(வி-ரை.)
அதனில் குன்றவர் வாழ்வார் எனமாற்றுக.
குன்றவர்
- குறிஞ்சிநில மக்கள். இவர்கள் கானவர் (662), வேட்டுவர்
(654), குறவர் (664), இறவுளர் (665), வேடவர் (666), மறவர் (656) எனவும்
பெறுவர். இப்பெயர்கள் பலவும் இப்புராணத்தினுள் வழங்கிய இலக்கிய
அமைவுங் காண்க.
கொடுஞ்செவி
ஞமலி - காது வளைந்து தொங்கியிருத்தல் சிறந்தசாதி
வேட்டை நாய்களின் இலக்கணங்களின் ஒன்றென்பர். வேட்டை பயில்வோர்
பலர் தொங்கிய காதுடைய நாய் வகையை வளர்த்தல் கண்கூடு. வேட்டையில்
இவர்களுக்கு நாய்கள் பயன்படும் செய்தி பின்னர் 718 - 725 - 734 முதலிய
பாட்டுக்களிற் காண்க.
வன்
திரள் விளவின் கோட்டு - வரைசூழ்ந்த குறிஞ்சிநிலமாதலின்
விளா மரங்கள் கூட்டமாக அங்கு அப்பதியில் ஓங்கி வளர்ந்திருந்தன
என்பதாம். அவை நாய்களைக் கட்டி வைத்தற்கும், மேற்கொம்புகளில்
வார்வலைகள் தொங்கவிட்டு வைத்தற்கும் உதவுவன. "பார்வை யாத்த
பறைதாள் விளவின்" (பெரும் பாணாற் - 95) என்றதும்
காண்க.
வன்
திரள் விளா - குன்றவர் தமது குறிச்சி வாழ்க்கைக்
குடியிருப்பிடங்களை விளாமரங்கள் சூழ்ந்த சூழலின் அமைத்தனர். அன்றித்,
தம் குடியிருப்பிடங்களைச் சூழ விளாமரங்களை வைத்து வளர்த்தனர்
என்றலுமாம். விளாமரச் சூழலின் காற்று உடற்சுகந் தருவதனோடு அவை
இவர்களது முயற்சியின்றியே இயல்பின் வளர்ந்து பலன் தருவன. அவற்றின்
பழங்கள் சுகந்தரும் உணவாதலும் காண்க. "வேரி விளங்கனிக் கவளங்
கொள்வார் " - (684) என்று பின்னர்க் கூறுதலும் உன்னுக. விளாமரத்தின்
குணம். "காச சுவாசங் கதித்த வரிடுமுதற், பேசரிய தாகமிவை பேசுங்கால் -
வீசு, தபித்தலைச்செய் பித்தந் தரிக்குமோ பூவிற், கபித்த மரமிருக்குங் கால்"
- (கபித்தமரம் - விளாமரம்); விளாம்பழத்தின் குணம் - "எப்போது
மெய்க்கிதமா மீளையிரு மல்கபமும், வெப்பாகுந் தாகமும்போ மெய்ப்பசியா -
மிப்புவியி, லென்றாகி லுங்கனிமே லிச்சைவைத்துத் தின்ன வெண்ணித்,
தின்றால் விளங்கனியைத் தின்" - என்ற பதார்த்தகுண சிந்தாமணிப்
பாட்டுக்களுங் காண்க. விளங்கனியின் ஓடு முதலியவை மருந்தாக உதவுதல்
மருந்து நூல்களுட் காண்க.
வார்
வலை - வாரும் வலையும். 724 - பார்க்க. இவைகள்
வேட்டைக் காடு காவல் செய்து அமைத்து மாக்களை அகப்படுத்த வுதவுவன.
719 - 724 - 736 முதலிய பாட்டுக்களில் வார் வலையை இவ்வேடர்கள்
தொழிற்படுத்திய முறை காண்க. வார் வலை - நீண்ட - பெரிய - வலை
என்பாருமுளர் - அது பொருந்தாமையறிக.
பன்றி
- புலி - கரடி - யானை - குறிஞ்சிநில விலங்குகள்.
பார்வை
- பார்வை மிருகங்கள். வேடர் மிருகங்களைப் பிடித்துப்
பழக்கி வைத்து அவற்றி னுதவிகொண்டு அவற்றினினங்களைப் பற்றுதற்குப்
பயன்படுத்திக் கொள்வார். "மான் காட்டி மான் பிடிப்பதுபோல" என்றதொரு
பழமொழி வழக்கும் இதினின் றெழுந்ததாம். இறைவன், அவ்வுயிர்க்கும்
அவ்வவையாய்த் தோன்றி அருள்புரிவன் என்ற ஞானசாத்திரக் கருத்துங்
காண்க. "பார்வையென மாக்களை முன்பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக்
காணார் புவி" என்பது திருவருட்பயன். பார்வை -
என்றதற்கு மிருகங்களைப்
போலச் செயற்கையாற் செய்யப்பட்ட மிருக உருவங்கள் என்பாருமுளர். அது
பொருந்தாமையறிக. இதுபற்றி 672-ல் உரைத்தவை காண்க. பார்வை உள்ளன
என்று வருவித்து முடித்துக் கொள்க.
பாறை
- கற்பாறை. இவற்றையே குன்றவர் தமது குறிச்சியிலே
முற்றங்களாக்கிக் கொள்வர். ஐவனம் -
மலைநெல். இது குறிஞ்சித்
திணையின் உணா வகைகளில் ஒன்றாம். இந்நிலத்தவர்களின்
உணாவகைகளை உருசிபெறச் சமைத்துக் காட்டிய திறம் 683 - 684
பாட்டுக்களிற் காண்க.
|