பக்கம் எண் :


1554 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

மனம் பெற்றதன் பயனாம்; அல்லாதவழி கருத்துப் பெற்ற பயன்
இல்லையாகும் என்பது. ஐந்தெழுத்து - சிவன்றிருநாமம். "ஆலைப்
படுகரும்பின் சாறுபோல அண்ணிக்கு மைந்தெழுத்தி னாமத் தான்காண்"
(திருத்தாண்டகம் - வீழி - 2) முதலியவை காண்க. ஐந்தெழுத்தைக்
கருதுவதாவது: அவற்றின் உள்ளீடாய் அறிவிக்கப்படும், சிவன்
உயிர்களுக்குச் செய்யும் பெருங்கருணையை எண்ணி உருகுதல். "விதி
எண்ணு
மஞ்செழுத்தே" என்பது ஞானசாத்திரம்.

     விண்ணின் பயனாம் பொழி மழையும் - ஆகாயம் ஏனை
எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும் என்ப. அவ்வாறு விண் தனது
தொழிலைச் செய்வதனில் மழைக்கு இடங்கொடுத்த அளவானே அது
பயனுடைத்தாகும் என்பது. இக்கருத்துப் பற்றியே "வானின் றுலகம் வழங்கி
வருதலால்", "விசும்பிற் றுளிவீழினல்லால்" என்ற திருக்குறள்களும் போந்தன.
"வான் சிறப்பு" என்ற கருத்து மிது.

     வேதப்பயனாம் சைவம் -வேதத்தின் முடிந்த பொருள் சைவம்.
சைவம் சிவாகமப் பொருள் குறித்தது. "இனி அதர்வசிகை முதலிய
உபநிடதங்களிற் கூறும் பொருளுஞ் சிவாகமப் பொருளை நோக்கும் வழிச்,
சூத்திரமும் பாடிய மும்போலத் தூலாருந்ததி முறைமையாமாகலின், தேவம்
பொது நூலெனவும், ஆகமஞ் சிறப்புநூலெனவுங் கூறப்பட்டன. "வேதாந்தத்
தெளிவாஞ் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்" (சிவப் - பாயி -
7) என்றதூஉம் இம்முறைமை தெரிந்து கோடற்கென்க. "வேதப் பயனாஞ்
சைவமும்போல்
என்பதும் அது" என்று எமது மாதவச் சிவஞான யோகிகள்
சிவஞானமாபாடியச் சிறப்புப் பாயிரத்தினுள் இதனை விளக்கியருளியது
காண்க. 1033 - 1037 - ல் உரைத்தவையும் பார்க்க.

     மண்ணின் பயனாம் - அப்பதி - மண் - இந்நிலவுலகம்;
மண்ணாலாகிய உலகம். பிருதுவியண்டம் என்பர் வடவர். இந்தப்
பதியில்லையாயின் மண்ணுலகம் வேறெல்லா மிருந்தும் பயனற்றதாகும்;
இப்பதியே மண்ணுலகத்துக்குப் பயன்தருவது என்பதாம். போக நிலங்களாகிய
ஏனை மேல் கீழ் உலகங்கள் போலல்லாது, இந்நிலவுலகமாகிய புவனியானது
உயிர்கள் இங்குவந்து பிறந்து சிவனைப் பூசித்து முத்தியடைதற் கேதுவாகிய
வுலகமாம். "இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறு" (திருப்பள்ளி
யெழுச்சி - 10) என்ற திருவாசக முதலியவை காண்க. அவ்வாறு வந்து
பிறந்து சிவபூசை செய்யும் உயிர்க்கு அந்தப்பூசையின் பயனை உதவும்
சண்டீச நாயனாரைப் பெறும் பேறுடையது இப்பதி; ஈதலின் இதனை
மண்ணின் பயனாம் பதி என்றார்.

     உலகத்துயிர்க்கெல்லா மிதுவேபொருள் என்று சிவபூசை செய்து
வழிகாட்டி முருகக்கடவுள் இப்பதியை நிறுவினர் என்பதனைச் "சேந்தனளித்த"
(1206) என்று முதலிற் கூறி, அச்சிவபூசைப் பயனை அளிக்கும் தன்மையை
இங்குக் கூறி, நகரச் சிறப்பினை "வளத்தின் பெருமை வரம்புடைத்தோ?"
என முடிக்கு மியைபு காண்க.

     பண்ணினுக்குப் பயன் என்பனவாதியாக எல்லா இடத்தும்
நான்கனுருபுகள் விரித்துக்கொள்க.

     போல் - நல் இசை - இன்சுவை - பெருகொளி - அஞ்செழுத்து -
பொழிமழை - சைவம் என்ற ஆறனையும்போல இப்பதி உற்றது என்பதாம்.
பயனாதல்
உவமத்துக்குப் பொதுத்தன்மை. பயன்பற்றி வந்த உவமம்.
அப்பதியாகிய ஒரு உவமேயப் பொருளுக்கு ஆறு உவமானப் பொருள்கள்
தந்தது அப்பொருளின் சிறப்புக் குறித்தற்கு. இது பல பொருளுவமை
என்னும் அணியின் பாற்படும். அன்றியும் பண்ணின் பயன் இசை -
கருத்தின் பயன் அஞ்செழுத்து - வேதப்பயன் சைவம் என்ற உண்மைகளை
வற்புறுத்திப் புகட்டுதலும் ஆசிரியர் கருத்தென்க. இப்புராண முழுமையும்
அறுசீர்க்கழி நெடில் விருத்தமாக யாத்து உரைத்ததும் ஒரு சிறப்புப்
பற்றியதென்க.