நாளும்
- எப்போதும். "அருணாளுந் தரவிருந்தீர் செய்தவா றழகிது"
(ஏயர் கோன் புரா - 262), "நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பும்" - (தேவா)
என்றவை காண்க.
நல்கும்
நம்பர்தாம் அளக்கில் அன்றி - "அன்புடையாரை அறிவன்
சிவன்", "அழுது காமுற் றரற்றுகின் றாரையும், எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப
ரீசனே", "விடமுண்டவெம் மத்த னாரடி யாரை யறிவரே", என்பனவாதி
திருவாக்குக்கள் காண்க. அளத்தல் - அளவிட்டறிதல்.
மற்று அவர்க்கு -
மற்று - அவ்வவர் எண்ணிய எண்ணங்களின் வேறுபாடு குறித்து நின்றது.
நீளும்
- எஞ்ஞான்றும் எவ்விடத்தும் பொருந்த நீள்கின்ற. தத்தம்
பயன்களைத் தந்து அழியும் பசு புண்ணியங்கள் போலன்றி அழியாது
பெருகும். ஆண்மையும் பெருமையும் தொண்டின்றிறங்கள் என்றபடி. நீளும்
- என்றமையால் இச்சரித நிகழ்ச்சியின் பின்னரும் இவ்விரு நாயன்மார்களும்
பல காலமுந் தத்தம் திருத்தொண்டுகளைச் செய்து வாழ்ந்தமையுங்
குறித்தபடியாம்.
யார்
அளக்க - வல்லார்? வினா ஒருவருமிலர் என்று குறித்தது.
அளக்கவல்லார் என்றது அளந்து இனைத்துஎன்று அறிவால் நிச்சயிக்கும்
வன்மையுடையாராதலை. இப்பாட்டுக் கவிக்கூற்று. மேற்பாட்டிற் சரிதத்தை
நிறைவு செய்த ஆசிரியர், இச்சரிதத்திற் போந்த தொண்டின் நினைப்பரிய
பெருமைகளைச் சிந்தித்துக் கொண்டு அதிற் றாம்பெற்ற அற்புத உணர்ச்சியை
இதனைக் கற்போருக்கும் அழகு பெற ஊட்டுகின்றார். இஃது இச்சரிதத்தால்
ஆசிரியர் கற்பித்த கற்பனையாய் இதன் அருமை பெருமைகளை உணர்த்தி
நின்றது.
தொண்டர்
நீர்மை - அளத்தலன்றி - என்பனவும் பாடங்கள். 56
607.
|
தேனாருந்
தண்பூங் கொன்றைச் செஞ்சடை யவர்பொற்
றாளி
லானாத காதலன்ப ரெறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்று மன்றுளார் நீறு போற்று
மேனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன். 57 |
(இ-ள்.) வெளிப்படை. தேன் நிறைந்த குளிர்ந்த அழகிய
கொன்றைமலரை அணிந்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானது
பொன்னடிகளிலே குறையாத ஆசையுடைய அன்பராகிய எறிபத்த
நாயனாரது திருவடிகளைத் தலைமீது தரித்து, வானுலகங் காவல்பூண்ட
தேவர்கள் போற்றுகின்ற அம்பலவாணருடைய திருநீற்றினைப் போற்றும்
வாழ்வுடைய ஏனாதிநாத நாயனார் செய்த திருத்தொழிலினைச் சொல்லப்
புகுகின்றேன்.
(வி-ரை.)
இச்சரிதத்தை முடித்துக்காட்டி மேல்வரும் சரிதத்துக்குத்
தோற்றுவாய் செய்தவாறு.
தேன்
ஆரும் - தேன் - இனிமை தருவது எனும் குறிப்பு. தேன்
பொருந்துதல் வண்டு மொய்த்தலுக்குக் காரணம். அன்பர்களாகிய வண்டுகள்
மொய்க்கின்ற குறிப்புப் பெற இதனைக் கூறினார். "ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவி" (திருவாசகம் - திருப்பூவல்லி - 21), "இம்மலைப்
பெருந்தேன் சூழ்ந்து" (கண் - புரா - 101) என்ற திருவாக்குக்களின் குறிப்பும்
இங்கு வைத்து காண்க. தேன் - வண்டு என்றலுமாம். தண்
- (இனிமையுடன்)
தண்மையும் தருவது. பிறவி வெயிற்சுட அடையும் உயிர்களுக்குத் தண்மைதந்
தாற்றுவது, "சுழலார் துயர் வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னு
நிழலாவன" என அப்பர் சுவாமிகள் திருவடியினை நிழலாக உருவகித்தது
காண்க. பூ - அழகினைத் தருவது. கொன்றை
- பிரணவ உருவாயது.
சிவகாமியார் செய்துவந்த "பூப்பறித்தலங்கல் சாத்தும்" திருத்தொண்டின்
குறிப்புமாம். செம் - செம்மை சடை - சிவபெருமானுக்குரிய திருவடையாளம்.
|