பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்837

 

     (இ-ள்.) வெளிப்படை. பெற்றிமையினாலே முன்னைப் பிறப்பிற்
றவஞ்செய்தவனாயினும், (இப்பிறப்பில்) தான் பிறந்த குலத்தின் சார்பினாலே
குற்றங்கள் செய்வதனையே குணமெனக் கொண்டு வாழ்பவன்; உயிர்களுக்குக்
கொடுமையே செய்தலில் மிக்குள்ளவன்; விற்றொழிலில் வலிமை மிக்கவன்;
மிக்க சினமுடைய சிங்கம் போன்றவன்; மற்ற அவனது குறிச்சி வாழ்க்கையில்
மனைவியா யமைந்தவள் தத்தை எனப்படுபவள்.

     (வி-ரை) இதனால் நாகனது குலம், குணம், தொழில், மனநிலை,
ஒழுக்கம், இல்வாழ்க்கை முதலிய பலவுங் கூறப்பட்டன. வரும்பாட்டில்
இவ்வாறே இவனது மனைவி தத்தையின் தன்மைகளைக் கூறுவதும் காண்க.

     பெற்றியால் - பெற்றி - தன்மை. இங்குக் கண்ணப்ப நாயனாரைத்
தன் மகனாராகப் பெறும் தன்மை குறித்தது.

     முன் தவஞ் செய்தானாயினும் - என மாற்றுக. முன் -
முற்பிறப்பிலே. தவம் - நோன்பும் அருளுடைமையுமாம். தவமே ஒருவன்
பெறும் நலங்களுக் கெல்லாம் காரணமா மென்பது. இங்கு இவன் முன் தவஞ்
செய்தா னென்பது அத் தவங்காரணமாக இவன் பெற்ற பெற்றியாகிய
காரியம்பற்றி அனுமானத்தா னறியப் பட்ட தென்பார் பெற்றியால் என்றார்.
"தக்கார் தகவில ரென்ப தவரவ, ரெச்சத்தாற் காணப்படும்" (குறள்) என்ற
உண்மை இப்பிறப்பினளவேயன்றி முற்பிறப்பின் தகுதிக்குஞ் செல்லும்.

     பிறப்பின் சார்பு - முன் தவஞ் செய்து பெற்றி பெற்றான் இப்பிறப்பிற்
கொடுமையும் கொலையுமே செய்யக் காண்டுமே எனின், அது அவனது
இப்பிறப்பின் சார்பினாகியது என்பார் இவ்வாறு குறித்தார். சார்பு - இங்கு
இப்பிறப்பின் வந்த குலச் சார்பு குறித்தது. பிறப்பின் சார்பு என்றது
சுற்றங்களையும், குணமா வாழ்வான் - என்றது அவனது மனச்சார்புகளையும்,
தலைநின்றுள்ளான் என்றது அவனது செயல்களையும் குறித்தன.
ஒருகுலத்திற் பிறந்தும் அப்பிறப்பின் சார்பு பற்றாது திருநாளைப் போவார்
போல ஒழுகும் பெரியாருமுளர். ஆயின் இங்கு நாகன் பெறற்கரிய மகப்பேறு
பெறும் பெற்றிக்குரியவாறு மட்டும் தவம் புரிந்தானே யன்றித் தவஞ் செய்யும்
நற்சார்பில் வருதற்குரிய தவம் ஒன்றும் புரிந்தானலன் என்பதாம்.

     வில் தொழில் விறல் - கொடுமையில் தலைநிற்றலுக்குக் காரணங்
கூறியபடி. வேடர்க்குச் சிறப்பினுரியது இத்தொழிலே. சிலைமறவர்( (696),
சிலைவேடர் (704), வில் விழா (680), சிலைபிடிப்பித்தார்கள் (689),
சிலையாண்மை முற்றக்கற்றனன் (690), நினது சிலைக்கீழ்த்தங்கி (695),
முதலியவை காண்க. சிறுபான்மை பிறபடைத் தொழில்களும் (சுரிகை, 740,
மற்றப் படைகளும் 691) உரியவாயினும் விற்றொழிலே இவர்க்குப்
பெரும்பான்மையு முரித்தாம். விற்றொழிலினும் விறலினும் என உம்மை
விரித்துரைப்பினுமமையும்.

     வெஞ்சின மடங்கல் - மடங்கல் - சிங்கம். இது எப்போதும்
சினமுடையதன்று. உணவின் பொருட்டும் வேறு காரணத்தாலும் பிற
பிராணிகளின்மேற் பாயும் பொழுதே சினமிகும். ஆயின் நாகன் அதனைப்
போன்றானாயினும் எப்போதும் பெருஞ்சினந்தணியாது நிற்பவன் என்பது.
இவனை மடங்கல் போல்வான் என்றதற்கேற்ப மனைவி தத்தையை
அரிப்பிணவு போல்வாள் என்றார். இவ்விருவரையும் இவ்வாறு உயர்த்தி
உவமித்தது ஒப்பற்ற, "கானவர்க்கரிய சிங்கம்" (690) என்னும் திண்ணனாரைப்
பெற நின்றமை நோக்கி என்க.

     குறிச்சி - குறிஞ்சி நிலச்சிற்றூர். சீறூர். (664).

     வாழ்க்கை மனைவியும் - வாழ்க்கைத் துணையாகிய
இல்லக்கிழத்தியும். உம்மை இறந்தது தழுவியது. "அவர்தங்கண் மனைவி
யாரும்" (363) என்