குற்றங்கள் இந்நகரத்திற்
செய்யுளணி வகையான சொல்லளவினாலன்றிப்
பொருள்வகையாற் காணக்கிடையா. தன்னை வந்தடைந்த தேவர் மக்கள்
நரகர் முதலிய யாவர்களும் அவ்வவர் கருதிய வேட்டைகள் ஒன்றும்
ஒழியாமல் பெறும் படி உதவுவது இந்நகரம்.
நாயனார்
சரிதம்
இத்திருநகரத்திலே,
ஒரு மருங்கிலே, ஏகாலியர் குலத்தில் அவதரித்த
ஒருவர் அன்புடைய திருமனமும், ஒழுக்கநெறிச் சீலமும், சிவனடிமைத்
திறத்தில் வழிவழித் தொண்டும் உடையாராய் விளங்கினார். அவர் பிறந்த
நாள்முதல், மனம் மொழி மெய் என்ற மூன்றினையும் சிவன்சேவடிச் சார்வாக
அணைவிப்பார்; சிவனடியார்களுடைய திருவுள்ளக் குறிப்பினை அறிந்து
போற்றும் திண்மையினால் அவர் தமக்குத் திருக்குறிப்புத்தொண்டர்
என்ற
பெயர் வழங்கும் சிறப்புடையவராயினார். அவர் காஞ்சி நகரில் ஊராருக்கு
ஒலிக்கும் பெருவண்ணார் எனச் சொல்லலாகாத உண்மையிற் சிறந்தவர்;
சிவபெருமானது பெயரைச் சொன்னமாத்திரத்தில் உருகும் மனத்தினையுடைய
அடியார்க்குப் பெருவிருப்பத்தோடும் ஒலித்துக் கொடுப்பர். சிவனடியாரது
துணிகளின் துகள் மாசினைக் கழிப்பார் போலத் தம்முடைய மும்மலப்
பிறவியாகிய மாசினை விடும்படி கழித்து வருவாராயினார்.
ஒருநாள் சிவபெருமான்
அவரது உண்மைத் தொண்டினிலைகண்டு
அருள்புரியும் பொருட்டுச் சீதம் மலியும் காலத்தில் ஏழையாய் மிக
அழுக்குடைய ஒரு கந்தையைத் தாங்கிக்கொண்டு அன்பர் முன்பு
வந்தருளினர். தொண்டனார் அவரைக் கண்டு மகிழ்ந்து எதிர்கொண்டு
பணிந்து, அவர் குறிப்பு அறிந்து, "ஐயனே! உமது திருமேனி
இளைத்திருந்ததென்? நீர் தாங்கும் இக்கந்தையைக் கழுவத் தந்தருள்வீராக!"
என்று வணங்கிக் கேட்டனர். அதற்கு அவர் இக்கந்தை அழுக்கேறி, இனி,
மேலே தாங்க ஒண்ணாதிருப்பினும் குளிரினால் வருத்தம் பொறுக்க முடியாது
இதனைவிடமாட்டேன். மாலைக்குள் ஒலித்து உலர்த்திக் கொடுப்பீராகில்
கொண்டுபோய் விரைவில் ஒலித்துக்கொண்டு வாரும்" என்றனர்.
தொண்டனார் "அவ்விதமே அந்திபடுவதன்முன் தருகின்றேன்" என்று கூறத்,
தவசியார், விரைவில் கொண்டுபோய்த் தோய்த்துலர்த்தி மாலைப்
பொழுதுக்குள் கொடாவிட்டால் இந்த உடலுக்கு இடர் செய்தவராவீர்" என்று
சொல்லிக் கந்தையினைக் கொடுத்துப் போயினர்.
தொண்டனாரும்,
குறித்த நேரத்திற் கொடுப்பதற்காக, அதனைக்
கொண்டு சென்று நீர்த்தடத்தில் உரியபடி தோய்த்துப், புழுக்கிப்,
பிறித்தொலிக்கப் புகும் போது திருவருளினால் மழை எழுந்து செறிந்து
பொழிந்தது. தவசியாரிடத்துத் தமது இசைவினை நினைந்து, தொண்டனார்
"யான் என் செய்கேன்!" என்று நின்றார். ஓயாது பொழியும் மழை ஒருகால்
விட்டு ஒழியுமோ? என்று சிறிது போது நின்றனர். மழைவிடக் காணார்.
"அடியாரிடத்து எனது குற்றேவல் அழிந்ததே! மழை ஒழியாது குறித்த கால
எல்லை கழிந்தது. முன்னரே ஒலித்து, மனையில் காற்றேற்க உலரவைக்க
அறியாது போயினேன். செழுந்தவருடைய திருமேனி குளிர்காணும் தீங்கினை
இழைத்த தீமையுடையேனுக்கு, இனி, இதுவே செயல்! கந்தை புடைக்கும்
கற்பாறையில் எனது தலையைச் சிந்த மோதுவன்" என்று துணிந்து, எற்ற,
அந்தக் கற்பாறை மிசை அணிவளைத் தழும் பேற்ற ஏகம்பநாயகரது
மலர்ச்செங்கை வந்து எழுந்து அவரது தலையைப் பிடித்துக்கொண்டது.
புனன்
மழை போய்ப் புதுமலர் மழையாய்ப் பொழிந்தது. ஏகாம்பரநாதர்
தமது துணைவியாராகிய காமாட்சியம்மையாருடன் இடபவாகனத்தில்
எழுந்தருளிக் காட்சி தந்தருளினர். தொண்டனார் கைகூப்பித் தொழுது
நின்றனர்.
|