பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1547

 

     யானைப்பிளிறல் போன்றது எனப்படும் நிஷாதம் என்ற உயர்ந்த சுரங்
கலந்து மாணவர் பலர் கூடி ஓதும்போது மேக ஒலிக்கும் மேற்பட ஓங்கி
முழங்குவன என்பதாம். ஒதுங்க - மேற் செல்லமாட்டாது ஒருபுறம் தங்க
என்க. சுர ஒலிக்குத் தம் ஒலி தாழ்ந்தமையால் வெள்கி ஒருபுறம் ஒதுங்க
என்று தற்குறிப்பேற்ற வணி பெற நின்ற குறிப்பும் காண்க. 81, 834 பார்க்க.

     சிறுவர்களும்....புணர்மடங்கள் - சிறார் பலரும் ஆசான்
ஒருவருமாதலின் தாரகையும் மதியும்போல என்றார். சூழ் - சந்திரனைத்
தாரகைகள் சூழ்ந்திருப்பது போல ஆசானை மாணவர் சூழ்ந்திருப்பர் என்பது,

     போதின் விளங்கும் தாரகை மதியும்போல - போதின் -
இராப்பொழுதில். பொழுது என்பது போது என நின்றது. தாரகையும் மதியும்
பகற்போதில் ஒளி செய்யமாட்டா. ஆசான் - மாணவ ரிடைப் பொருத்தம்
தண்ணளியும் ஒண்மையும் நிலவப் பெறுதலால் வெய்யவன் நிலவும்
பகற்போதில் உவமை கூடா தாயிற்று, அன்றியும், சிற்றொளிப் பொருள்கள்
பலவும் பேரொளிப் பொருள் ஒன்றும் ஒளி விளங்க வேண்டப்படுதலால்,
பிறஒளிகளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கி ஒளி தராமற் செய்து ஞாயிறு
தானே தனியரசு செலுத்தும் பகற்பொழுது இங்கு உவமைக்குப்
பொருந்தாததாயிற்று. இவை குறிக்க (இராப்) போதின் விளங்கு என்றார்.

     அளவாற் சிறியவையாய்க் காணப்படினும் தாரகைகளும் மதியினைப்
போன்ற தனி ஒளிப்பொருள்களாதலின் ஆசானைப் போலவே தனித்தனி
அறிவொளியுடைய உயிர்ப் பொருள்களாகிய சிறுவர்க்கு ஏற்ற உவமையாயின.
ஒளியளவின் பெருமை சிறுமைகளும் உவமைக்கேற்ற தன்மை தந்தன. மதி
ஒளி விடும் காலத்தில் தாரகைகள் விளக்க முறுதலால் ஆசானால் சிறுவர்
விளக்கம் பெறுதலும் பெறப்படும்.

     அன்றியும் மதி, கோள்களுள் ஒன்றாதலின், போதின் இடையீடின்றி ஒளி
நிலவும் பொருளாமென்பதும், தாரகைகள் அவ்வாறன்றி விட்டுவிட்டு
ஒளியிமைப்பன என்பதும் இங்கு இவ்வுவமைக்குச் சுவை தந்தன. "சேண்
விளங்கியற்கை வாண்மதி கவைஇ, யகலா மீனி னவிர்வனவிமைப்ப"
(முருகு - 87 - 88)என்றதும், அவ்விடத்து நச்சினார்க்கினியர், மீன் -
உரோகிணி முதலியன. வியாழமும் வெள்ளியுமாம் என்றதும் காண்க. சிறுவர்
- முன் பாட்டிற்கூறிய மறையவர் மக்கள்.

     புணர்தல் - இங்கு உணர்வொளியால் கலத்தல் குறித்தது. தாரகை மதிஒளி வீசும்போது விளங்கினும் தாந்தாமே தனித்தனி
ஒளிப்பொருள்களாதலும் குறிக்கத்தக்கது.

     சிறுவர்களும் - ஆசானும், தாரகையும் மதியும்போலப் புணர்
என்றது வினையும் மெய்யும்பற்றி எழுந்த உவமைகள். சிறுவர் தாரகைபோல,
ஆசான் மதி போல என்று நிரனிரையாகக் கூட்டிக்கொள்க.

     ஓதுகிடை - வேதம் பயிலும் சிறுவர் கூட்டம். "மல்கு பெருங்கிடை" (1063), "வேதமுங் கிடையும்" (81) என்றவை பார்க்க.

     உதவும் பெருமை - சிறுவர்க்கு வேதத்தை உதவும் பெருமை. வேதம்
வரச் செய்யும் தன்மை.

     மான்தோல் - முந்நூல் - குடுமி - இவை மறைச் சிறுவர்களாகிய
பிரமசாரிகள் என்பார்க்குரிய அடையாளங்கள். முந்நூன் மார்பும் குடுமியும்
உடைய சிறுவர் என்க.

     கோதில் மான்தோல் - கோதில் - என்றது பிரமசரிய நிலைக்கு
உதவும் பண்பினாலும் சிறப்பினாலும் இறந்த பிராணியின் தசை சம்பந்தப்பட்ட
தோல் என்ற குற்றமில்லாத என்க. மான்தோல் தூய்மையுடையதென்பதும்
மரபு.