|
சாற்றுங்கால்
தவமா மன்றோ? என்க. சொல்லப்புகின் அடியார்
செய்தனவே தவம்; தவம் என்பது வேறில்லை; தவமென்று நூல்களால்
விதிக்கப்படாதனவும் அடிமைத்திற முனைப்பில் உறைத்து நின்று அடியார்
செய்தனராகில் அவையே தவமாம்என்பது. "ஆருலகி லிதனுண்மை
யறிந்துரைக்க விசைந்தெழுவார்" (1205) என்று தொடங்கிக் காட்டிய
கருத்தையே இங்கு அனுபவத்தின் முடித்துக் காட்டிய திறமும் பண்பும்
காண்க.
இவ்வுண்மையை
"அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறம தாகும்,
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும், வரமுடைத் தக்கன் செய்த
மா வேள்வி தீமையாகி, நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே"
(2 -29) என்றும், "அவனிவனாய் நின்றமுறை யேக னாகி யரன்பணியி
னின்றிடவு மசலுங்குற்றஞ்......பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி
விடுமே" (10 - 1) என்று வரும் சிவஞான சித்தியார் திருவாக்குக்கள்
விளக்குவனவாம். 59
குறிப்பு
:- பாராயணஞ் செய்வோர் 1217 - 1221 - 1234 - 1243 -
1250 பாட்டுக்களில் நிறுத்தி வாசிக்கலாம்.
சரிதச்
சுருக்கம் :- பொன்னியாறு எந்நாளும் பொய்யாது பாய்ந்து
செழிப்புத் தரும் சோழநாட்டில், மண்ணியாற்றின்
தென்கரையில்,
முன்னாள் கிரவுஞ்ச மலையையும் தாரகாசுரனையும் சங்கரித்துத் தாம் ஏந்திய
வேலாயுதத்தின் தன்மையை வெளிப்படக் காட்டிப், பின்னாள்
சூரபதுமனாதியோரைச் செயிக்க நின்றவராகிய முருகப் பெருமானாரால்,
நிலைபெறும்படி உளதாக்கப்பட்ட காரணத்தால் சேய்ஞலூர்
என்ற
பேர்பெற்ற ஊர் மறையவர் விளங்கி வாழும் பதியாகும். அதில்வாழும்
மறையவர்கள் வேதவாய்மை ஒழுக்கத்திற் சிறந்தவர்கள். மாணவர்களும்
ஆசானும் கூடிய வேதம் பயிலிடங்கள் அங்கு விளங்குவன.
வேள்விச்சாலைகளும் பல உள்ளன. அந்நகரத்தின் தெருவுகள்
பொழுதுதொறும் பால் மடிசுரந்து செல்லும் பசுக்கூட்டங்களாலும், தாம் கற்ற
வேதப்பகுதிகளைக் கணித்துக்கொண்டும் சமிதை கொண்டும் கூட்டமாகச்
செல்லும் வேதம் பயில் மாணவர் கூட்டங்களாலும், அழகிய நீர்த்தடங்களில்
மூழ்கிச் செல்லும் மறையவர் மகளிர்களாலும் பொலிவுற்று விளங்குவன.
அந்நகரைச்சுற்றிலும் நெல் கமுகு முதலிய பயிர்கள் செழித்துள்ளன.
தாமரைத்தடங்களும் அங்கு நிறைந்து காண உள்ளன. வழிக்கரைகளைக்
காஞ்சிமரங்கள் நிழல் செய்வன.
தில்லையெல்லை
யெல்லாம் பொன்மயமாக்கித் திருப்பணிசெய்த
அபயகுலோத்துங்க அநபாயச் சோழ அரசரின் முந்தையோர்களாகிய சோழ
அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து நகரங்களில் ஒன்றாகியது
அவ்வூர். பண்ணுக்கு இசையும், பாலுக்குச் சுவையும், கண்ணுக்குப் பெருகு
ஒளியும், கருத்துக்குத் திருவைந்தெழுத்தும், விண்ணுக்கு மழையும்,
வேதத்துக்குச் சைவமும் பயனாவனபோல, மண்ணுலகத்துக்குப் பயனாக
விளங்கும் அந்தப் பதியின் பெருமை அளவுபடாததாகும்.
பெருமையுடைய
அந்தப் பதியிலே மறையவர் மரபிலே
இவ்வாழ்க்கையிற் சிறந்த காசிபகோத்திரத்திலே
தலைமைபெற்ற குடியிலே,
அரதனமும் நஞ்சும் ஒருங்கே அளிக்கும் அரவுபோல, நல்வினை
தீவினையிரண்டற்கும் ஒருருவாகிய எச்சதத்தன் என்ற மறையவன் ஒருவன்
உளனானான். அவனுடைய திருமனைவி ஏற்ற நற்குடியிற் பிறந்தவள்;
சுற்றந்தழுவும் சிறப்புடைய இல்வாழ்க்கைத் தொழிலுடையவள்; துணைப்
புதல்வற் பெற்று விளங்கும் தவமுடையவள்; உலகப்பற்றை யெறியும்
இறைவன்பற்று வருதற்குச் சார்பாயுள்ளவள்; அவள் பெயர்
|