1216.
|
மற்றை
மறையோன் றிருமனைவி வாய்ந்த மரபின்
வந்துதித்தாள்;
சுற்றம் விரும்பு மில்வாழ்க்கைத் தொழிலா ளுலகிற்
றுணைப்புதல்வற்
பெற்று விளங்குந் தவஞ்செய்தாள்; பெறும்பே றெல்லைப்
பயன்பெறுவாள்;
பற்றை யெறியும் பற்றுவரச் சார்பா யுள்ள பவித்திரையாம். 11 |
(இ-ள்.)
வெளிப்படை. அந்த மறையவனுடைய திருமனைவியார்,
அவன் மணஞ்செய்தற் கியைந்த மரபில் வந்து பிறந்தவர்; சுற்றந்தழுவுதலை
விரும்புகின்ற தன்மையில் இல்வாழ்க்கை நடத்தும் தொழிலுடையவர்; உலகில்
துணையாக உள்ள புதல்வர்ப்பேற்றைப் பெற்று அதனால் விளங்கும்தவத்தை
முன்செய்தவர்; யாவரும் புதல்வராற் பெறுகின்ற பேறுகளுக்கெல்லாம்
எல்லையாயுள்ள பயனைப் பெறுபவர்; உலகப்பற்றுக்களை யெல்லாம்
அறுத்தற்குக் கருவியாகிய சிவநேயம் (சிவன்பாற் பற்று) வருதற்குச் சார்பான
குணத்தினையுடைய பவித்திரை என்பவர்.
(வி-ரை.)
மற்றை - முன் சொன்ன என்ற சுட்டுப் பொருளில்
வந்தது.
அம்மறையவன் இருமை வினைக்கும் ஒரு வடிவாயினமை போலன்றி
மனைவியார் ஒரு நிலை நின்று சிவனடிப்பற்று வருவதற்குச் சார்பாகவே
உள்ளவர் என்ற பொருள்தந்து வினைமாற்றுப் பொருட்குறிப்பும்பட நின்றது.
திருமனைவி என்ற குறிப்பும் அது.
வாய்த்தல்
- வாய்ப்பு - "இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி"
(திருமுருகு) என்றபடி குடி மரபு முதலிய பிறப்புவகையாலும், குணம் முதலிய
சிறப்பு வகையாலும் ஆவது. இது பெண்ணுக்குப், பிறந்த இடத்துச் சிறப்பு.
சுற்றம்
விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள்
- இல்வாழ்க்கையிற்
சுற்றம் விரும்பிப் பேணுதல் மனையாளது பெருங்கடமையும்
தொழிலுமாமாதலின் அதனை எடுத்துக் கூறினார். இது பெண்ணுக்குப், புகுந்த
இடத்தின் சிறப்பு.
துணைப்புதல்வற்
பெற்று விளங்கும் தவம் உடையாள் -
நல்ல
புதல்வரைப் பெறுதல் இல்லறத்தில் வாழும் மனைவியரின் தவப்பயன்.
"மங்கலமென்ப மனைமாட்சி மற்றத, னன்கல
நன்மக்கட் பேறு" என்பது
திருக்குறள். நன்மக்கட் பேறில்லாதாளை மலடிஎன்றும் இல்வாழ்க்கையின்
பயனையடையாதவள் என்றும் கூறுவர். துணைப்புதல்வன்
- நல்ல புதல்வன்.
தன் பெற்றோர்க்கு இம்மையில் நலம் பெறத் துணை செய்தலோடு தனது
நன்மையால் மறுமையில் அவர்கள் நரகம் புகாமலும் துணைசெய்வான்.
ஆனால் இந்நாயனாராகிய புதல்வனார் தமது பெற்றோர்க்கு இம்மை
மறுமைகளின் நன்மைகளுடன் மேலாகிய வீட்டுலகமும் துணை
செய்தாராதலின் துணைப்புதல்வன் என்றும்,
பெற்று விளங்கும் தவம்
என்றும் கூறினார்.
பெறும் பேறு
எல்லைப் பயன் - உலகில் புதல்வரைப் பெற்றார்
யாவராலும் அடையப்பெறும் எல்லாப் பேறுகளிலும் சிறந்த பயனாக
முடிவில் நிற்கும் பயன்.
தவஞ்
செய்தாள் என்றது இவரைப் புதல்வராகப் பெறுதற்குச்செய்த
முன்னைத்தவங் குறித்தது. பயன் பெறுவாள்
- அவரைப் பெற்றதனால்
இனி அடைய நிற்கும் சிறந்த பயன், ஆதலின் முன்னதனை இறந்தகால
வினைமுற்றாலும், பின்னதனை எதிர்கால வினைமுற்றாலும் கூறினார்.
பற்றை
எறியும் பற்று - "பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்,
பற்றுக பற்று விடற்கு" என்ற திருக்குறள் இங்கு நினைவுகூர்தற்பாலது.
பற்றை என்றதிற் கூறிய பற்று என்றது ஆணவமலத்தை. இது உயிரை
அநாதியே பற்றி நின்று மீட்சியின்றித் துன்புறுத்தலால் இப்பெயர் பெற்றது.
எறிதல் என்றது அதனை வலியிலதாகச் செய்தல். பின்னர்ப் பற்று என்றது
இறைவன்பாற் பற்று சிவனிடத்து வைத்த அன்பு.
|