பக்கம் எண் :


1546 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     ஐந்து புலனும் தம்மைப் பின்செல்லும் தகையார் என்க. புலன்
வழியே தாம் செல்லாமல் தம் வழி அவற்றை நிறுத்தினார். "உரனென்னும்
தோட்டியான் ஓரைந்தும் காப்பான்" (குறள்), "மாறிநின் றென்னை மயக்கிடும்
வஞ்சப் புலனைந்தின்வழியடைத்து", "ஆட்டுத்தேவர்தம்வழியொழித்து"
(திருவாசகம்), "தருமந்தன் வழிச்செல்கை" (129) முதலியவை காண்க.

     அறுதொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் - அறுதொழிலாவன: ஓதல்,
ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பர். மெய்ம்மை
ஒழுக்கம் என்றது இந்த அறுதொழிலிலும் உண்மை நிலையில் ஒழுகுதல்;
அஃதாவது உண்டிப் பொருட்டானும் அது போன்ற வேறு
காரணங்களானுமன்றி இறைவன் சாட்சியாய் அவ்வொழுக்கத்தைப்
பாதுகாத்தற் பொருட்டாகவே அத்தொழிலின் ஒழுகுதல்.

     மறையோர் விளங்குவது - மறையோர்கள் நிறைந்து விளங்கும்
ஊர். "தந்தகைமைக் கேற்றதனி யிடங்கண் மேவி" (1180) என்றபடி பற்பல
குலபேதத்தரும் தனித்தனி அங்கு இடம் பெற்று வாழும் நகரங்களும்,
அவ்வாறன்றிச் சீறூர்களாய் ஒரே குலத்தவர் தனியாக வாழ அமைக்கப்பட்ட
நகரங்களும் என்று ஊர்கள் இருவகைப்படும். இவ்வாறு தனி
மரபினர்க்கென்று ஊர்கள் அமைப்பது முன்னாளிலும் இந்நாளிலும்
வழக்கமாகும். சேய்ஞலூர் - மறையோர் தனித்துக் குடியிருக்கை
கொண்டவூர். அக்கிரகாரம் என்பர்; இது அகரம் என்று மருவிவழங்கும்.
மறையவர்க்குத் தனியிருக்கைகளுடைய ஊர்கள் அமைப்பதும் முன்னாள்
அரசர் முதலியோர் செய்துவந்த தருமங்களுள் ஒன்றாகும். இதுசதுர்வேதி
மங்கலம் என்ற பெயராற் பழங் கல்வெட்டுக்களில் அறியப்படுகின்றது.
இச்சரிதமுடைய நாயனார் மறைச்சிறுவராதலும் உன்னுக. மறையோர்
சிறப்புப்பற்றியே 1 முதல் 6 வரை பாட்டுக்களால் நகரச் சிறப்புக் கூறிய
தகுதியும் கண்டுகொள்க. இவ்வாறே ஆளுடையபிள்ளையார்
புராணத்துக்கூறப்பட்ட நகரவளங்களும் பிறவும் இங்கு நினைவு கூர்க.

     இப்பாட்டு ஒன்றுமுதல் ஏழுவரை முறையாக அடுக்கிவரும்
எண்ணலங்காரம் என்ற அணிபெற அமைக்கப்பட்டதாம். "ஆழியொன்று"
(339) என்ற திருக்கோவையாரும் எதிர்முறையாக வரும் "மணங்கமழ்"
(புறநீர்மை - ஓமாம் புலியூர் - 6) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரமும்
காண்க.

     விளங்குவது அவ்வூர் - என்று வருவித்து முடிக்க.

     விளங்குபதி - என்பதும் பாடம். 2

1208.

கோதின் மான்றோற் புரிமுந்நூல் குலவு மார்பிற் குழைக்குடுமி
யோது கிடைசூழ் சிறுவர்களு முதவும் பெருமை யாசானும்
போதின் விளங்குந் தாரகையு மதியும் போலப் புணர்மடங்கண்
மீது முழங்கு முகிலொதுங்க வேத வொலிகண் முழங்குவன.
 3

     (இ-ள்.) வெளிப்படை. குற்றமற்ற மான்தோலுடைய முப்புரி நூலணிந்த
மார்பினையும், குழைக்குடுமியினையும் உடைய வேதம் ஓதுகின்ற கூட்டமாய்
நிறைந்த சிறுமாணவர்களும், அவர்களுக்கு வேகத்தை உதவும்
பெருமையுடைய ஆசிரியனும், இராப்பொழுதில் விளங்கும் தாரகைகளும்
சந்திரனும் போலப் பொருந்துகின்ற மடங்களில், அவற்றின்மேல் சத்திக்கின்ற
முகில்கள் ஒதுங்கும் படி வேத ஒலிகள் முழுங்குவனவாகும்.

     (வி-ரை.) மீது....முழங்குவன- வேதமோதும் மடங்கள் மேகந்
தவழும்படி உயர்ந்துள்ளன; அங்கு ஒதுங்கும் மேகங்களினுடைய ஒலிகளின்
மேல் ஓங்கி அந்த மடங்களினின்று பெருகும் வேத ஒலிகள் மிகுந்துள்ளன;
வேதங்கள்,