|
பவித்திரை
என்பதாம்.
நன்மை செய்யும் இவர்கள்பால், வேதநெறி
விளங்கவும் வேதியர்குலம் பெருகவும், ஏழுலகங்களும் உய்யவும்,
சிவபெருமானது சைவ உண்மை வளரவும், மாதவர்களுடைய வெற்றி
உலகில் விளக்கமுறவும் விசாரசருமனார் என்ற
பெயரால் விளங்குமவர்
வந்து உதயமாயினர்.
அவருக்கு ஐந்து
வயது அணைந்தபோது, முன்னைப் பிறப்பின் அறிவு
தொடர்ந்து வருதலாலே, முகையாய் விரியும் மலரில் மணம் வருவதுபோல்
ஆறங்கமுடனே நிறைந்த வேதங்களுட்பட முன்னே சிவபிரான்
மொழிந்தருளிய ஆகமங்களின் அறிவு அவரது மனத்தினுட் சிறந்து
விளங்கிற்று. அவருக்கு ஏழு வயதாகிய அளவிலே அவருடைய பெற்றோர்கள்
தமது மரபின் வழக்கின்படியே உபநயனம் என்ற சடங்கினையும் செய்வித்துக்
கலைபயிலும் செய்கையினையும் செய்வித்தனர். ஆசிரியர் சொல்வதன்
முன்னே வேதாகமங்களையும் பல கலைகளையும் தம்மனத்துக் கொண்ட
அவரது அறிவின் திரத்தினைக் கண்டு, கற்பிக்கும் மறையோர்கள்
அதிசயித்தார்கள். அளவில்லாத கலைகளின் பொருள்களுக்கெல்லாம்
எல்லையாய் உள்ளது தில்லைத் திருவம்பலத்தில் அருட் கூத்தியற்றும்
திருவடியேயாகும் என்று அந்தச் சிறிய பெருந்தகையார் தெளிந்தனர்;
தெளியவே அதனால் அருட்கூத்தரே நம்மை ஆளுடைய தலைவராவார்
என்ற உண்மை எப்பொழுதும் அவரது சிந்தையில் ஊற்றெடுத்து
வருவதாயிற்று; வரவே அன்பினால் உளதாகும் திருத்தொண்டின் கடமையே
இயல்பாய் எழுகின்ற முயற்சியாய் அவரது கருத்தினுள் அம்முயற்சியிற்
காதல் மேன்மேல் எழுந்தது; அவ்வுறுதிப் பாட்டில் நேர்நின்று உறைத்து
அவர் விளங்கிவருவாராயினர்.
அந்நாள்களில்
ஒருநாள் வேதம் பயிலும் மாணவர் கூட்டத்துடன்
விசாரசருமனார் ஊர் ஆனிரையினுடன் போகும்போது ஈன்றணியதொரு பசு
தன்னை மேய்க்கும் ஆயனைக் கொம்பினால் முட்டப்போயிற்று. அவன்
சிறிதும் கூசாமல் தன்கையிற்கொண்ட கோலினால் அப்பசுவினைப்
புடைக்கப், பசுவின்மேல்வைத்த மிக்க அன்பினால் அவனைக்
கோபித்துமேற்சென்று, விசாரசருமனார் விலக்கினார். எல்லாக் கலைகளும்
வேதங்களும் ஆகமநூல்களும் கூடிய தொகுதியினால் பொருளின்நிலை
நிச்சயித்து உண்மை உணர்ந்துகொண்ட தமது திருவுள்ளத்தாலே பசுக்களின்
பெருமையினை அறிந்துகொண்டவராய், அவர் ஆயனைநோக்கி அருள்
செய்வாராகி, "ஆனினங்கள் எல்லா யோனிபேதங்களிலும் சிறந்தன;
தூயதீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்தப்பெற்றன; தேவர் முனிவர்
கடவுளர் கூட்டங்கள் சூழ்ந்து பிரியாத அங்கமுடையன; அச்சிறப்பினாலே
ஈன்றவன்றே சிவபெருமான் விரும்பியாடுதற்குப் பஞ்சகவ்வியம் தரும்
உரிமையுடையன; மேலும் சிவன் சாத்தும் திருநீற்றினைத்தரும் மூலமாகிய
கோமயம் அவதாரம் செய்யும் இடமாவன; அன்றியும் இவை சிவபிரானும்
உமையம்மையாரும் சேர எழுந்தருளும் விடைத்தேவரின் குலத்தைச்
சேர்ந்தன" என்று இன்னபலவும் நினைந்தனர்; "இத்தகைய பசுக்களைக்
காத்தலே சிறந்த கடன்; இதுவே சிவன் சேவடிகளை வழிபடும் நெறியுமாகும்"
என்று துணிந்தனர்; ஆயனைநோக்கி "நீ ஆன்நிரை மேய்க்குந்தொழிலை
ஒழிக; நானே இனி மேய்ப்பேன்" என்றார். அவனும் அஞ்சி, வணங்கிப்
போய்விட்டான்.
மறையோர்களின்
இசைவும் பெற்றவராய்ப் பசும்பயிருக்கு மழை
வருதல் போல் விசாரசருமனார் ஆனிரை மேய்க்க வந்தனர். கோலும்
கயிறும்கொண்டு, பிரமசரிய வேடங்களுடன் வரும் அவர், பாலும் பயனும்
பெருகவருகின்ற பசுக்களை மேய்க்கின்ற பண்பினாலே மிகவும் புல்உள்ள
இடங்களில் அவை வேண்டுமளவும் உண்ணும்படி உடன்சென்று, புல்மிகும்
காலங்களில் மேய்த்தும் கையாற் பறித்துக் கொடுத்தும் அவற்றின் பசியைப்
போக்கி, இதமாகிய நீர்உண்ணும்
|