பக்கம் எண் :


திருக்குறிப்புத்தொண்டநாயனார்புராணம்1537

 

     அவரைநேர்நோக்கி இறைவர், "உனது அன்பு நிலையினை
மூவுலகுக்கும் அறிவித்தோம். நீயும், இனி, நம்முடைய நிலைத்த
சிவலோகத்திற் பிரியாது வாழ்வாய்!" என்று அருள்புரிந்து திரு ஏகாம்பரத்தில்
எழுந்தருளினர்.

     தலவிசேடம் :- திரு ஏகாம்பரம். இது உலகத்திற்கெல்லாம் தாயாகிய
அம்மையார் இறைவரிடத்துக் கேட்டருளிய ஆகமவழி உலகமுய்ய
இறைவரைப் பூசிக்கும் பொருட்டுக் கயிலையினின்றும் இங்குப் போந்தருளிக்
கம்பையாற்றின் கரையில் மாவடியில் திருவருளால் முளைத்தெழுந்த
சிவலிங்கக்குறி கண்டு பூசித்துத் திருக் காமக்கோட்டத்தில்
எழுந்தருளியிருந்து அறம் வளர்த்து உலகுயிர்களைக் காத்துவரும்
பெருமையுடைய தலம். தாம் பூசை செய்யும்போது கம்பையாறு பெருகிவர,
அம்மையார் நடுங்கி இறைவரைத் தழுவிக்கொண்ட காரணத்தால் கோயில்
ஏகம்பம் எனப் பெயர் பெற்றது. (கம்பம் - நடுக்கம்). அம்மை
வளைக்கையால் நெருக்கி இறுகிடத்தழுவ இறைவனார் தமதுதிருமேனி
குழைந்து காட்டி வளைத்தழும்பும் முலைச்சுவடும் அணிந்து கோலங்காட்டி
யருளித் தழுவக் குழைந்த நாதராயினர். ஏகாம்பரம் என்ற பெயரும்
இத்திருக்கோயிலுக்கு வழங்கும். அது வேறு பொருள் கொண்டது.
(ஏகாம்பரம் - ஏகம் - ஒன்று; ஆம்ப்ரம் - மாமரம் - ஒற்றை
மாமரமுடையது. அம்ப்ரம் - ஆம்பரம் எனத் தற்பவமாயிற்று). மாவடியில்
இறைவனார் அமர்ந்து இருக்கை கொண்டதனால் இப்பெயர் வழங்குவதாகும்.
முத்தித்தலங்க ளேழனுள் முதன்மை பெற்றது. ஐம்பூதப் பெருந்தலங்களுள்
முதலாவது; பிருதுவித்தலம் என்பர். இதன் எல்லையுள் திருக்காமக்
கோட்டம், திருக்குமர கோட்டம், கச்சபேசம் முதலிய விளக்கமாக
எண்ணிறந்த தளிகள் உள்ளன. திருவேகம்பத்தில் தெற்குத் திருவாயிலில்
ஆயிரக்கான் மண்டபத்தின் முன்புறம் விகடசக்கர விநாயகர் விளக்கமாக
எழுந்தருளியுள்ளார். முதலை வாயினின்றும் காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்ட
யானை அத்திகிரி என்னும் மலையாக அமைய, திருமால் வரதராஜர்
என்றபெயருடன் கோயில் கொண்டுள்ளார். திருவொற்றியூரில் சபதம்
பிழைத்த காரணமாக இரண்டு திருக்கண்களும் மறையப்பெற்ற ஆளுடைய
நம்பிகளுக்கு இடதுகண் கொடுத்தருளிய தலம். இப்புராண
சரிதமுடையாராகிய திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டுசெய்து
திருவடியடைந்த வரலாறு இப்புராணத்துட் கூறப்பட்டது. அன்றியும்
சாக்கியநாயனாரும், ஐயடிகள் காடவர்கோன்நாயனாரும் அருள்பெற்ற
தலமுமிதுவாகும். முறையே பிரமா, விட்டுணு, உருத்திரர் பூசித்த
வெள்ளைக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லகம்பம் என்ற இலிங்கமூர்த்திகள்
ஏகாம்பரத்தில் தெரிசிக்க உள்ளன. ஊழியில் தேவர்களைச் சமிதையாகக்
கொண்டு சிவனார் வேள்வி செய்த திருக்கச்சிமயானம் என்ற தலம் (தேவார
வைப்புத் தலம்) திருவேகம் பத்தினுள் கொடி மரத்தின் முன் உள்ளது.
இதுவன்றிச் சிவசாரூபமெய்தத் தவஞ்செய்திருந்த விட்டுணு, ஆளுடைய
பிள்ளையார் திருப்பதிகத்தைக் கேட்டு உருகிச் சிவலிங்க உருவமாய்
அமைந்த திருக்கச்சி மேற்றளி என்பதும், ஓணன் காந்தன் என்ற அசுரர்கள்
பூசித்த திருவோணகாந்தன்றளி என்பதும், விநாயகர் குபேரன் முதலியயோர்
பூசித்த திருக்கச்சியனேகதங்காவதம் என்பதும், இந்திரன் புதன் முதலியோர்
பூசித்த திருக்கச்சி நெறிக் காரைக்காடு (காரை வனத்தில் உள்ளது) என்பதும்
இத்திருநகர எல்லைக்குள் உள்ள தேவாரப் பாடல்பெற்ற நான்கு தலங்களாம்.
தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற தலங்கள் முப்பத்திரண்டனுள் ஐந்து
தலங்கள் இந்நகர எல்லையுள் தரிசிக்க உள்ளன. இந்நாயனார் அருள் பெற்ற
தலம் முத்தீசர் கோயில் எனப்பெறும். 193