பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1601

 

     எறிந்தார்- தாள்களை என்ற செயப்படுபொருள் வருவிக்க.

     வீழ்ந்தான் மறையோனும் - எறிந்த செயலோடு இடையீடின்றி
வீழ்ந்த செயலும்
நிகழ்ந்ததாகலின் எறிந்தார் - வீழ்ந்தான் என்று
பயனிலையை முன்வைத்தும், அடுத்துவைத்தும் ஓதினார்; வீழ்ந்ததன் விரைவு
குறித்தது. மறையோனும் - உம்மை இழிவு சிறப்பு. 51

1257.



எறிந்த வதுவே யர்ச்சனையி லிடையூ றகற்றும் படையாக
மறிந்த தாதை யிருதாளுந் துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த விடையூ றகற்றினராய் முன்போ லர்ச்சித் திடப்புகலுஞ்
செறிந்த சடைநீண் முடியாருந் தேவி யோடும் விடையேறி,  52
1258.



பூத கணங்கள் புடைசூழப் புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிக ளெடுத்தேத்த விமல மூர்த்தி திருவுள்ளங்
காதல் கூர வெளிப்படலுங் கண்டு தொழுது மனங்களித்துப்
பாத மலர்கண் மேல்விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார். 53

     1257. (இ-ள்.) வெளிப்படை. எறிந்த அதுவே அருச்சனையில் நேர்ந்த
இடையூற்றினைப் போக்கும் படையாக உதவப், பூசையினைத் தடுத்த
தந்தையின் இரண்டு தாள்களையும் துணித்து வீழ்த்திய மகனார், தமது
பூசனையில் அறிந்த இடையூற்றினைப் போக்கினராய், முன்போல அருச்சிக்கத்
தொடங்கலும், நெருங்கிய நீண்ட சடையினையுடைய சிவபெருமானும்
உமாதேவியாருடன் விடையின்மேல் ஏறி, 52

     1258. (இ-ள்.) வெளிப்படை. பூதகணங்கள் புடைசூழ்ந்து வரவும்
பழைய முனிவர்களும் தேவர்களும் வேதமொழிகளால் தோத்திரித்து வரவும்
விமல மூர்த்தியாகிய சிவபெருமான் தமது திருவுள்ளக் கருணைமிக்கு
வெளிப்பட்டருளலும், பத்திமுதிர்ந்த பாலகனாராகிய விசாரசருமனார்,
கண்டுதொழுது மனமிகக் களிப்படைந்து அவரது பாத தாமரைகளின்மேல்
வீழ்ந்தனர். 53

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     1257. (வி-ரை.) எறிந்த அதுவே....படையாக சிவபூசையில்
இடையூறகற்றும்படை பாசுபதாத்திரமாம். ஆகமங்களில் விதித்த பூசை
உறுப்புக்களுள், 'இடையூற்றை விலக்குதல்' (விக்கினோச்சாடனம்)
என்பதொன்று. அது, உரிய மந்திரம் பாவனை செயல்களால் மேல் - நடு
- கீழ் என்ற மூன்றுலகங்களாலும் நேரும் இடையூறுகளைப் போக்கிப், பின்
பூசையிற் புகுதலாம் என்ப. அவ்விடை யூறுகளாவன இன்னவென்றறியாது
வருபவை. இங்கு நேர்ந்தது இவற்றின் வேறாய்ப், புதிதாய், இன்னதென்
றறியவந்ததொன்று, ஆதலின் அர்ச்சனையில் அறிந்த இடையூறு என்றார்.

     மறிந்த - மறித்தல் - தடுத்தல். மறித்த என்பது எதுகை நோக்கி
மறிந்த எனமெலித்தல் விகாரமாயிற்று. குறித்த செயல் விகாரமாதலின்,
சொல்லும் விகாரமாயிற்று. அவ்விடையூறு மெலிந்தொழியும் என்பதும்
குறிப்பு.

     இருதாளும் துணித்த - ஒருதாளே பாற்குடத்தை இடறவும்
இருதாளும் சிதைத்ததென்னை? எனின், ஊன்றி நின்ற தாளினது
துணைகொண்டே மற்ற ஒரு தாளைத் தூக்கி இடறினானாதலின் குற்றஞ்செய்த
தாளினுக்குத் துணைசெய்த குற்றத்தினுட்பட்டது ஊன்றி நின்ற காலுமாம். எனவே நீதிநூல் விதிப்படி குற்றஞ்செய்தானும் அதற்குத் துணைசெய்தானும்
ஒருங்கே தண்டிக்கப்படுதல் முறையாமென்க.

     முன்போல் அருச்சித்திட - இடையூறகற்றிய வகையால், தாதை
வீழ்ந்த செயல் முதலிய புற நிகழ்ச்சிகள் ஒருசிறிதும் உள்ளத்திற்றாக்காது
இறைவன் பாலதாகவே கொண்ட ஒருமை நினைவால் அருச்சித்திட என்பது.