறிந்து சொல்ல வல்லவரல்லர் என்றதாம். யாவர் என்ற
வினா ஒருவரும்
இலர் என்று இன்மை குறித்தது. "ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு,
பித்தர் காணும் பெருமானடிகளே" (கடவூர் மயானம் - 5) என்ற
குறுந்தொகையிற் பித்தரியல்பு வகுத்தமை காண்க.
யாவர்
அறிந்து இசைக்க - மாபாதகம் தீர்த்த திருவிளையாடலின்
வரலாறும் "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" என்ற திருவாசகமும்,
"பாதகத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே" என்ற
திருப்பல்லாண்டும் இங்குக் கருதத் தக்கன. பரிசு
உரைக்கேன் - என்ற
குறிப்பும் அது.
உண்மை
- உள்ளது - உள்ளுறை. அறிந்து - உரைக்க - இசைந்து
- எழுவார் - அறிதலும், அறிந்தாலும் அதனை உரைத்தலும், உரைப்பேன்
என்று இசைந்து எழுதலும் ஒன்றன்மே லொன்றா அரிய செயல்களாமென்பது
குறிப்பு.
இவ்வாறு சொல்ல அரிய செயலினுள் புகுகின்றேன் என்ற
அச்சத்தினையும் பணிவினையும் புலப்படுத்தியபடி. தாதை தாள் எறிந்த கதை
என்றிகழ்ச்சியாய் எண்ணிக் கழியாமல், அதனை இறைவர் ஏற்றுப் பரிசுவைத்த
அறியலாகப் பெருமையினையே எண்ணிப் பத்திசெய்து கேட்குமாறு
எச்சரித்தபடியுமாம். "பித்த" னென் றிகழ்ந்தது நன்றி கொன்ற சிவநிந்தையாகிய
பெரும்பாதகமாயினும், அங்ஙனமாகாது சிவனைப் போற்றிய பெரும்
புண்ணியமேயாயினமையும் கருதுக என்று வற்புறுத்திய படியுமாம். 128
சரிதச்
சுருக்கும் நாடு
தொண்டை
நன்னாடு பெருமையும் மேன்மையும் தொன்மையும்
உடையது; தன்னிடத்து உமையம்மையார் தவஞ்செய்து தலைவரைத் தழுவத்
தவஞ்செய்து பெற்றது; நடுநிலை பொருந்திய நல்லொழுக்கந் தலைசிறந்த
பெருங்குடிகள் தழைத்து வாழ்தற்கிடமாவது; பழையனூர் வேளாளர்கள்
எழுபதின்பர் ஒரு வணிகனுக்குத் தாம் கூறிய சொல்லைத் தம் உயிரினும்
சிறந்ததாகக்காத்துத் தீப்புகுந்த மேன்மை யுடையது; சேரநாட்டு வீரர்கள்
மைத்துன முறை கொண்டாடி நட்புக் கொள்ளும் பழஞ்சரிதத்
தொடர்புடையது.
நானிலம்
- ஐந்திணை வளம்
குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், என்ற நானிலப் பகுதியும்,
அவற்றோடு பாலையும் விரவிய ஐந்திணை நெறியும்
தத்தம் இயல்பிற்
செழித்துச் சிவத்தன்மை வெளிப்படக் காணுமாறு ஓங்கி உலகுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும் தன்மையுடையது இந்நாடு.
|