பக்கம் எண் :


776 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

உயிரோ டுடன்சேரும் சிறப்புப்பற்றி உள்ளுணர்ச்சித் திறமான சிவ
வழிபாட்டின்றொழிலை முன்னர்க்கூறி, அதற்குத் துணையாயின மட்டில்
வேண்டப்பட்டு உடலோடொழியும் உலகநிலைத் தொழிலைப் பின்கூறினார்.
இவ்வாறே திருநீலகண்டர் புராணம் (2 - 3), திருநாளைப்போவார் புராணம்
(12 - 13), திருக்குறிப்புத்தொண்டர் புராணம் (112 - 113) முதலிய பல
இடங்களிலும் கண்டு கொள்க. 3

611.
வாளின் படைபயிற்றி வந்த வளமெல்லா
நாளும் பெருவிருப்பி னண்ணுங் கடப்பாட்டிற்
றாளுந் தடமுடியுங் காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமா னடித்தொண்டர்க் காக்குவார்.  
4

     (இ-ள்.) வெளிப்படை. (அவர்) வாட்படை பயிற்றுவித்து அதனால்
வந்த ஊதியமாகிய வளங்களையெல்லாம் ஒவ்வொருநாளும் மிக்க விருப்பத்
துடன் பொருந்திய கடமை வகையிலே, தமது அடிமுடிகளை அறிய
முடியாதார்களையும் ஆட்கொள்ளும் சிவபெருமானது
அடித்தொண்டர்களுக்காகப் பயன்படுத்துவார்.

     (வி-ரை.) வந்த வளம் எல்லாம் - பயிற்சி செய்வித்தற்கு ஊதியமாக
வந்த எல்லாவகை வளங்களையும், பொன்னும் - நெல்லும் - துணியும்
முதலிய பலவும் அடங்க வளம் எல்லாம் என்றார். அரசர்க்குப் படை
பயிற்றுதலால் அவை மிகுதி பெற வந்தன என்பார் வளம் என்றார்.

     நாளும் - நாளுநாளும். ஒருநாள் ஆக்கினார் - பலநாள்
ஆக்கிச்சலித்தார் என்பதின்றி எந்நாளும்.

     நண்ணும் கடப்பாட்டில் - கடப்பாடு - இதுவே தமது செய்கடன்
என்று கொண்டு. "என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற அப்பர்
சுவாமிகள் திருவாக்கின் கருத்தினை உன்னுக. நண்ணும் - தொண்டர்களது
இன்முகமும் உவகை மொழியும் பொருத்தப்பெறும் என்க. "இன்முகங்
காணுமளவு" குறள் (ஈகை), "தொண்ட ரின்று தாழா தமுதுசெய்யப் பெற்றிங்
கவர்த மலர்ந்தமுக, நன்று காண்பது" (சிறுத்தொண்டர்புராணம் - 57) -
"தொண்ட ரிச்சையி னமுது செய்ய வாதித்துளார்" (4); "அன்ப ரானவ ரளவி
லாருள மகிழவே, நாளுநாளு நிறைந்து வந்து நுகர்ந்த தன்மை" -
இளையான்குடி மாறர் புராணம்
(5); "திருத்தொண்டர், வாய்ப்புறுமென்
சுவையடிசின் மாங்கனியோ டினிதருந்திப், பூப்பயின்மென் குழன்மடவார்
செயலுவந்து போயினார்." - காரைக்காலம்மையார் புராணம் - (21)
முதலியன காண்க. அன்பர் பணியின் வாய்ப்பும் அவர்தம் நல்வரவும்
நண்ணும் என்றலுமாம்.

     வளமெல்லாம் - விருப்பால் - கடப்பாட்டில் - ஆக்குவார் என்று
முடிக்க. இவ்வாறன்றி நண்ணும் கடப்பாட்டில் காணாதார் - என்று கூட்டி
அவனை எவ்வகையால் (அன்பு வகையால்) நண்ணக் கடமைப்பட்டாரோ
அவ்வகையாற் காணாதாராய், வேறு வகையாற் (ஆணவ வகையால்)
காணலுற்றார் என்றுரைப்பது மொன்று. "புக்கணைந்து புரிந்தல ரிட்டிலர்"
என்பது முதலாக இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையினுள் அப்பர்
சுவாமிகள் அருளிய கருத்துக்கள் காண்க. இப்பொருளில் விருப்பால் -
தொண்டர்க்கு - ஆக்குவார் என்று முடிக்க.

     தாளும் தடமுடியும் காணாதார் பிரம விட்டுணுக்கள் அடிமுடி
தேடிய சரிதங் குறித்தது. காணாதார் தம்மையும் - காணாதாராகிய
அவ்விருவரையும். உம்மை இழிவு சிறப்பு. அருள் பெறத்
தகுதியில்லாததிருப்பவும், ஆட்கொள்ளும் பெருமான் என்க. இறைவனது
எண்குணங்களுட் பேரருளுடைமை குறித்தது.

     காணாதார் - இல்வாழ்வான் என்பதுபோலப் படு விகுதி தொக்கதாகக்
கொண்டு, காணப்படாதவராகிய இறைவன் என்று பொருள் கூறி, அவ்விறை