பக்கம் எண் :


திருக்குறிப்புத்தொண்டநாயனார்புராணம்1533

 

குறிஞ்சி

     அவற்றுள்ளே, மலைச்சாரல்களில் அருவிகள் பாய, இறவுளர் தினை
விளைக்கும் புனங்களும் சீறூர்களும் உடையதாய் விளங்கும் இந்நாட்டுக்
குறிஞ்சியானது, மால்விடை யெந்தையார் திருக்காளத்தியையும், அண்ணலார்
திருவிடைச்சுரத்தினையையும், உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றத்தினையும்
தன்னகத்துக் கொண்டு விளங்கத் தவஞ்செய்து பெற்றது.

பாலை

     முல்லையையுங் குறிஞ்சியையும் அடுத்த சில்லிடங்களில் வேனிலும்
கடும்பகற்பொழுதும்பற்றி, நீலிகோட்டங்களும் நிரந்து, பாலையென்றும்
சொல்லலாகும் பரன்முரம்புகளும் உள்ளன.

முல்லை

     அந்த எல்லையின் புறத்தே கானியாறுகள் இடையிடை பரந்துவரக்,
குருந்த மரங்களின் மேற்படர்ந்த முல்லைப் புதர்களையுடைத்தாய் இடையர்
சேரிகளில் ஆனும் மானும் திரியும் முல்லை, நிலப்பரப்பு மிக உள்ளது.
முல்லையின் தெய்வமென்று தமிழின் பொருளிலக்கணம் பேசுகின்ற திருமால்
வழிபட்ட திருமுல்லைவாயிலும், கங்கைநீர் எப்போதும் ஊறிவரும்
திருவூறலும் இம்முல்லை நிலத்தில் விளங்குவன.

மருதம்

     முல்லையைச் சூழ்ந்த மருதநிலத்திற் பல நதிகளும் ஓடிக், குளமும்,
ஏரியும் புகுந்து, வயல்களைச் செழிக்கச் செய்வன. காமதேனுவின் பால்
ஆறாகப் பெருகி நந்திமலையினின்றும் ஓடிவரும் பாலாறு, பிள்ளைகள் தமது
சிறுகைகளாற் தடவப் பால்பெருகும் முலையுடைய தாயினைப்போல,
மள்ளர்கள் வேனிலில் மணற்றிடர்களைப் பிசைந்து கையினால் தொழில்
செய்யக் கீழே சுரந்து ஓடிவர, அந்த நீர்வெள்ளம் கால்களின்வழி மிதந்து
ஏறிப் பள்ளவயல்களின் பெருமடைகளையும் உடைத்துப் பாயும்
செழிப்புடையது. இவ்வாறு நீர்வளமும் நிலவளமும் சேர்தலாற் செந்நெல்லும்,
வாழையும், உயர்கழைக்கரும்பும் கமுகும், தென்னையும், பலாவும், மாவும்
சோலைகளாகச் செழித்துப் பயன் தருவன.

     விருந்தெதிர் கொள்ளும் மேன்மையுடைய பெருங்குடிகளும், இல்லறம்
புரிந்து வேள்விசெய்து மழைக்குக்காரணமாய் விளங்கும் செல்வமறை
யோர்களும் நிறைந்த செழும் பதிகள் பல அங்கு உள்ளன.

     மறையவர் திருவல்லமும், கங்கைவாழ் சடையார் திருமாற்பேறும்,
யானையுரித்தவர் இருந்த திருப்பாசூரும் தன்னகத்துத் திகழ்ந்திருக்கத் தவம்
புரிந்தது இந்த மருதமாகும்.

நெய்தல்

     இதன் புறத்ததாய்க், கொழுமீன் கவர்ந்தும், பவளம் முத்து முதலிய
மணிகள் படுத்தும், பரதவர் வாழும் கடற்கரை சூழ்ந்த விடங்களில்
கைதையும் புன்னையும் பூக்கும் சூழல்களுடையதாய் உள்ளது நெய்தல் நிலம்.
இறைவரது திருவொற்றியூர், திருமயிலாப்பூர், திருவான்மியூர் முதலாகிய
பெருந் தலங்களைத் தன்னகத்துக்கொண்டு விளங்க இந்நெய்தல் செய்தவந்
நிறைதவம் சிறிதாமோ?

     புணர்நிலங்கள் - திணை மயக்கம் (1) நெய்தலுங் குறிஞ்சியும்
புணர்ப்பாகிய நிலங்கள் மாட மாமல்லை முதலியவை போன்ற பல இடங்கள்
உண்டு. இவைபோலவே (2) மருதமும் குறிஞ்சியும் (3) முல்லையுங் குறிஞ்சியும்
கூடிய புணர்ப்பு நிலங்கள் பலவுள்ளன. இவ்வாறே (4) நெய்தலும் முல்லையும்
(5) மருதமும்முல்லையும் இயைவனவாகிய நிலங்களும் உண்டு. மேலும் (6)
நெய்தலும் மருதமும் மயங்கிய நிலங்களும் காணவுள்ளனவாம்.

     இவ்வாறு நானிலத்தமைதியிலும் தத்தமக்கடுத்த செய்தொழில் வேறு
பல் குலங்களில் விளங்கித் தீமையென்பன கனவிலு நினைவிலாச்
சிந்தைத் தூய மாந்தர் வாழும்
சிறப்புடையது தொண்டைநன்னாடு.