பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1553

 
1214.

பண்ணின் பயனா நல்லிசையும் பாலின் பயனா மின்சுவையுங்
கண்ணின் பயனாம் பெருகொளியுங் கருத்தின் பயனா
                                    மெழுத்தஞ்சும்
விண்ணின்பயனாம் பொழிமழையும்
                    வேதப்பயனாஞ்சைவமும்போன்
மண்ணின் பயனா மப்பதியின்
                    வளத்தின்பெருமைவரம்புடைத்தோ. 9

     (இ-ள்.) வெளிப்படை. பண்ணிற்குப் பயனாகும் நல்ல இசையினையும்,
பாலுக்குப் பயனாகும் இனிய சுவையினையும், கண் பெற்றதற்குப் பயனாகும்
பெருகும் ஒளியினையும், கருத்திற்கு உரிய பயனாகும் திரு
அஞ்செழுத்தினையும், விண்ணினுக்குப் பயனாகும் பொழியும் மழையினையும்
வேதத்திற்குப் பயனாகும் சைவத்தினையும் போல மண்ணிற்குப் பயனாகும்
அந்தப் பதியினது வளத்தினது பெருமை அளவுடையதாகுமோ? (ஆகாது).

     (வி-ரை.) உவமை முகத்தால் பல பெரிய உண்மைகளை
இத்திருப்பாட்டினால் ஆசிரியர், உலகம் பயன்பெறப் போதித்துப் புகட்டுதல்
காணத்தக்கது.

     பண்ணின் பயன் ஆம் நல்இசை - பண் - பாலைப்பண் முதலாயின.
இது தமிழுக்கே சிறப்பாக உரியஇசையமைதி. "பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்"
(குருகாவூர் - 6) என்ற ஆளுடைய நம்பிகளது தேவார முதலியவை காண்க.
பண்ணின் பயனாம் நல்இசை என்றது இசை கூடினாலன்றி வெறும் பண்
பயன்தராதென்பதாம். இசை என்பது இறைவனது புகழ்களை இசைக்கும்
பொருள்கூடிய தொடர்பு. திருஇசைப்பா என்றது காண்க. இசை அல்லது
இறைவன் புகழ்ப் பொருளுடன் கூடாதவழிப் பண் பாடுதல் வெறும் செவிக்கு
ஓசை இன்பமாயொழியும் என்பதும், அது மனத்தினுட் சென்று மனத்தையும்
உயிரையும் உருக்கி இறைவன் திருவடிச் சார்வு பெறுவிக்காதென்பதும்
குறிப்பித்தவாறு. "பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக, மண்ணிண்றி
விண்கொடுக்கும் மணிகண்டன்" (சீகாமரம் - புள்ளிருக்கு வேளூர் - 8.)
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், "பண்பொருந்த இசைபாடும்"
(பழந்தக்க - பழனம் 5.) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமும் காண்க.
இச்சிறப்பினையே "பண்ணி ணேர்மொழி யாளுமை பங்கரோ"
(திருமறைக்காடு - குறுந்தொகை) என்ற தேவாரமும்," பண்ணி னேர்மொழி
யாளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான்" என்ற மாபுராணமும் விரித்துக்
கூறுவனவாம். இறைவன் புகழோடு கூடாத வெறும் சங்கீதங்களில் ஈடுபட்டுப்
பணமுந் தந்து போதும் போக்கும் மாக்கள் இதனை உய்த்து
உணர்ந்துய்வார்களாக.

     பாலின் பயனாம் இன்சுவை - "அன்னைமுலைத் தீம்பாலி
னரியசுவைத் திஃது" (மண்சும - பட - 23) என்ற திருவிளையாடற்புராணங்
காண்க. பாலினை ஆட்டி அதன் பயனாகப்பெற்ற இனிய சுவையாகிய
இச்சரித விளைவினைக் குறிப்பாலுணர்த்துவதும் காண்க.

     கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் - ஈண்டுக் கண் என்றது
கண்ணுறுப்பினை. காட்டும் ஒளியாகிய ஞாயிறு முதலிய பேரொளிப்
பொருள்களும் கண்ணுக்குப் பயனாகா; காணுமொளியாகிய கண்ணொளியே
கண்ணுக்குப் பயனாம். "ஒளியுமிருளு முலகு மலர்கட், டெளிவி லெனிலென்
செய" என்ற திருவருட்பயனும் ஈண்டுக் கருதத்தக்கது. பெருகொளி
என்றதனையே "அலர்கட் டெளிவு" என்று இத் திருவருட்பயன்
குறள்வெண்பாவிற் கூறப்பட்டது. பெருகு ஒளி என்றது கண்ணுக்குச்
சிறப்பாகிய, சேய்மையிலும் சென்று அறியும் தன்மையினைக் குறிப்பதுமாம்.

     கருத்தின் பயனாம் எழுத்து அஞ்சும் - திருவைந்தெழுத்தினைக்
கருதுவதற்கே கருத்து மக்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது என்பது
உண்மைநூற் றுணிபு. "நினைக்க மடநெஞ்சம்" (தேவாரம்), "சிந்தனை செய்ய
மனமமைத்தேன்" (11 - ம் திருமுறை - பொன்வண் - 92) என்பனவாதி
திருவாக்குக்களால், சிவனை நினைத்தலே