பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1579

 

     1236. (இ-ள்.) வெளிப்படை. தம்மை அணைந்த பசுக்கள்
முலைப்பாலினை கறவாமல் தாமே பொழியக் கண்டு மகிழ்ந்து, செம்மை
நெறியிலே உற்ற தமது திருமனத்தில் அந்தப்பால் சிவபெருமானுக்குத்
திருமஞ்சனமாகும் குறிப்பினை உணர்ந்தே, எம்மை ஆளுடைய
வள்ளலாராகிய விசாரசருமனார், பொருந்தும்படி நினைந்து, தெளிந்து,
அத் தெளிவினுள்ளே சிவனாரது உண்மையாகிய பூசையை விரும்பும்
வேட்கை விளைந்து எழுந்ததாகவே, 31

     1237. (இ-ள்.) வெளிப்படை. அவ்விடத்து, அர்ச்சனையினது
முன்னாளிற் செய்த தொடர்ச்சி அளவிற் சிறுவர் விளையாட்டாக
உருக்கொண்டு பொங்குகின்ற அன்பினாலே, மண்ணியாற்றின் மணற்றிடரில்,
ஆத்திமரத்தின் அடியில் செங்கண் விடையினையுடையாரது திருமேனியாகிய
சிவலிங்கத்தை மணலினாலே உளதாக்கிச் சிவாலயமும், பெரிய
நீண்ட கோபுரமும், சுற்றாலயமும் வகுத்து அமைத்தனர். 32

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     1236. (வி-ரை.) தம்மை அணைந்த - வள்ளலார், தம்மை அணைந்த
என்று கூட்டித் தொடங்கிக் கொள்க. அணைந்த - கண்டு அருகு சார்ந்து
என்று முன்பாட்டிற் கூறியபடி அணைந்த.

     தாமே - பிறர் எவரும் கறவாமல் தாமே. "கறவா மேபால்
பொழிந்தனவால்" (1235) என்றது காண்க.

     செம்மை நெறி - சிவநெறி - முத்திநெறி - செம்மை நெறியே உறும்
மனம்
- சிவத்தன்மை பெறுதற்காகிய வழியிலே சென்ற மனம். சிவபூசையே
முத்திக்குச் சாதனமாமென்று தெளிந்த மனது. இதுவே செந்நெறி
எனவும்படும்.

     மனதில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்து - செம்மை நெறியே
உறும் மனம் ஆதலின் அதனுள் அருளால் முன்சென்ம வாசனைப்படி ஒரு
குறிப்பு எழுந்ததாக, அதனை உணர்ந்து. செம்மைநெறி உறுதல் குறிப்பு
எழுதற்குக் காரணமாய் நின்றது என்பது குறிக்க அதனை உடம்பொடு
புணர்த்தி ஓதினார். ஏனையோர்க்கு அவ்வாறு குறிப்புத் தோன்றாது
என்பதாம்.

     வள்ளலார் - தம்மை யடைந்தோர் யாவர்க்கும் சிவபூசைப் பயனாகிய,
தாம் பெற்ற, பேரின்பத்தை வரையாது கொடுத்தலின் வள்ளலார் என்றார்.
எம்மையுடைய என்ற கருத்தும் அது; எம்மைத் தமது அடிமையாகக்
கொண்டு ஆள்கின்ற ஆளாகவுடைய,

     எய்த நினைந்து - பொருள்முடிவுபெறப் பொருந்த நினைந்து.
நினைதல்
- சிந்தித்தல் - ஆராய்தல். தெளிதல் - துணிதல்.

     நினைதலாவது - உடையவர்களின் சம்மதமின்றி இது செய்யலாவதோ?
என்றும், வேள்விக்காகும் பொருளைப் பிறிதொன்றிற் பயன்படுத்தலாகுமோ?
என்றும், இவ்வாறு பலவும் எண்ணுதல். தெளிதலாவது உடையவர்
சம்மதமின்றியே பசுக்கள் தாமே பால்பொழி தலானும், இவ்வாறு
செய்யாவிடின் அந்தப் பால் வேள்விக்கும் உதவாது வீணே நிலத்திற்
கழியுமாகலானும், இறைவனைத் திருமஞ்சனமாட்டுதலும் சிவவேள்வியே
யாமாகலானும், பிறவாற்றானும் இதுவே தக்கதென்று துணிதல்.

     அதனில் - அக்குறிப்பினைத் தெளிந்த அதனுள்; தெளிவினுள்ளே.
அதனில் - எழலும் என்று கூட்டுக. தெளிந்தது என வினையாலணையும்
பெயராகக்கொண்டு உரைத்தலுமாம். தெளிந்ததனால் என ஏதுப்பொருள்
கொள்வதுமொன்று.

     செம்மை நெறியே.............குறிப்பு - முன் தொடர்ச்சியினால் செம்மை
நெறி உறும் மனம் பெறும் விதியில்லாத ஏனையோர், பாலினைக் கண்ட
போது, அது தமக்கும் மகார்க்கும் பிறர்க்கும் நல்ல உணவுப்பண்ட மாகும்
என்ற குறிப்பினையே உணர்குவர்.