பக்கம் எண் :


1612 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

துறையில் நல்லதண்ணீரை ஊட்டி, அவற்றுக்கு நேரும் பயங்கள்
வராமற்காத்து நல்ல வழிகளிற் செலுத்தி, நிழலில் அமர்வித்துப் பால்தரும்
வேளையில் தவறாது உடையவர் மனைகள் தோறும் கொண்டு செலுத்தி
வந்தனர். மண்ணியாற்றின் கரையில் வளர்கின்ற முல்லைப் புறவின்
பக்கத்திலும், படுகரின்பக்கத்திலும் சோலைகளைச்சார்ந்தகரைகளின்
பக்கத்திலும் ஆனிரைகளை இவ்வாறுமேய்த்துச், சமிதையும் அரணியும்
கொண்டு, இரவுபடுமுன் விசாரசருமனார் ஊரிற்சேர்ந்த நன்னாள்கள்
பலவாகும். இப்படிக் காப்பாற்றப்பட்ட அதனால் ஆனிரைகளெல்லாம்
அழகுடன் விளங்கிப் பெருகித், தமது மனங்கொண்ட பெருமகிழ்ச்சியினால்
இருபோதும் தூய இனிய பால் மடிபெருகிச் சொரிய முலைகள் சுரந்தன.
ஆனிரைகள் முன்னையினும் அனேகமடங்குகறப்பனவாயின. அதுகண்டு
"இப்பிரமசாரி மேய்த்ததற்பின் ஓமதேனுக்கள் மாண்புடையனவாயின" என்று
மறையோர்கள் எல்லாரும் மனமகிழ்ந்தனர். பசுக்கள் எல்லாவகையாலும்
கொண்ட மகிழ்ச்சி அளவின்றிப் பெருகியதனால் மனையில் உள்ள தமது
கன்றுகளைப் பிரிந்த போதிலும் தம்முடன் வரும் சிறிய மறைக்கன்றாகிய
விசாரசருமரைக்கண்டு அவர் பக்கத்திற் சென்று உருகித், தாய்போலக்
கனைத்து மடிசுரந்து கறவாமே முலைகளினின்றும் பால்பொழிந்தன.
அதனைக்கண்ட விசாரசருமனாரது செம்மை நெறியே செல்லும் மனமானது
அந்தப்பால் சிவபிரானுக்குத் திருமஞ்சனமாகும் குறிப்பினை உணர்ந்தது;
உணரவே, அவர் அதனை மேலும் நினைந்து தெளிந்து, சிவனார்
பூசைசெய்யும் ஆசை மிகப்பெற்றனர்; பெறவே முன் பிறப்பிற் செய்த
அர்ச்சனையின் தொடர்ச்சியே விளையாட்டாக நிகழ்ந்து அன்பு பொங்கியது;
பொங்கவே, அவர் மண்ணியாற்றின் மணற்றிடரில் ஆத்திமரத்தினடியில்
சிபெருமானது திருமேனியாகிய இலிங்கக்குறியினை மணலாற்செய்து
சிவாலயமும் கோபுரமும் சுற்றாலயமும் வகுத்தனர். ஆத்திமலரும்
செழுந்தளிரும் முதலாக அருகில் முல்லைப்புறவில்தேடிச்
சிவனுக்குச்சாத்தலாகும் திருப்பள்ளித் தாமங் கொய்து இலைகோத்த
பூங்கூடையிற் கொணர்ந்து மணந்தங்கிட வைத்தனர். நல்ல நவகும்பங்களைக்
கொண்டு பசுக்கள் மேயும் இடங்களிற் சென்று பாற்பசுக்கள் ஒன்றுக்
கொருகாலாக முலைதீண்டவே அவை கனைத்துப் பால் பொழிந்தன. அந்தப்
பாற்குடங்களைக் கொணர்ந்து வெண்மணலாலயத்தில் தாபித்தனர்.
முன்னை வழியின்வரும் அன்பின்றொடர்பாலே அருச்சித்துப்
பாலின்றிருமஞ்சன மாட்டினர். அவரது அன்பினுள்ளே நிறைந்து அவர்
குறித்த பூரையினை ஆளுடையாரும் அமர்ந்து கொள்கின்றாராயினர்.
இவ்வாறு செய்யும் ஒருமை நினைவு கொண்ட பூசையில் பூசைக்குரிய
உறுப்புக்களான திருவமுது புகை சாந்தம் விளக்கு முதலானவற்றில்
தாம் தேடிக்கொள்ளாதனவற்றை அன்பினாலே நிறைவு செய்துகொண்டு
முறையால் வரும் அந்நெறியிலே அருச்சித்து வணங்கி விசாரசருமனார்
மகிழ்கின்றாராயினர். இவ்வாறு அவரது பூசனைக்குக் குடங்கள் நிறையப்
பால்சொரிந்தும், ஆனினங்கள் பால் குறைவில்லாமல் மறையோர்
மனைகளிலும் முன்பு தரும் வளங்கள் சிறக்க நிகழ்ந்தன.

     இவ்வாறே பல நாளும் பூசையே திருவிளையாட்டாக இயல்பில்
விசாரசருமனார் செய்யும் இதனைக் கண்டும், இதன் திறத்தினை அறியாத
அயல் மற்றொருவன் இதனை அவ்வூர் மறையவர்களுக்கு அறிவித்தான்.
அது கேட்ட சபையிலிருந்த மறையோர் "எம்பசுக்களை இச்சையறிந்து
மேய்ப்பேன் என்று கொண்டு சென்று வஞ்சனையாய் ஒழுகும் மாணவகளின்
பொல்லாங்கினைச் சொல்வதற்கு அவனுடைய தந்தையை அழைமின்"
என்றார்கள். அவ்வாறே அழைக்கப்பட்டு எச்சதத்தனும் வந்தனன். அவனிடம்
மறையோர் தாம்கேட்ட செய்தியைக் கூறினர். அவன்பயந்து "சிறுமாணவகன்
செய்த இதனைச் சிறிதும் நான் முன்பு