| | யார் மறுத்தது கேட்டு அவர் அறியாமை கண்டு "நகையுட் கொண்டது" (3500) போலவே, ஈண்டு நம்பிகள்பாலும் அவரது, "வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி" (3500) முறுவல்செய்தருளினர். |
| | ஒன்றிய விளையாட்டு - ஒன்றிய அச் சிறுநகையினுட் பொருந்திய; இறைவர் மேற்கொண்ட என்றலுமாம்; "திருவிளையாட்டு" (3500). |
| | உறுதிசெய்து - இசைவுபடுத்தி; "யாம் உனக்கோர் தூதனாகிப்-பரவைபாற் போகின்றோம்" (3483) என்று மேற்கொண்டு சென்ற காரியத்தை நிறைவேற்றி; ஆனால் முன்னர் இறைவர் பரலைபால் தூதனாகிப் போகின்றோம் என்றருளினாரேயன்றிப் புலவி நீக்கி முடிக்கின்றோம் என்றாரிலர்; மேல், அதுபோலன்றி, "இன்னம் அவள்பாற் போய்....இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்" (3510) என்று உறுதி கூறுவதும் காண்க |
| | ஆண்டு கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் - ஆட்கொண்ட நன்மை போலவே உறுதி செய்த அருளும் செய்தீர் என்றபடி; அதனுக்குத்தகவே - அதற்கொத்தபடியே; அன்று ஆண்டு கொண்ட - என்றது திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட் கொண்ட அருட் செயலைக் குறித்தது; அன்று வலிந்து திருவிளையாட்டால் அருளியது போலவே இன்றும் வலிந்து அருள நின்றீர் என்று இந்நிகழ்ச்சியின் உண்மைக் குறிப்புத் தருவதும் காண்க. |
| | இன்று....எழுந்தருளி - நம்பிகள் தாமே தம்மனத்துட்செய்து கொண்ட முடிபு; 3502 - பார்க்க. |
| | எழுந்தருளி - எழுந்தருளிய அதனாலே; எழுந்தருளி - தகவே செய்தீர் - என்று கூட்டுக. |
| | 351 |
| 3506 | அம்மொழி விளம்பு நம்பிக் கையர்தா மருளிச் செய்வார் "நம்மைநீ சொல்ல நாம்போய்ப் பரவைதன் னில்ல நண்ணிக் கொம்மைவெம் முலையி னாட்குன் றிறமெலாங் கூறக் கொள்ளாள் வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவு மறுத்தா" ளென்றார். | |
| | 352 |
| | (இ-ள்) அம்மொழி...அருளிச் செய்வார் - அந்த மாற்றத்தினை விளம்பும் நம்பிகளுக்கு இறைவனார் தாம் அருளிச் செய்வாராய்; நம்மை நீ....கூற - நம்மிடம் நீ வேண்டிக் கொண்டபடியே நாம் சென்று பரவையினுடைய இல்லத்தினைச் சேர்ந்து பணைத் தெழுந்த விருப்பம் தருகின்ற தனங்களையுடைய அவளுக்கு உனது திறங்களை எல்லாம் எடுத்துச் சொல்லவும், கொள்ளால் - ஏற்றுக் கொள்ளாதவளாகி; வெம்மை தான் சொல்லி - விரும்பும் மொழிகளையே சொல்லி; நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் - நாமே வேண்டிக் கொள்ளவும் கேளாது மறுத்து விட்டாள் என்று அருளிச் செய்தார். |
| | (வி-ரை) அம்மொழி - முன்பாட்டிற் கூறியபடி இறைவரது திருவிளையாட்டினை உணராது நம்பிகள் கூறிய நன்றிமொழி. |
| | நம்மை - நம்பால்; உருபு மயக்கம்; சொல்ல - சொன்னபடி; சொன்னதனாலே. |
| | கொம்மை - பணைத்த; திரண்ட; வெம்மை - விருப்பம் விளைக்கின்ற சொற்கள். |
| | கொள்ளாள் - ஏற்றுக் கொள்ளாதவளாகி; முற்றெச்சம்; கொள்ளாள் - சொல்லி - மறுத்தாள் என்று முடிக்க. |