பக்கம் எண் :


706 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

தொண்டர்களுடைய சிந்தையினின்று நீங்காதிருக்கும் அந்நிலைபோல
அரனார் நிலைபெற்று வாழ்கின்ற திருவானிலை என்னும் கோயில் பெருகி
நீடுவதாம்.

     (வி-ரை.) மன்னிய சிறப்பு - மேலிரண்டு பாட்டுக்களினும் போந்த
சிறப்புக்களும் திருவிழாக்களும், அந்நாள் அரசர் காவலால் இவை
நிலைபெற்று விளங்கியதால் மன்னிய என்றார்.

     பொன்னியல் புரிசை - புரிசை - கோயிலின் திருமதில். மாமதில்
மஞ்சு சூழும்
என முன்னர் 553-ல் கூறியது நகரத்தின் மதில். கோயிற்றிரு
மதிலின் மேலும், அதன் சிகரங்களின் மேலும், மதில் வாயில்களினும்,
பிறஇடத்தும் பொன்னால் வேலைப்பாடுகள் அமைத்தல் வழக்காதலிற்
பொன்னியல் என்றார். பொன் போன்ற அமைப்பு என்றலுமாம்.
பொன்னாடாகிய தமது நாட்டினும் மிக்குப் பொன்னாலும் பொற்பாலும்
இவை விளங்குதலாற் சுரர்களும் போற்றினார்கள் என்பது குறிப்பு. சுரர்கள்
போற்றுந் தன்மை முன்னரும் குறித்தது (553) காண்க. இனிச், சுரர்களும்
போற்றும் பொற்பாற் சிந்தை நீங்கா என்று கூட்டி, அன்பர் மனத்தில்
இறைவன் நீங்காத நிலையினைக் கண்டு தேவர்கள் போற்றுகின்றார்கள்
என்றும், போற்றும் பொற்பால் வாழ்வது எனக் கூட்டித் தேவர்கள்
போற்றும்படி வாழ்வதாகிய கோயில் என்றும், சூழ்ந்து போற்றும் எனக்கூட்டி
மதிலைச் சுற்றிவந்து போற்றுகின்ற என்றும், உரைத்தலுமாம். சிந்தை நீங்கா
அந்நிலை
- கோயில் என்று கூட்டி அன்பர்கள் எஞ்ஞான்றும்
இக்கோயிலைத் தஞ்சிந்தையில் மறவா தேத்துகின்றார்கள் என்று
உரைத்தலுமாம். "அன்பர்தஞ்சிந்தை சேர்ந்தாய்", "சிந்தையே கோயில்
கொண்டவெம் பெருமான்" என்ற திருவாக்குக்களும் காண்க. புரிசை சூழ்ந்து
- புரிசையாற் சூழப்பட்டு. செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. அந்நிலைபோல் வாழ்வது - என உவம உருபு விரிக்க. முன்னர்த் "திருமனத்
தோங்கும்" (22) என்றதும் காண்க. அன்பர் சிந்தையே அரனுக்குத் திருக்கோயிலினுஞ் சிறந்த இருக்கை என்பார் சிந்தையை உவமான
மாக்கினார். பூசலார் புராணம் காண்க.

     "நாடி நாரண னான்முக னென்றிவர், தேடி யுந்திரிந் துங்காண
வல்லரோ?

     மாட மாளிகை சூழ்தில்லையம்பலத், தாடி பாதமென் னெஞ்சு
ளிருக்கவே"

     - திருக்குறுந்தொகை - கோயில் - (10)

"ஒருவருமீங் கறியாவண்ண மென்னுள்ளத் துள்ளே
 யொளித்து வைத்த, சிறையானை"

- திருத்தாண்டகம் - திருநாகேச்சரம் - (7)


"மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர் மனத்தகத்தே
 யனவரத மன்னினானை"

- திருத்தாண்டகம் - திருமுதுகுன்றம் - (8)

முதலிய திருவாக்குக்களின் பொருளை இங்கு வைத்துக் காண்க.

     அந்நிலை - ஆனிலை - சொல்லணி. அந்நிலை - அகரச்
சுட்டுச் சிறப்புக் குறித்தது. பண்டறி சுட்டுமாம். அந்நிலை - அகரமாகிய
நிலையினை யுடையார் என்பதுமொரு குறிப்பாம். "அகரம் முதலாகி நின்றாய்"
(திருநெல்வாயிலரத்துறை - 7 - நம்பிகள் தேவாரம்), "அகரவுயிர்போ
லறிவாகி யெங்கு, நிகரிலிறை நிற்கு நிறைந்து" (திருவருட் பயன்) முதலிய
பிரமாணங்களும் காண்க. பசுக்களாகிய எங்கட்குப்பதி - தலைவன் நீயே!
என்று பசுபதியாகிய அந்நிலையினை எஞ்ஞான்றும் சிந்தித்திருத்தலே
தொண்டர் நிலையாம்; ஆதலின் தொண்டர்தஞ் சிந்தை நீங்கா என்றார்.
ஆனிலை - பசு -காமதேனு - பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இப்பெய
ரெய்தியதென்ற வரலாறு இத்தல புராணத்திலும், பேரூர்ப் புராணத்திலும்
காண்க. ஆனிலை - திருக்கோயிலின் பெயர். ஆவூர்ப் பசு பதீச்சரம் -
பேரூர்ப்பட்டீச்சரம் - முதலியவையுங் காண்க. ஆளுடைய பிள்ளையாரது
இத்தலத்தேவாரப் பாசுரந்தோறும் "கருவூருளானிலை" என்று அருளியது
காண்க.

     அரனார் - பசுக்களாகிய ஆன்மாக்களின் பாசத்தை அரித்து .
(போக்கி) - ஆட்கொள்ளும் பதி என்ற குறிப்புப் பெற அரனார் என்றார்.