பக்கம் எண் :

432திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  சென்றார் - அம்மையாரால் ஏவப்பெற்ற நாவலர்களாகிய நன் மாந்தர் முதலியோர்; இவர்களைச் "செம்மை சேர் சிந்தை மாந்தர்" என்று மேல் வரும்பாட்டிற் சிறப்பித்தல் காண்க.
 

399

3554
செம்மைசேர் சிந்தை மாந்தர் சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி நகைமுக மவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடு மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது முகமலர்ந் திருந்த போது,
 

400

3555
பான்மையர்ச் சனைக ளெல்லாம் பண்பினில் வழாமை யேய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை நம்பியா ரூரர் கொண்"டிங்
கியான்மிக வருந்து கின்றே னேயர்கோ னார்தா முற்ற
ஊனவெஞ் சூலை நீக்கி யுடனிருப் பதனுக்" கென்றார்.
 

401

  3554. (இ-ள்) செம்மைசேர்....போற்ற - செம்மை பொருந்திய சிந்தையினை உடைய மாந்தர்கள் போய் எதிர்கொண்டு வரவேற்றுத் துதித்து வணங்க; நம்மை....நல்கி - நம்மை ஆளுடைய நம்பிகள் அவர்க்கு இன்முகம் அளித்து; மெய்ம்மையாம்....போது - உண்மை ஆகும் விருப்பத்தினோடும் பொருந்தித் திருமனையினுள்ளே புகுந்து மிகுதியாகப் பரப்பிய மலராசனத்தின் மேல் முகமலர்ச்சியுடனே வீற்றிருந்த பொழுது.
 

400

  3555. (இ-ள்) பாண்மை....வழாமை - விதிப்படிக்குரிய அருச்சனைகளையெல்லாம் விதித்த தன்மையில் தவறாதபடி செய்ய; ஏய்ந்த....நம்பியாரூரர் - பொருந்திய நான்கு வேதங்களையும் தொடர்ந்து கொண்ட வாய்மையினையுடைய நம்பியாரூரர்; கொண்டு - அவற்றை ஏற்றுக்கொண்டு; இங்கு....என்றார் - இப்பொழுது ஏயர்கோன் கலிக்காமனாருடைய மிக்க துன்பஞ் செய்யும் வெவ்விய சூலையினை நீக்கி அவருடனே மகிழ்ந்தினிதிருத்தல் நேராததற்கு நான் மிகவும் வருந்துகின்றேன் என்று சொல்லியருளினார்.
 

401

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்த ஒரு முடிபு கொண்டன.
  3554. (வி-ரை) செம்மை சேர் சிந்தை மாந்தர் - முன்பாட்டில் அம்மையாரால் "அலங்கரித்து எதிர்போம்" என்று ஏவப்பெற்ற பரிசனங்கள், சுற்றுத்தார், முதலாயினோர்; செம்மை - செப்பமுடைய நிலை; ஈண்டுச் செம்மையாவது தமது தலைவர் இவ்வாறு உயிர் நீத்ததனால் நேர்ந்த தமது துன்பம் ஒரு சிறிதும் புறந்தோற்றாதவாறு மனையலங்கரித்தலும், தமது சொல் செயல் முகக்குறி முதலியவற்றாலும் பிறர்க்குத் தெரியாதவாறும் தமது தலைவியாராகிய அம்மையார் ஏவலுள் அடங்கி ஒழுகுதல். இனிச், செம்மைசேர் - செம்மை நிலையினை நம்பிகளருளாலும் இறைவரருளாலும் சாரவுள்ள என்ற குறிப்புமாம். நம்பிகளை இந்நிலையில் எதிர்சென்று வரவேற்கும் பேறு பெற்ற செம்மையும் குறித்தது. அடியார்களை வழிபடும் வழிவந்தவர் என்பதும் குறிப்பு.
  போற்ற - வந்தித்து வணங்கி யழைக்க.
  நம்மை ஆளுடைய நம்பி - ஆளுடைய நம்பி என்ற தொடருக்குப் பொருள் குறித்தவாறு; ஈண்டு இவ்வாற்றாற் கூறியது சிவனடிமைப் பண்பிற்பிறழாத நிலையினைத் தம் ஒழுக்கத்தால் உலகுக்கு அறிவுறுத்தி வழிப்படுத்தும் தன்மைகுறித்தற்கு.