பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1581

 

சிவாலயமும் கோபுரமும் சுற்றாலயமும் பிறவும் அமைக்கவேண்டுவது
முறை என்றும், இப்படிக்கன்றி முன்னர் ஆலயம் கோபுரம் முதலியவற்றை
அமைத்துக் கொண்டு பின்னர் அதற்குச் சிவலிங்கம் அமைத்தல்
தகுதியன்றென்றும் கருதவைத்த முறை காண்க.

     கோபுரமும் சுற்றாலயமும் வகுத்தமைத்தார் என்றதனால்,
சிவலிங்கம் தாபித்தபின், அதற்குரிய சிவாலயமும் கோபுரமும் முதற்கண்
இன்றியமையாது வேண்டப்படுவனவென்றும், சுற்றாலயம் அவற்றின் பின்னரே
அமைக்கத்தக்கது என்றும் குறித்தபடி.

     சிவலாயம் - சிவலிங்கப் பெருமானுக்குரிய ஆலயம். சுற்றாலயம் -
பரிவார மூர்த்திகளெனப்படும் விநாயகர் முருகர் நந்தி தக்ஷிணாமூர்த்தி
சண்டேசர் வைரவர் சூரிய சந்திரர் முதலிய மூர்த்திகளுக்குரிய இடம். இவை
முதற்சுற்றில் இருக்கத்தக்கன.

     இந்தச் சிவலிங்கமூர்த்தியும் சிவாலயமும் இப்போது திருவாப்பாடி
மூர்த்தியும், திருக்கோயிலுமாக
அமைந்துள்ளன.

     துங்கநீடு என்றது பெருமையால் என்றும் நீடியுள்ள என்று
குறிப்பதாம்.

     ஆத்தியின் கீழ் - இந்த ஆத்திமரம் இப்போது திருவாப்பாடிக்
கோயிலினுள் தென் மேல்பாகத்தில் உள்ளது. இது காட்டாத்தி என்ற
வகையுட்பட்டது. இது போலவே சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள்புரிய
வந்த உத்தராபதியார் திருச்செங்காட்டாங்குடி ஆலயத்தில் "வண்ணமல
ராத்தியின்கீழ்" எழுந்தருளியிருந்த அந்த மரமும் இப்போது தரிசிக்க
உள்ளது. 32

1238.
ஆத்தி மலருஞ் செழுந்தளிரு முதலா வருகு வளர்புறவிற்
பூத்த மலர்க டாந்தெரிந்து புனிதர் சடிலத் திருமுடிமேற்
சாத்த லாகுந் திருப்பள்ளித் தாமம் பலவுந் தரங்கொய்து
கோத்த விலைப்பூங் கூடையினிற் கொணர்ந்து மணந்தங்
                                   கிடவைத்தார். 33

     (இ-ள்.) வெளிப்படை. ஆத்திமலரும, செழுந்தளிரும் முதலாகப்,
பக்கத்தில் வளர்கின்ற (முல்லைச்) புறவினிற் பூத்த மலர்களுள்ளே தாமே
தெரிந்து புனிதராகிய சிவபெருமானுடைய சடையுடைய திருமுடியின்மேல்
சாத்துதற்காகும் திருப்பள்ளித் தாமங்கள் பலவற்றையும் தாம் கொய்து
இலைகளாற் கோத்து வைத்த பூங்கூடையினிற் கொண்டுவந்து வாசனை
(வெளிப் போகாது) தங்கும்படி வைத்தனர்.

     (வி-ரை.) சாத்தலாகும் திருப்பள்ளித்தாமம் பலவும் - இங்கு,
விசாரசருமனார், இறைவனார் பூசைக்கு ஆகம விதிப்படி சாத்தக்கூடிய
னவாக விதிக்கப்பட்ட மலர், தளிர் முதலியவற்றைத் தெரிந்து எடுத்தனர்
என்றும், அவை ஆத்தி முதலிய மலர்களென்றும் செழுந்தளிர்களென்றும்,
அவை அங்கு அருகில் முல்லைப்புறவில் தம்மியல்பால் வளர்ந்து பூத்தன
என்றும் கூறப்பட்டது. ஆத்தி - திருவாத்தி என்று கூறுப.

     அருகு வளர் புறவு - பக்கத்தில் இயல்பாய் வளர்ந்த முல்லைப்புறவு.
"மண்ணிக் கரையின் வளர்புறவின் மாடு" (1232) என்றது பார்க்க. "சேய்ஞலூர்
உள்ளது மருத நிலமேயாயினும், ஆமேய்க்குமிடங்கள் முல்லைப்
பகுதிக்குரியன என்பதும், ஆமேய்த்தல் முல்லைத் திணைக்குரிய பகுதி
என்பதும், அமைவன ஆதலின், இங்கு விசாரசருமனார் மலர்பறித்தது
அருகே வளர்ந்ததும் தாம் ஆக்களை மேய்த்த நிலமும் ஆகிய முல்லைப்
புறவின் சார்பு என்று கொள்க.

     புறவிற் பூத்த மலர்கள் - மனிதரால் வளர்க்கப்படட நந்தனவன
முதலியனவற்றிலன்றி இங்கு நாயனார் எடுத்தவை புறவில் இயற்கையில்
வளர்ந்த மரம் செடிகளிற் பூத்த மலர்களாம். இது புண்ணிய நிலமாகிய
நமது தென்திசைத் தேசத்திற்குரிய பெருமைகளுள் ஒன்று. இதுபற்றியே
"புண்ணியஞ் செய்வார்க்குப்