பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்431

  வதற்கே யொருப்படுமின்" (திருவா-யாத்.பத்.5) என்ற திருவாக்கிற்காணும் உறுதிப்பாட்டுடனின்றனர் இங்கு அம்மையார் என்க.
  பின்னும் - மேலும் சொல்வாராகி; பின்னும் - என்ன என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக.
 

398

  3553. (வி-ரை) கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து - கரத்தல் - இச்செய்கை நிகழ்ந்ததனை வெளியிற் புலப்படுத்தாது மறைத்தல்; அழுகையை ஒழிதல் மந்திரமன்றி வேறு சொற்களாலேனும், அந் நிகழ்ச்சியைக் குறிக்கும் பிற குறிப்புக்களாலேனும் பிறரறியாமல் வைத்தல்.
  கணவர்தம் செய்கை - தம் - தாமே செய்துகொண்ட; செய்கை - உயிரினை மாய்த்துக் கொண்டமை.
  காவலர் - சுற்றத்தார் - இக்காவலாளர் - பணியாளர்; நோக்க என வருவித்துக் காவலரை நோக்கி - என்ன என்க; சால அலங்கரித்து - திருமனையினை என்பது இசை எச்சம்; அலங்கரித்தல் - மேற் கூறப்படுவது; இது பெரியோரை வரவேற்கும் நிலையாகிய மரபு. காவலர் கணவனார் என்று கொண்டு, அவரை நம்பி காண அணைவுறும் பொழுது என்றுரைக்கவும் நின்றது; இப்பொருளில், முன்வந்த பரிசனங்களை நோக்கி என்பதை முன்பாட்டினின்றும் வருவிக்க.
  காதலரை நம்பி என்று பாடம் கொண்டு காதலர் - விருப்ப முடையோர் சிலரை என்றுரைத்தார் முன் உரைகாரர், இதன் பொருத்தம் ஆராயத்தக்கது.
  என்ன - என்று ஆணையிட்டு ஏவ; முன் "ஒருவரும் அழுதல் செய்யா தொழிக" என்றது ஒரு கூற்று; இங்கு "நம்பி....போம்" என்றது அதனின் மேம்பாடாகிய மற்றொரு கூற்று; இவ்வேறுபாடு குறிக்க, இதனைப் பின்னும் - என்ன என வேறு பிரித்துக் கூறினமையுடன், வேறு பாட்டினாலும் கூறியருளினார்; "கணவரோடு போவது புரியும்" (3552) என்றது கற்புநிலை; மேல், இங்குக் கூறிய சிவன் அடியவர்களை உபசரிக்கும் நிலை வேறு. இது சிவபுண்ணியமாம். முன்னையது புண்ணியலோகப் பயனும் பின்னையது சிவலோகப் பயனாகிய வீடுபேறும் தரவல்லன; ஆதலின் துறந்து கணவரோடு உடன்போவதற் கொருப்பட்ட அம்மையார், அதனைத் தவிர்த்து உயிர் தாங்கிச் சிவனடியாரை யுபசரித்து வரவேற்றலை விரும்பிச் செய்தனர். இது செயற்கரிய பெருஞ்செயல் என்பது தேற்றம். இவ்வம்மையார் மானக்கஞ்சாற நாயனாரது திருமகளார்; மணநாளன்று தம் கூந்தலை அரிந்து மாவிரதியார் விரும்பியவாறே கொடுக்க நின்ற அதன் மூலம் திருவருள் வெளிப்பாட்டுக்குத் துணைக் காரணமாய் விளங்கினர்; இளம்போதில் இத்தன்மை வாய்ந்த இவர் இங்கும் அவ்வாறே அடியார் பணிசெய்து மேலும் அருள் வெளிப்பாட்டுக்குத் துணைநின்ற தன்மை காண்க, முன்பு அங்கு அடியில் அரிந்த கூந்தல் அருளால் பின்னை அன்றே புனைந்தமலர்க் குழலாய் (901) வளரப்பெற்றது; இங்கும் அவ்வாறே உயிர்நீத்த கணவனார் அன்றே அருளால் உயிர் பெற்றெழுந்து கேளிரேயாகி எழுவதும் பெறநின்றனர்; திருவருளின் பண்புபெற்ற இவ்வம்மையாரின் பெண்மைப் பெருநலம் கண்டு ஒழுகி உய்தி பெறுவாராயின் உலகம் இன்புற்று ஓங்கி உய்திபெறும்.
  தீபம் - கும்பம் - மாலை - மங்கலப் பொருள்கள்; இவற்றால் வாயில் அலங்கரித்துப் பெரியாரை எதிர் கொள்ளுதல் மரபு.
  தீபம்....தூக்கி - திருவாரூரினின்றும் திருப்பெரு மங்கலத்துக்கு நம்பிகள் வந்து சாரும் கால இடையில் இவர்கள் இது செய்யலாயினர் என்க.